என்னை அரசு கொல்லப் பார்கிறது: பத்திரிகையாளர்களிடம் கண்ணீர் விட்டு கதறிய பிரவின் தொகாடியா

0

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவரான பிரவின் தொகாடியா திடீரென மர்மமான முறையில் காணாமல் போனார். பின்னர் அவர் சுயநினைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருந்து உடல் நலம் தெரிய பிரவீன் தொகாடியா தன்னை போலி என்கெளவுண்டர் மூலம் கொலை செய்ய சதி செய்யப்பட்டுள்ளதாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். தான் ராமார் கோவில், பசுவதை, விவசாயிகள் பிரச்சனை, முதலியவற்றின் மீது கருத்து கூறுவதை விரும்பாதவர்கள் போலி என்கெளவுண்டர் மூலம் தன்னை நிரந்தரமாக அமைதி படுத்த முயல்கின்றனர் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் தான் உளவுத்துறையின் முழு நேர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கூறிய தொகாடியா அவர் யாருக்காக கண்காணிக்கப்படுகிறார் என்றும் அவரை யார் கொலை செய்யப்பார்கிரார்கள் என்பதை கூற மருத்துவிட்டார்.

இது குறித்து கருத்து தெரிவித்த தொகாடியா, தன்னை கொலை செய்ய நினைப்பவர்களின் பெயர்களை தான் சரியான நேரம் வரும்போது தெரிவிப்பதாக கூறியுள்ளார். திடீரென்று ஏற்பட்ட தொகாடியாவின் மறைவு, அவரை கைது செய்ய ராஜஸ்தான் காவல்துறை அகமதாபாத் வந்து இறங்கியதும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தன்னை குஜராத் மற்றும் ராஜஸ்தானில் பதிவான பத்தாண்டுகள் பழமைவாய்ந்த வழக்குகளில் சிக்க வைக்க முயற்சிகள் நடைபெறுகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

“நான் காலை வழிபாடு செய்துகொண்டிருக்கையில் என்னை கைது செய்ய ராஜஸ்தான் காவல்துறை வந்துள்ளது என்றும் அவர்கள் என்னை போலி என்கெளவுண்டரில் கொலை செய்துவிடலாம் என்ற செய்தியும் எனக்கு கிடைத்தது. அதனால் நான் ஜெய்பூர் சென்று நேரடியாக காவல்துறையிடம் சரணடைந்து விடலாம் என்று எண்ணினேன். ஆனால் விமான நிலையம் போகும் வழியில் நான் மயக்கமடைந்துவிட்டேன்.” என்று கூறியுள்ளார். தொகாடியாவின் இந்த குற்றச்சாட்டை மறுத்த அகமதாபாத் காவல்துறை அவர் தனது கைதை தவிர்க்க நாடகமாடுகிறார் என்று கூறியுள்ளது.

காவல்துறை இணை ஆணையர் J.K.பட் இது குறித்து தெரிவிக்கையில், விஹச்பி அலுவலகத்தில் இருந்து சென்ற தொகாடியா எங்கெல்லாம், சென்றார் என்ற CCTV பதிவுகள் தங்களுக்கு கிடைதுள்ளது என்றும் அவர் ஆட்டோவில் தாடி வைத்த ஒருவருடன் சென்றது அந்த பதிவில் உள்ளது என்றும் பட் தெரிவித்துள்ளார். மேலும், ஆம்புலன்ஸில் உள்ள மருத்துவ  ஊழியர்களின் கூற்றுப்படி தொகாடியா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் போது சுயநினைவுடனே இருந்தார் என்றும் பட் தெரிவித்துள்ளார்.

தொகாடியா பத்திரிகையாளர்களை சந்தித்தத் பின்னர் அவரை முன்னாள் என்கெளவுண்டர் ஸ்பெசலிஸ்ட் D.G.வன்சாரா, படேல் சமூகத்து தலைவர் ஹார்டிக் படேல் உள்ளிட்ட பலர் சந்தித்துள்ளனர். மேலும் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் ஜெலோத் தொகாடியாவின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.