என்புரட்சி

0

என்புரட்சி

  1. நியூயார்க்கை அலற விட்ட கறுப்பு முஸ்லிம்கள்
  2. ஏப்ரல் 26-ம் தேதி. வெள்ளிக்கிழமை அன்று, ஹார்லெம் 7வது எண் பள்ளிவாசலில் பண்பாட்டு இரவு நிகழ்ச்சியில் முஸ்லிம் கணவன்&-மனைவிமார்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்த பின், அங்கிருந்த சகோதரர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தேன்.

“ப்ரதர் மால்கம்… உங்க வயசு என்ன? எப்ப திருமணம் செய்யப் போறீங்க?”

மூத்த சகோதரி ஒருவர் சிரித்துக் கொண்டே கேட்டார். இந்தக் கேள்விக்குரிய பதிலை அறிந்து கொள்ள உதவி இமாமும், அங்கிருந்த மற்ற இளைஞர்களும் ஆர்வம் காட்டினர். பதில் எதுவும் சொல்லாமல் அவருக்கு புன்னகையை பதிலாகத் தந்தேன். அப்போது எனக்கு வயது 31.

“அவர் எங்க சிஸ்டர் இப்ப மேரேஜ் பண்ணப் போறார்?! எப்ப பார்த்தாலும் ‘பெண்கள்ன்னா கவனமாக இருக்கணும். அவங்கள்ட்ட அதிகம் பேசக் கூடாது..’ இப்படியே எங்கள்ட்ட பிரச்சாரம் பண்றாரு..”

அருகிலிருந்த சகோதரர் தன்னுடைய ஏக்கத்தை, என் மீதான குற்றச்சாட்டு போல வைத்தார்.

“ஆமா, நானும் இதைக் கேள்விப்பட்டேன். பெண்கள் மேல உங்களுக்கு என்ன அவ்வளவு கோபம்? வெறுப்பு?”

அந்தச் சகோதரி இப்போது சற்று முறைத்தவாறே கேட்டார். பெண்கள் பற்றிக் கேட்டவுடன், கடந்த காலத்தில் என் வாழ்க்கையில் வந்து போன பெண்களெல்லாம் நினைவுக்கு வந்தார்கள்.

“அப்டிலாம் இல்ல சிஸ்டர்… ஆண்களை மயக்கி அவர்களை செயல்பட விடாமல் கிடத்தும் தந்திரம் உங்களுக்கு தெரியாததா?”

“அப்படியும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் மறுக்கல.. ஆனா, எல்லா விதத்திலும் ஆண்களுக்கு உறுதுணையாக இருக்கும் பெண்களும் இருக்காங்கல்ல..”

சிரித்துக் கொண்டே, என் தாடையைத் தடவிக் கொண்டு, “ஆமா சிஸ்டர். அப்படியும் இருக்காங்க.. அந்தப் பெண்களில் யாரையாவது ஒருவரை நான் கட்டாயம் திருமணம் செய்து கொள்வேன்..”

பெண்களைப் பற்றிய என் நிலைப்பாட்டால், நான் திருமணம் செய்து கொள்ளாமல் கிறிஸ்தவப் பாதிரியார் போல வாழ்வேன் என்று அவர்கள் நினைத்துக் கொண்டார்கள் போலும். நான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொன்னதும், அந்தக் கூட்டத்தில் இருந்த சகோதர, சகோதரிகள் உற்சாக மிகுதியில் துள்ளிக் குதித்து எனக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

திருமணம் எப்போது எனக் கேட்டு, இளம் மதகுருமார்கள் என்னை கிண்டல் செய்தனர்.

எங்களின் மகிழ்ச்சியை குலைத்துப் போடும் விதமாக, அப்போது அந்தத் தகவல் கிடைத்தது.

எங்களின் உற்சாகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து அந்த இடத்தை பரபரப்பாக்கியது அந்தத் தகவல்.

தெருவில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த கறுப்பர்களை கலைக்கும் போது, ஏற்பட்ட தகராறில் சகோதரர் ஹிண்டன் ஜான்சன் ஙீ என்ற, எங்கள் அமைப்பின் உறுப்பினரை போலீசார் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அங்கு நின்றிருந்த மற்றொரு முஸ்லிம் சகோதரர் இந்தத் தகவலை எங்களுக்கு தொலைபேசியில் தெரிவித்தார்.

“நான் அந்த போலீஸ் ஸ்டேசனுக்கு போறேன். துணைக் கேப்டன் ஜேம்ஸ் நீங்க பின்னாடியே, திக்ஷீuவீts ளியீ மிsறீணீனீ தொண்டர்களோடு ஸ்டேசனுக்கு வந்திடுங்க. நான் சொல்ற வரைக்கும் யாரும் அங்க இருந்து நகர கூடாது. எதுவும் செய்யவும் கூடாது”.

உடனடியாக ஃப்ரூட் ஆஃப் இஸ்லாம் அமைப்பின் தொண்டர்களுடன், ஹார்லெம் பகுதியின் 28வது எண் காவல் நிலையத்திற்குச் சென்றேன். அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலர்கள், என்னை காவல் நிலையத்திற்குள் அனுமதிக்கவில்லை.

செய்தி விரைவாகப் பரவி, ஹார்லெம் 7-ம் எண் பள்ளிவாசலைச் சேர்ந்த, நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் காவல் நிலையம் முன்பு திரண்டனர். நாங்கள் அவசர, அவசரமாக காவல்நிலையம் நோக்கி விரைவதைப் பார்த்து அப்பகுதி கறுப்பர்களிடம் பதற்றம் தொற்றிக் கொண்டது. அங்கிருந்த கடைகளில் வேலை பார்த்த முஸ்லிம் அல்லாத கறுப்பர்களும் எங்களுடன் இணைந்து கொண்டனர்.

எங்களை காவல் நிலையத்திற்குள் அனுமதிக்க மறுத்தனர். ஹிண்டன் ஜான்சன் என்ற நபர் காவல் நிலையத்திற்குள் இல்லை என்று காவலர்கள் சாதித்தனர். நாங்கள் அவர்களுடன் வாக்குவாதம் செய்தும் எங்களை காவல் நிலையத்திற்குள் அனுமதிக்கவில்லை.

123வது வீதியின் முனையில் காவல் நிலையம் அமைந்திருந்தது. காவல் நிலையம் அருகே குறுக்காக 7வது அவென்யூ சென்றது. 123வது வீதியிலும், அந்த வீதியின் குறுக்கே இருந்த 7வது மற்றும் 8வது அவென்யூக்கள் வரையிலும், கறுப்பர்கள் அணிவகுத்து நின்றனர்.

அதிகாலை 2 மணியாகி விட்டது. அந்தப் பகுதியில் காவல் நிலையத்தில் மட்டுமே விளக்கு எரிந்தது. நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்துக் கொண்டிருந்தது போலவே, பதற்றமும் கூடியது. ஏறக்குறைய 4000க்கும் மேற்பட்ட கறுப்பர்கள் சாலையில் அணிவகுத்து நின்றனர்.

ஆம்ஸ்டர்டாம் நியூஸ் பத்திரிகையின் ஆசிரியர் ஜேம்ஸ் ஹிக்ஸ் அப்போது காவல் நிலையத்திற்கு வந்தார். இந்த நிலையைச் சமாளிப்பதற்காக அவரை போலீஸ் அழைத்திருக்கலாம் என ஊகித்தேன். அவர் அப்பகுதி, பொதுமக்கள்-& போலீஸ் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். அவர் கறுப்பர் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

“ஹாய் மால்கம்.. என்ன இந்த நேரத்துல இங்க?” காவல் நிலையத்திற்குள் நுழைவதற்கு முன்பாக என்னைப் பார்த்து விட்ட ஜேம்ஸ் ஹிக்ஸ் என் கைகளைக் குலுக்கினார். நல்ல நண்பர் அவர்.

“எங்க அமைப்பைச் சேர்ந்த ஒருத்தரை போலீஸார் தாக்கியுள்ளனர். அவருக்கு மருத்துவ உதவி தேவைப்படுது.. ஆனால், போலீஸ் அதற்கு சம்மதிக்க மாட்டேங்குறாங்க.. அவரை ஹாஸ்பிடல்ல சேர்க்குற வரைக்கும் இங்க இருந்து நகரப் போறதில்லை சகோ..” ஜேம்ஸ் ஹிக்சுக்கு திட்டவட்டமாகப் பதில் சொன்னேன். அவர் போலீஸிடம் இந்தத் தகவலைத் தெரிவிப்பார் என எனக்குத் தெரியும்.

காவல்நிலையத்திற்கு உள்ளே சென்று விட்டு சிறிது நேரத்தில் திருப்பிய ஹிக்ஸ், “ப்ரோ.. வாங்க இந்தப் பிரச்சனையை பேசித் தீர்த்துக்கலாம். நான் போலீஸோடு பேசுறதுக்கு ஏற்பாடு பண்றேன்.”

“பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்னா, நான் அதற்கு தயார். உங்க வார்த்தைய நம்பி வர்ரேன்.”

மூன்று கட்டடங்களைத் தாண்டி இருந்த அபார்ட்மெண்ட் ஒன்றில், நான்காவது மாடியில் ஆம்ஸ்டர்டாம் பத்திரிகை அலுவலகம் இருந்தது. அங்கு, நியூயார்க் நகர காவல்துறை துணை ஆணையர் வால்டர் ஆர்ம், 28வது எண் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மெக் கோவன், சப் இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஆகியோர் ஏற்கனவே வந்திருந்தனர். இவர்களில் ராபர்ட் ஒரு கறுப்பர். நான் அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்தேன்.

“நான் இங்க இருக்கேன். இன்ஸ்பெக்டர் மெக் கோவன், சப் இன்ஸ்பெக்டர் ராபர்ட் எல்லோரும் இங்க இருக்காங்க.. ஹார்லெம் பகுதியில என்ன சூழ்நிலை வந்தாலும் இந்த நியூயார்க் போலீசுக்கு சமாளிக்கும் திறமை உண்டு. யாருடைய உதவியும் தேவையில்ல..” டெபுடி கமிஷ்னர் வால்டர் ஆர்ம் திமிராகப் பேசினார்.

“பேசுறதுக்கு ஒண்ணும் இல்ல..” கையில் வைத்திருந்த கோர்ட்டை எடுத்து மாட்டிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினேன்.

சாலையில் இன்னும் கூட்டம் கூடியிருந்தது. அவர்களை திக்ஷீuவீt ளியீ மிsறீணீனீ தொண்டர்கள் கட்டுப்படுத்தி வைத்திருந்தனர். நிலைமை கட்டுக்குள்தான் இருந்தது. ஆனால் கட்டுப்படுத்த முடியாமல் இருந்தது.

ஓடி வந்த ஜேம்ஸ் ஹிக்ஸ், “மிஸ்டர் எக்ஸ்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..” என கெஞ்சாத குறையாகக் கூறினார்.

“பிரச்சனைய பேசித் தீர்த்துக்கலாம்னு நீங்க சொன்னதாலதான் நான் இங்க வந்தேன். அவங்களுக்கு நான் தேவையில்ல. அவங்களே பார்த்துக்குவோம்னு சொல்றாங்கல்ல.. பார்த்துக்கட்டும்..”

“இல்ல.. இல்ல.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. வாங்க” மீண்டும் பேச்சுவார்த்தைக்காக காவல்துறை அதிகாரிகள் இருந்த அறைக்குள் நுழைந்தோம்.

“சகோதரர் ஹிக்ஸ் கேட்டுக் கொண்டதற்காகத்தான் திரும்ப வந்திருக்கேன்..ஆஃபிசர் ஆர்ம், நீங்க கொஞ்சம் வாயை மூடிக்குங்க.. உங்களையும் மதிக்கல.. காவல்துறையையும் நான் மதிக்கல..”

“எங்க அமைப்பைச் சேர்ந்த சகோதரர கடுமையா தாக்கி இருக்கீங்க.. அவர நாங்க முதல்ல பார்க்கனும். அவருக்கு மருத்துவ உதவி தேவைன்னா ஹாஸ்பிடல்ல சேர்க்கணும். அவரு நல்லா இருந்தார்னா, நீங்க உங்க இஷ்டப்படி வழக்கை நடத்துங்க..”

நான் தெளிவாக எங்கள் கோரிக்கையை தெரிவித்தேன். “ஓ.கே. வாங்க ஸ்டேஷன்க்கு போகலாம். நீங்க சொன்ன மாதிரி அவருக்கு தேவைன்னா ஹாஸ்பிடல்ல சேர்த்துடலாம். அப்புறம் உங்க ஆளுகளையெல்லாம் போகச் சொல்லிடுவிங்கல்ல..” சப் இன்ஸ்பெக்டர் சற்று தனிந்த குரலில் கேட்டார்.

“இதத்தான் நாங்கள் கேட்டோம்” நான் காவல் நிலையத்துக்கு கிளம்பினேன். பின்னாடியே காவல்துறை அதிகாரிகளும் ஓடி வந்தனர். ஃப்ரூட் ஆஃப் இஸ்லாம் தொண்டர்களும் அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான கறுப்பர்களும் இரவின் குளிரையும் பொருட்படுத்தாமல் அமைதியாக, அதே சமயம் ஆத்திரத்தோடு எங்களை கவனித்தனர்.

காவல் நிலைய வாசலில் நின்ற சார்ஜண்ட் ஒருவர், “யார்ரா.. இந்த முஸ்லிம்கள்? எங்க இருந்து வந்தானுவ? சார் எனக்கு அனுமதி கொடுத்தீங்கன்னா ஒரு நொடி-ல ஏரியாவ கிளியர் பண்ணிடுவேன்..” விரைப்பாக நின்று இன்ஸ்பெக்டரிடம் தனது திமிரை வெளிப்படுத்தினார்.

அந்த சார்ஜண்ட்டை உள்ளே போகச் சொல்லுமாறு சகோதரர் ஹிக்ஸ், இன்ஸ்பெக்டர் மெக்கோவனிடம் கேட்டுக் கொண்டார். அந்த சார்ஜண்ட்டும் ஒரு கறுப்பர்.

சகோதரர் ஹிண்டன் ஜான்சன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டச் சொட்ட உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவரை உடனடியாக ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தேன். அவரை ஆம்புலன்சில் ஏற்றுவதைப் பார்த்த, காவல் நிலையத்திற்கு வெளியே கூடியிருந்த கூட்டம் ஆத்திரத்தில் கத்தியது.

“மால்கம், உங்க தொண்டர்களையும் பொதுமக்களையும் இங்க இருந்து போகச் சொல்லுங்க..”

“எங்க அமைப்பின் தொண்டர்களை நான் பார்த்துக் கொள்கிறேன். பொதுமக்களை கலைந்து செல்லுமாறு நான் உத்தரவிட முடியாது. அவங்களை நீங்கதான் பார்த்துக் கொள்ள வேண்டும்.”

வந்த நோக்கம் நிறைவேறியதால், ஃப்ரூட் ஆஃப் இஸ்லாம் தொண்டர்களைப் பார்த்து கலைந்து செல்லும் தொனியில், கைகளை அசைத்தேன்.

அவர்கள் அமைதியாக கலைந்து செல்லச் செல்ல, அங்கிருந்த கூட்டமும் மெல்லக் கலைந்து மறைந்தது.

ஹார்லெம் நகர கறுப்பர்களைத் தாக்குவதும், அடித்து துவம்சம் செய்வதும் போலீசுக்கு வழக்கமான ஒன்றுதானே! ஆனால், அடி வாங்கிய கறுப்பனை போலீசே மருத்துவமனையில் அனுமதிப்பது இதுதான் முதல் தடவை. இப்படி ஒரு கூட்டத்தை நியூயார்க் நகர போலீஸ் இதுவரை பார்த்திருக்க வாய்ப்பில்லை. அதுவும் கட்டுக்கடங்காமல், போலீசுக்குப் பயப்படாமல் இவ்வளவு நேரம் போலீஸ் நிலையம் முன்பே அணிவகுக்கும் தைரியம் கறுப்பர்களுக்கு எப்படி வந்தது? இதுதான் அங்கிருந்த போலீசாரின் சிந்தனையாக இருந்திருக்கும் என நான் நினைக்கிறேன்.

என் காதுகளில் விழுந்த இந்த வார்த்தைகள் இதைத்தான் உறுதிப்படுத்தின:

“அந்தக் காட்சியை நீங்கள் பார்த்தீர்களா?” நான் கையை அசைத்ததும் தொண்டர்கள் கலைந்து செல்வதைத்தான் அந்தக் காவல்துறை அதிகாரி குறிப்பிட்டார்.

“ஆமாம். நானும் கவனித்தேன்.” சகோதரர் ஜேம்ஸ் ஹிக்ஸ் சொன்ன பதில் என் செவியில் விழுந்தது.

“ஆனாலும் ஒரு தனி மனிதனுக்கு இவ்வளவு அதிகாரம் கூடாது.” காவல்துறை அதிகாரி மனம் வெதும்பினார். மனிதன் என்று அவர் சொன்னது ஒரு கறுப்பனைத்தான்!

நான் விதைத்த புரட்சி விதை, அமெரிக்க மண்ணில் முளை விடத் தொடங்கியது.

தொடரும்

Comments are closed.