என்ன சாதித்தது ஐ.எஸ்.?

0

 –   ரியாஸ்

2014 ஜூன் மாத இறுதியில் ஈராக்கின் பெரிய நகரங்களில் ஒன்றான மோசுல் நகரை நவீன ஆயுதங்கள் மற்றும் வாகனங்கள் கொண்ட ஒரு பெரும் படை கைப்பற்றியது. இவர்களை எதிர்கொள்ள முடியாமல் ஈராக் இராணுவம் தடுமாறியது. அமெரிக்கா கொடுத்த பயிற்சி இவ்வளவுதானா என்ற கேள்வி ஒரு புறம் இருந்தாலும் யார் இவர்கள், எங்கிருந்து வந்தார்கள், யாருக்காக சண்டை போடுகிறார்கள் என்ற கேள்விகள் அடுக்கடுக்காக எழுந்தன.

இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் ஈராக் அண்ட் ஷாம் (ஐ.எஸ்.ஐ.எஸ்) என்று தங்களை அறிமுகம் செய்தவர்கள் வெகு விரைவிலேயே இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்) என்று பெயரை மாற்றினார்கள். ஈராக்கில் சண்டை போட்டவர்கள் சிரியாவிலும் அதிபர் பஷர் அல் அஸதிற்கு எதிராக சண்டை போடுகிறார்கள். தொடர்ந்து கிலாஃபத்தை பிரகடனம் செய்த இதன் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி தன்னை கலீஃபா என்றும் அறிவித்தார். எந்த சுல்தானுக்கும் அமீரகத்திற்கும் இயக்கத்திற்கும் இனி அதிகாரம் கிடையாது. எல்லாம் நான்தõன் என்று அறிவித்தார்.

கிலாஃபத், கலீஃபா என்ற பதங்களால் கவரப்பட்டவர்கள் ஐ.எஸ். இயக்கத்தை தங்கள் ஹீரோவாக பார்த்தார்கள். சமூக வலைதளங்களில் அதற்காக வக்காலத்து வாங்கினார்கள், ஆள் சேர்த்தார்கள். இன்னும் சிலர் இவர்களுடன் இணைய சிரியாவிற்கும் ஈராக்கிற்கும் சென்றார்கள். அவர்களில் சிலர் அதே வேகத்தில் திரும்பியது தனி கதை. இதில் எதற்கும் வாய்ப்பில்லாதவர்கள் ஐ.எஸ். டீசர்ட்டை அணிந்து கொண்டார்கள். கறுப்பு கொடியும் கறுப்பு தலைப்பாகையும் இவர்களை வெகுவிரைவாகவே கவர்ந்து விடுகின்றன.

ஈராக் மற்றும் சிரியாவின் கணிசமான பகுதிகள் தற்போது ஐ.எஸ். இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. சன்னி முஸ்லிம்களின் இரட்சகர்களாக தங்களை காட்டிக் கொண்டவர்கள் இந்த ஒரு வருடத்தில் சாதித்தது என்ன? வெறுப்பையும் பீதியையும் விதைக்கும் இவர்களின் சாதனைகள் என்ன?

2003ல் ஈராக் மீது அமெரிக்கா தாக்குதல் தொடுத்த போது அல் காய்தாவின் ஒரு பிரிவாகவே இவர்கள் செயல்பட்டனர். ஆனால், காலப்போக்கில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை தொடர்ந்து இவர்கள் தனி அமைப்பாக செயல்பட தொடங்கினர். பத்து ஆண்டுகளுக்கும் அதிகமாக உலக செய்திகளில் தவறாமல் இடம்பிடித்த அல் காய்தா, ஐ.எஸ்.சின் வருகைக்கு பிறகு காணாமல் போனது. தங்களின் புகழை தக்க வைத்துக் கொள்ள அல் காய்தா பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. சிரியாவில் பஷர் அல் அஸதை எதிர்ப்பதைவிட தங்களின் திறமையை காட்டுவதற்கே இவர்கள் இருவரும் சண்டை போடுவதாக தெரிகிறது.

இவ்வளவு படைகளும் ஆயுதங்களும் ஐ.எஸ்.சிற்கு எங்கிருந்து வந்தன? இதற்கான முழுமையான பதில் கிடைப்பதற்கு இன்னும் சில வருடங்கள் ஆகலாம். ஈராக் முன்னாள் அதிபர் சதாம் ஹூஸைனின் பாத் கட்சியை சேர்ந்த படையினர் இதில் பெருமளவில் உள்ளதாக சில பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர். இவர்களுக்கும் ஐ.எஸ். தலைமைக்கும் கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் அமெரிக்கா மற்றும் ஷிஆக்களின் ஆதிக்கம் ஈராக்கில் நிலைபெற்றுவிடக்கூடாது என்பதற்காக இவர்களுடன் கைகோர்த்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இவை தவிர, சில வெளிநாடுகளில் இருந்தும் இளைஞர்கள் இவர்களுடன் இணைந்து கொள்கின்றனர். ஏதோ மிகப்பெரிய தியாகத்திற்கு தாங்கள் செல்வதாகவே இவர்கள் மனதில் நினைத்து செல்கின்றனர்.

ஆனால், உண்மையில் ஐ.எஸ். அமைப்பினர் செய்வதென்ன? சுருக்கமாக சொல்வதென்றால் சமகாலத்தில் இவர்களைவிட வேறு யாரும் இஸ்லாத்தை இந்த அளவிற்கு களங்கப்படுத்தவில்லை. ஜிஹாது, கலீஃபா, கிலாஃபத் என்ற கவர்ச்சி பதங்களை பயன்படுத்துபவர்கள் நடைமுறையில் இஸ்லாத்திற்கு எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லாத செயல்களை செய்து வருகின்றனர். நகரங்களை பிடித்தவுடன் இவர்கள் செய்த களேபரங்களை எழுதினால் ஏடுகள் தாங்காது. எதிரிகள் என்று தாங்கள் அடையாளப்படுத்தும் யாரையும் ஈவிரக்கமின்றி கொலை செய்தனர்.

அதுவும் சாதாரண கொலைகள் அல்ல. உலகமே அஞ்சி நடுங்கும் வகையில் கொடூர கொலைகள். கைகளையும் கண்களையும் கட்டி அருகில் நின்று சுட்டுக் கொல்வது, கழுத்தை அறுத்து கொலை செய்வது, கடற்கரையில் கொலை செய்து தண்ணீரை செந்நீராக்குவது, உயிருடன் எரிப்பது, இவற்றை வீடியோ பதிவாக்கி அதனை உலகம் முழுவதும் ஒளிபரப்புவது என இவர்களின் கோர முகத்தை கண்ட உலகம் நடுங்கியது. இது போதாதென்று சிறுவர்கள் கையில் கத்தியை கொடுத்து அவர்களையும் கொலை செய்ய வைத்தனர்.

பத்திரிகையாளர்களையும் பொது சேவைகளில் ஈடுபட்டவர்களையும் கூட இவர்கள் விட்டுவைக்கவில்லை. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், ஸெய்திகள், ஷிஆக்கள் என யாரும் இவர்களின் கத்தியில் இருந்து தப்பவில்லை. இஸ்லாத்தை இயக்க பெயராக கொண்டுள்ள இவர்களால் அதிகமாக கொலை செய்யப்பட்டவர்கள் முஸ்லிம்கள்தான் என்பதுதான் கசப்பான உண்மை. போரில் ஈடுபடாத யாரையும் கொலை செய்யாதீர்கள், எதிரிகளே என்றாலும் உடலை சிதைக்காதீர்கள் என்று போதித்த இஸ்லாத்தை பெயராக கொள்வதற்கு இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

கிறிஸ்தவர்கள் மற்றும் ஷிஆக்களின் வழிபாட்டு தலங்களும் இவர்களின் கரங்களில் இருந்து தப்பவில்லை. வெடிகுண்டுகள் வீசி அனைத்தும் தகர்க்கப்பட்டன. இஸ்லாமிய ஆட்சியின் நீண்ட நெடிய வரலாற்றில் மாற்று மதத்தவர்களின் ஒரு வழிபாட்டு ஸ்தலமாவது இடிக்கப்பட்டதுண்டா? கிறிஸ்தவ தேவாலயத்தில் தொழுவதற்கு பாதிரிமார்களே அனுமதி கொடுத்த போதும், “எங்கள் கலீஃபா தொழுத இடம் என்று நாளை முஸ்லிம்கள் இந்த இடத்திற்கு உரிமை கொண்டாடக்கூடாது” என்று கூறி அதனை மறுத்த உமர் (ரலி) அவர்களின் வரலாற்றை இவர்கள் வசதியாக மறந்தது ஏனோ?

வழிபாட்டு தளங்களை விட்டு வைக்காதவர்கள் வரலாற்று சின்னங்களையா மதிப்பார்கள்? கால் வைத்த இடங்களில் எல்லாம் வரலாற்று சின்னங்களை அழித்தார்கள். இதற்கும் இஸ்லாமிய சாயத்தை பூசினார்கள். ஷாமையும் எகிப்தையும் பாரசீகத்தையும் யமனையும் வெற்றி கொண்ட வீரமிகு நம் முன்னோர்கள் எந்த வரலாற்று சின்னத்தின் மீதாவது கைவைத்தார்களா?

ஈராக்கில் இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை சேர்ந்த மூன்று மில்லியன் மக்கள் தப்பியோடி மற்ற இடங்களில் அகதிகளாக வாழ்கின்றனர். இவர்களின் வருகைக்கு பிறகு ஈராக்கில் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. தனது அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதுதான் ஒரு அரசின் தலையாய கடமை. ஆனால், இவர்களுக்கோ இதைப்பற்றியெல்லாம் எந்த கவலையும் இல்லை.

கைவெட்டுவதிலும் மற்றவர்கள் மீது இஸ்லாத்தை திணிப்பதிலும்தான் முழு கவனத்தையும் செலுத்துகிறார்கள். இஸ்லாத்தை யார் மீதும் திணக்கும் உரிமை யாருக்கும் கிடையாது என்ற அடிப்படையை கூட இவர்கள் அறியவில்லை என்பதைதான் இது காட்டுகிறது.

மொத்தத்தில் இஸ்லாத்தை சகிப்புத்தன்மை இல்லாத, கலைøய ஏற்றுக்கொள்ளாத மார்க்கமாக சித்தரிப்பதில் இவர்கள் முழு மூச்சாக இறங்கியுள்ளனர். காத்துக் கொண்டிருந்த ஊடகங்களும் மேற்குலகும் இஸ்லாத்தை கூரிய வார்த்தைகளால் குதறின. ஐ.எஸ். இயக்கத்தினர் அனைத்தையும் இஸ்லாத்தின் பெயரால் செய்வதால் இஸ்லாம் இவர்களின் தாக்குதலுக்கு இலக்கானது. இவர்களின் செயல்களில் இஸ்லாமும் இல்லை. இவர்களின் யெல்பாடுகளால் இஸ்லாத்திற்கு எவ்வித பிரயோஜனமும் இல்லை.

யாருடைய நன்மைக்காக இவர்கள் செயல்படுகிறார்கள்? யாருடைய பின்னணியில் செயல்படுகிறார்கள்? இந்த கேள்விகளுக்கு தெளிவான பதில் இல்லை என்றாலும் இவர்களின் செயல்பõடுகள் இந்த கேள்விகளுக்கு ஓரளவு பதில் அளிக்கின்றன.

சிரியாவில் பஷர் அல் அஸதின் ஆட்சியை எதிர்த்து பல குழுக்கள் போராடி வருகின்றன. அவற்றுள் முக்கியமானது அஹ்ரம் அல் ஷாம் என்ற அமைப்பு. ஆனால், சிரியாவில் ஐ.எஸ். அமைப்பு இவர்களை எதிர்த்துதான் முக்கியமாக சண்டையிட்டு வருகிறது. இதனால் அஸதின் படைகள் சிறிது ஆசுவாசமாக உள்ளனர் என்பதுதான் உண்மை. இது சிரியாவில் மட்டும் நடைபெறும் நிகழ்வல்ல.

மத்திய கிழக்கில் யாரெல்லாம் அக்கிரமங்களை எதிர்த்து போராடுகிறார்களோ அவர்களை எதிர்த்துதான் ஐ.எஸ். சண்டை போடுகிறது. இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் காப்பாற்றுவதற்கே போராடுவதாக கூறுபவர்கள் தற்போதைய முக்கிய போராட்டமான ஃபலஸ்தீன் போராட்டம் குறித்து மௌனிகளாகவே உள்ளனர். தங்கள் மௌனத்தை சமீபத்தில் கலைத்தவர்கள் தாக்குதல்களை நடத்தினார்கள். ஆனால், இவர்கள் தாக்குதல் நடத்தியது ஃபலஸ்தீனின் காஸாவில். அங்குள்ள ஹமாஸ் இயக்கத்திற்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கிலேயே இவர்களின் தாக்குதல் அமைந்தது.

அதன்பின்னர், இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்களை நடத்தினர். ஃபலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே சமாதான உடன்படிக்கை நடைமுறையில் உள்ள நிலையில் இந்த தாக்குதலை நடத்தினார்கள். ஃபஸ்தீனில் தொடர்ந்து போராட்டங்களை நடத்துபவர்கள் அமைதியாக இருக்க இவர்கள் தற்போது களத்தில் இறங்கியது ஏன்? மீண்டும் காஸாவின் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்துவதற்கு ஏதுவாக இந்த தாக்குதலை நடத்தினார்களா என்ற நியாயமான கேள்வி எழுகிறது. ஃபலஸ்தீன போராட்ட இயக்கங்கள், இஸ்ரேல் வரம்புமீறும் போதுதான் தாக்குதல்களை நடத்துவார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

 ஐ.எஸ். இயக்க தலைவர் அபூபக்கர் பக்தாதி  மொஸாத் இயக்கத்தில் பயிற்சி பெற்றவர் என்று அமெரிக்க பாதுகாப்பு நிறுவனத்தில் வேலை பார்த்த எட்வர்ட் ஸ்நோடன் கூறியதை இங்கு மீண்டும் நினைவு கொள்கிறோம்.

ஐ.எஸ். இயக்கத்தை எதிர்கொள்ள சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஜோர்டான் என நாடுகள் ஒவ்வொன்றாக களம் இறங்குகின்றன. இவர்களுக்கு தார்மீக ஆதரவு கொடுக்கிறோம் என்ற பெயரில் அமெரிக்காவும் வான்தாக்குதல்களை நடத்துகிறது. ஈராக்கில் தனது படைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. அங்குள்ள அன்பர் மாகாணத்தில் அமெரிக்காவின் இராணுவ தளம் விரைவில் தொடங்குவதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளன. ஏற்öகனவே குழப்பங்கள் அதிகரித்துள்ள மத்திய கிழக்கில் நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது ஐ.எஸ். அந்த குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க அமெரிக்காவும் தயாராகி விட்டது.

மத்திய கிழக்கில் நிலையாக தங்கியிருக்க அமெரிக்காவிற்கு எதிரிகள் தேவை. எதிரிகள் இல்லை என்றால் அவர்களை உருவாக்கி பின்னர் அவர்களை அழிப்பார்கள். தாங்கள் அமெரிக்காவின் உருவாக்கம்தான் என்பது இந்த உருவாக்கங்களை சேர்ந்தவர்களுக்கு தெரியாமல் கூட இருக்கலாம். தங்களை ஆட்டுவிப்பவர்கள் யார் என்பதை அறியாமல் இவர்கள் கழுத்துகளை அறுத்து கொண்டிருக்கலாம். இந்த மர்ம முடிச்சுகள் அவிழ்வதற்கு இன்னும் பத்து ஆண்டுகள் கூட ஆகலாம். ஆனால், அதற்கு முன் எத்தனை தலைகள் உருளுமோ?

மொத்தத்தில் ஐ.எஸ். அமைப்பின் செயல்பாடுகள் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் எதிரிகளுக்கே அதிகளவில் பயன் அளித்துள்ளது என்பதைதான் இந்த ஒரு வருட நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

(ஜூலை 2015 இதழில் வெளியான கட்டுரை)

Comments are closed.