எறும்புகளிடம் காணப்படும் சமூக பாடங்கள்

0

எறும்புகளிடம் காணப்படும் சமூக பாடங்கள்

இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்தபோது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) “எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கிவிடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)“ என்று கூறிற்று. (அல்குர்ஆன் 27:18)

சுலைமான் நபி (அலை) அவர்கள் தனது சாம்ராஜ்ஜியத்தை பாதுகாப்பதற்கு தேவையான படைகளுடன் ஒரு பள்ளத்தாக்கில் சென்று கொண்டிருந்தார்கள். அப்பொழுது அருகில் ஒரு எறும்பு தனது சமூகத்தாரிடம் நடத்திய ஆச்சரியமான உரையாடலை அல்லாஹ் சுலைமான் நபி (அலை) அவர்களுக்கு கேட்கும்படி செய்தான். அதைத்தான் இந்த வசனத்தில் குறிப்பிடுகிறான்.

இஸ்லாம் ஒரு இயற்கை மார்க்கம் என்று முன்பு குறிப்பிட்டிருந்தோம். இந்த வசனத்தில் அல்லாஹ், மனிதர்களின் சமூக பாதுகாப்பிற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு புரிய வைப்பதற்கு எறும்பின் உரையாடலை சுட்டிக் காட்டுகிறான். அங்கே எறும்புகளின் தலைவர், தனது சமூகத்தாரிடம் தெரிவிக்கும் பாதுகாப்பு குறித்த எச்சரிக்கை மிகுந்த கவனத்திற்குரியது. எதிர்த்து நிற்றலும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் இயற்கையான தோற்றப்பாடுகளே என்று இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது.

நுண்ணிய சிறு உயிரினங்கள் முதல் மனிதன் வரையிலான அனைத்து படைப்புகளிலும் அவற்றின் நிலையான கண்ணியமான வாழ்விற்கும் முன்னேற்றத்திற்கும் தேவையான வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான் என்பதை காணமுடிகிறது. உயிரினங்களிடமிருக்கும் பற்கள், முட்கள், கொம்பு, உதடு ஆகியன அதற்கான அடையாளங்களாகும்.

முந்தைய காலங்களைப் போல அல்லாமல் முஸ்லிம்கள் இன்று கல்வி, பலம், பதவி உள்ளிட்டவைகளில் ஓரளவு மேம்பட்ட நிலையை அடைந்துவிட்டாலும் கூட சமூக ரீதியான பாதுகாப்பு விஷயத்தில் எறும்பைப் போன்ற நுண்ணிய சிறிய உயிரினங்களிடமிருந்து படிக்க வேண்டிய பாடங்கள் உள்ளன.

தங்களுக்கு ஆபத்தை விளைவிப்பதற்காக தொலைவில் இருந்து வரும் எதிரியை குறித்த உளவு தகவல், ஆபத்திற்கான வாய்ப்புகள் குறித்த முன்னெச்சரிக்கை, கட்டளையிடும் ஆற்றல் பெற்ற தலைவர், கட்டுப்படும் தொண்டர்கள், ஒழுங்குடன் கூடிய திசை மாறாத பயணம், தொடர்ச்சியான உழைப்பு, ஆபத்தான சூழலில் பாதுகாப்பாக தங்குவதற்கு பொருத்தமான தங்குமிட வசதி… இவையெல்லாம் ஒரு சிறந்த சமூகத்திற்கு அத்தியாவசியமாக இருக்கவேண்டிய காரணிகளாகும்.

மார்க்கம், உயிர், சொத்து, மானம் ஆகியவற்றை பாதுகாப்பது இஸ்லாத்தின் முக்கிய லட்சியமாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “செல்வம், குடும்பம், ரத்தம், மார்க்கம் ஆகியவற்றிற்காக போர் புரிந்து மரணித்தவர் உயிர் தியாகியாவார்.” (நூல்: அபூதாவூத்)

Comments are closed.