எல்லைப் பாதுகாப்பு படை வீரர் தேஜ் பகதூர் இராணுவத்தில் இருந்து நீக்கம்

0

எல்லைப் பாதுகப்பு பணியில் ஈடுபட்டு வந்த இராணுவ வீரர் தேஜ் பகதூர் யாதவ் இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மோசமான உணவுகள் குறித்தும் அவர்களுக்கு தரப்பட வேண்டிய உணவுப் பொருட்களை வெளி சந்தையில் விற்கும் இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் நடக்கும் ஊழல் குறித்தும் சமூக வலைதத்தில் பதிவு செய்திருந்தார். (பார்க்க செய்திகள்)

இந்நிலையில் இவரது புகாரை தொடர்ந்து அப்படி எதுவும் நடைபெறவில்லை என்று கூறப்பட்டதுடன் அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளும் எல்லைப்பாதுகப்பு படையின் தரப்பில் இருந்து கூறப்பட்டது. தற்போது இது தொடர்பாக மூன்று மாத காலமாக நடைபெற்ற விசாரணையின் முடிவில் இராணுவ வீரர் தேஜ் பகதூர் கூறியது போலியான குற்றச்சாட்டு என்று கூறி அவர் இராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவு ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியானது.

ஓய்வு பெரும் தருணத்தில் இருந்த இவர் இராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டது அவரது இத்தனை வருடகால இராணுவ சேவையை வெகுவாக பாதிக்கும். இவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் முக்கிய காரணமாக கூறப்பட்டது இவர் இராணுவ விதிகளை மீறி சமூக வலைதளத்தில் குறிப்பிட்ட வீடியோவை பதிவேற்றம் செய்தது என்று கூறப்படுகிறது. அந்த வீடியோவில் அவர் தனது உயர் அதிகாரிகள் ஊழலில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். குறிப்பிட்ட இந்த வீடியோ கஷ்மீரின் மிகவும் பதற்றமான எல்லைக் கோட்டின் அருகே எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2017 ஜனவரி மாதம் 31 ஆம் தேதி தேஜ் பகதூரின் ஓய்வு அங்கீகரிக்கப்பட்ட நிலையில் அந்த மாதமே இந்த வீடியோ காட்சியும் வெளியானது. இந்த வீடியோவை தொடந்து பொதுமக்கள் இராணுவ வீரர்களின் நிலை குறித்து கேள்வி எழுப்பவே தேஜ் பகதூர் கைது செய்யப்பட்டு பொதுமக்கள் மற்றும் ஊடக பார்வைக்கு எட்டாத காஷ்மீரின் மற்றொரு படைக்கு அனுப்பப்பட்டார். அதன் பின் அவரை இராணுவத்தில் இருந்து நீக்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை இராணுவ விரைவு நீதிமன்றம் வழங்கியுள்ளது. பொதுவாக இத்தகைய விரைவு நீதிமன்றங்கள் போர்க் காலத்தில் தான் அமைக்கப்படும், சில நேரங்களில் எல்லையின் அருகே உள்ள பிரச்சனைக்குரிய இடங்களில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் இது போன்ற விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது

தேஜ் பகதூர் இராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக அவரது மனைவி ஷர்மிளா சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

Comments are closed.