என்.ஐ.ஏ.வுக்கு மிதமிஞ்சிய அதிகாரம்!

0

என்.ஐ.ஏ.வுக்கு மிதமிஞ்சிய அதிகாரம்!

இன அழித்தொழிப்புக்கு முக்கிய ஆயுதமாக பாசிச சக்திகள் உலகம் முழுவதும் “இரத்த சுத்திகரிப்பு” கொள்கையை பயன்படுத்தினர்.யூத ரத்தம் கலந்ததால் ஜெர்மன் மக்கள் அசுத்தமடைந்துவிட்டார்கள் என்ற ஹிட்லரின் தீர்ப்பை சங்பரிவாரம் இந்தியாவில் மறுவரையறைச் செய்து  யூதர்களுக்கு பதிலாக முஸ்லிம்களை சேர்த்துக்கொண்டார்கள். நீதித் துறையையும், சட்டங்களையும், இதர அரசு நிறுவனங்களையும் முஸ்லிம்களை சிறைக்குள் தள்ளவும், நாடு கடத்தவும் பயன்படுத்துகின்றனர். சில தினங்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தேசிய புலனாய்வு ஏஜன்சியின் (என்.ஐ.ஏ) திருத்தச் சட்டம் அதில் ஒன்று மட்டுமே. குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களையும், எதிர் கருத்தாளர்களையும் தீவிரவாதிகளாக முத்திரைக் குத்த மோடி அரசுக்கு இனி வழி எளிதாகும்.

புதிய திருத்தம் தனி நபர்களை தீவிரவாதிகளாக அறிவிப்பதற்கு அரசுக்கு வெளிப்படையான வாய்ப்பை வழங்குகிறது. குற்றம் புரிந்தாலோ அல்லது அதற்கு துணிந்தாலோ குற்றவியல் சட்டங்களின்படி ஒருவர் மீது குற்றம் சாட்டப்படும். அதற்கு முரணாக புதிய திருத்தம் அமைந்துள்ளது. அதன்படி தீவிரவாத செயலில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும், உதவி செய்யாவிட்டாலும் கூட ஒருவரை குற்றவாளியாக்கலாம்.அதன் மூலம் சுதந்திரமான கருத்துக்களை வெளியிடுவதற்கும், கொள்கைகளை பரப்புரை செய்வதற்குமான உரிமைகள் கடுமையாக பாதிப்பிற்கு உள்ளாகும் என்பது நிச்சயம்.

விமர்சகர்களை தொடர்ந்து கண்காணித்து பொய் வழக்கை புனைந்து சமூக ரீதியாக அவர்களை அழிப்பதற்கு தயங்காத அரசுதான் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. தீவிரவாத வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்களை அதே சட்டத்தை பயன்படுத்தி சிறையில் அடைப்பதும், செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்க தலைவர்கள், கலைஞர்கள், ஊடக மற்றும் தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் முதலானவர்கள் மீது பொய் வழக்குகளை புனைவதும் அன்றாட சம்பவங்களாகிவிட்டன. இத்தகையதொரு அரசுக்கு என்.ஐ.ஏ. மற்றும் யு.ஏ.பி.ஏ. சட்டத்திருத்தத்தின் மூலம் மிதமிஞ்சிய அதிகாரத்தை பயன்படுத்தும் வாய்ப்பு மோடி அரசுக்கு கிடைக்கிறது. ஆனால், இந்துத்துவ சக்திகள் மீது குற்றம் சாட்டப்பட்ட தீவிரவாத வழக்குகளில் என்.ஐ.ஏ.வின் அணுகுமுறை ஒருதலைபட்சமானதும், பொதுவான விமர்சனத்திற்குரியதுமாகும்.

என்.ஐ.ஏ. சட்டத்திருத்தத்தை தாக்கல் செய்யும்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்னொரு மிரட்டலையும் விடுத்தார். தேசிய குடியுரிமை பதிவேட்டை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப் போவதாக கூறிய அவர் சட்டவிரோத குடிமக்களை சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் திருப்பி அனுப்புவோம் என்றும் தெரிவித்தார். இவ்வளவு அபாயகரமான அறிவிப்புகளை வெளியிட்ட பிறகும் என்.ஐ.ஏ. சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி இரு அவைகளிலும் பா.ஜ.க.விற்கு ஆதரவாக நின்றது மிகவும் அபாயகரமான அறிகுறிகளை எடுத்துரைக்கிறது. “பெரும்பான்மை மதவாதம் தேசியமாகவும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும்” என்ற ஜவஹர்லால் நேருவின் எச்சரிக்கையை கூட அவர்கள் மறந்துவிட்டனர். முஸ்லிம்களின் பாதுகாவலர் வேடமணிந்த மாநில கட்சிகள் வாக்கெடுப்பை புறக்கணித்து மறைமுக ஆதரவை வழங்கின. இதற்கு காங்கிரஸும், இதர மதச்சார்பற்ற கட்சிகளும் கூறும் பொறுப்பற்ற வாதங்கள் இந்துத்துவ பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை பலவீனப்படுத்தவே உதவும். நாட்டின் பன்முகத்தன்மையையும், மாநிலங்களின் உரிமைகளில் தலையிட்டு கூட்டாட்சி தத்துவத்தையும் சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக மிக வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்துவது அவசியமாகும். இதற்காக புதிய மதச்சார்பற்ற அணி உருவாக வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

Comments are closed.