என்.ஐ.ஏ.வுக்கு கூடுதல் அதிகாரம்… யாரையும் பயங்கரவாதியாக அறிவிக்கலாம்!

0

என்.ஐ.ஏ.வுக்கு கூடுதல் அதிகாரம்… யாரையும் பயங்கரவாதியாக அறிவிக்கலாம்!

2009ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பிறகு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) காங்கிரஸ் அரசால் அமைக்கப்பட்டது. பயங்கரவாதக் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட இந்த அமைப்பு இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து அவர்கள் வாழ்க்கையை சிதைக்கும் அமைப்பாகவே செயல்பட்டு வருகிறது.

மாநிலங்களில் நடைபெறும் பயங்கரவாதம் தொடர்புடைய வழக்குகளை நேரடியாக விசாரிப்பதாகக் கூறும் என்.ஐ.ஏ., தமிழகத்தில் சோதனை என்கிற பெயரில் அப்பாவி இஸ்லாமியர்களின் வீடுகளுக்குள் புகுந்து பெண்களை ஆபாசமாக பேசி, மிரட்டி அராஜகம் செய்து வருகிறது. அனைவராலும், சாதாரணமாக பயன்படுத்தக்கூடிய செல்போன், லேப்டாப், சிம், மெமரி கார்டுகளையும், கிச்சனில் உள்ள கத்தியை, தேங்காய் உடைப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் அரிவாளை எடுத்துக்கொண்டு முக்கிய ஆவணங்கள், பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் எனக்கூறி செய்தி அறிக்கை வெளியிடுகின்றது.

ஊடகங்களும் ஏதோ பயங்கரவாதிகள் வீட்டில் நடைபெற்ற சோதனை போல் ப்ரேக்கிங் செய்திகளை வெளியிட்டு அப்பாவிகளை தீவிரவாதியாக சித்தரிக்கின்றனர். தொடர்ந்து சோதனை நடத்துகிறார்களே… கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் என்ன? அதில் அபாயகமான தகவல் ஏதேனும் சிக்கியதா? ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தவரை மட்டும் குறிவைத்து என்.ஐ.ஏ. சோதனை நடத்துவதற்கு காரணம் என்ன? என்.ஐ.ஏ. நியாயமாக தான் செயல்படுகிறதா? என்பதை ஆராய்ந்து ஊடகங்கள் செய்தியாக வெளியிட முயற்சிப்பதில்லை. இதனால், பல அப்பாவி இளைஞர்கள் காரணமின்றி ஜாமினில் வெளிவரமுடியாத கருப்புச்சட்டமான UAPAவில் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

ஒரு சமுதாயத்தையே தீவிரவாதிகளாக கட்டமைக்க முயலும் பணியை என்.ஐ.ஏ. கச்சிதமாக செய்து வருகிறது. இந்த அநியாயங்களை இஸ்லாமியர்களின் பாதுகாவலர்கள் எனக்கூறிக்கொள்ளும் திமுக, கம்யூனிஸ்டுகள் போன்ற கட்சிகள், நடுநிலையாளர்கள் கூட தட்டிக்கேட்பதில்லை.

இந்த நிலையில் தான் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக என்.ஐ.ஏ.வுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க முடிவு செய்து இருக்கிறது மத்திய பாஜக அரசு. இதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் கிடைத்துவிட்டதால் இரண்டு மசோதாக்கள் மக்களவைவில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளன.

ஏற்கனவே இஸ்லாமியர் என்ற ஒற்றை காரணத்தை வைத்து பல அப்பாவிகளை NIA கைது செய்து வரும் சூழலில், இப்போது வழங்கப்பட உள்ள கூடுதல் அதிகாரங்கள் மூலம் NIA நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆம், தற்போது உள்ள சட்டப்படி இயக்கங்களை மட்டுமே பயங்கரவாத இயக்கமாக அறிவிக்க முடியும். ஆனால் புதிய மசோதாவின்படி, NIA சாலையில் நடந்து செல்லும் ஒரு அப்பாவியை பயங்கரவாதி என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தால் அவரை பயங்கரவாதி பட்டியலில் சேர்த்துவிடலாம்.

மேலும் மசோதாவில் சைபர் குற்றங்கள் மற்றும் ஆட்கடத்தல் வழக்குகளையும் என்ஐஏ விசாரிக்க அனுமதி அளிக்கப்படும் எனக்கூறப்படுகிறது. இதன் மூலம் சாதாரணமாக பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப்பில் கருத்து சொல்பவரைக் கூட NIA சட்டப்படி பயங்கரவாதியாக அறிவித்து விசாரணை நடத்தலாம். இப்போது வரை சட்டவிரோதமாக NIA செய்துவந்த காரியங்கள் இனி சட்டப்பூர்வமாக செய்யப்படும். ஏற்கனவே சுதந்திர நாடு, மதச்சார்பற்ற நாடு என்ற பெயரை இந்தியா கருத்தியல் ரீதியாக இழந்துவிட்ட நிலையில், தற்போது சட்டப்பூர்வமாக இழந்து வருகிறது என்பதையே இதுபோன்ற சட்டதிருத்த மசோதாக்கள் காட்டுகின்றன.

– இப்னு ஜஹபர்

Comments are closed.