எழுச்சியுடன் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஒற்றுமை பேரணி

0

பத்திரிக்கை செய்தி

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஒற்றுமை அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் இன்று (30.06.2019) மாலை நெல்லை மேலப்பாளையம் ஜின்னா திடலில் துவங்கி முஸ்லிம் மேல் நிலைப்பள்ளி விளையாட்டுத்திடலில் நிறைவு பெற்றது. பேரணியை மாநில பொதுச்செயலாளர் A. காலித் முகம்மது துவக்கி வைத்தார். நிறைவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு மாநில தலைவர் M. முஹம்மது இஸ்மாயில் தலைமை ஏற்றார் மாநில செயலாளர் A. முகைதீன் அப்துல் காதர் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக PFI தேசிய பொதுச் செயலாளர் மு. முகம்மது அலி ஜின்னா SDPI கட்சியின் மாநில தலைவர் V.M.S. நெல்லை முபாரக் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

PFI தேசிய பொதுச் செயலாளர் மு. முகம்மது அலி ஜின்னா தன்னுடைய உரையில்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒற்றுமை அணிவகுப்பையும் மற்றும் பொதுக்கூட்டத்தையும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஸ்தாபன நாளான பிப்ரவரி 17-ம் தேதி நாடு முழுவதும் நடத்தியது. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஒரு எதிர்மறையான சூழல் ஆளும் வர்க்கத்தினால் ஏற்படுத்தப்பட்டது. அதை சட்டப் போராட்டத்தின் மூலம் வென்றெடுத்து இன்று மிக எழுச்சியோடு ஒற்றுமை அணிவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நமது மாபெரும் ஜனநாயக நாடான இந்தியாவில் ஜனநாயகத்தின் மீதும் பன்முகத் தன்மையின் மீதும் தாக்குதல் நடந்து கொண்டிருக்கின்ற ஒரு ஆபத்தான காலகட்டத்தின் ஊடாக நமது நாடு சென்று கொண்டிருக்கிறது.

மோடிக்கு எதிராக, மத்திய அரசுக்கு எதிராக யார் எது பேசினாலும் அவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள், குறி வைக்கப்படுகிறார்கள். சமீபமாக இதற்கு மிகச்சிறந்த உதாரணம் தான் சஞ்ஜீவ் பட் என்கிற IAS அதிகாரி அரசியல் பழி வாங்குதல் மூலமாக அவர் ஆயுள் கைதி ஆக்கப்பட்டது. சஞ்ஜீவ் பட் மோடிக்கு எதிராக நானாவதி கமிஷன் முன்பாகவும் உச்ச நீதிமன்றத்தில் உண்மையான சாட்சியத்தை அளித்தார் என்பதற்காகவே அவர் பழிவாங்கப்பட்டு இருக்கிறார். இப்படி பல சம்பவங்கள் நமது நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது.

அதே போன்று தான் இன்று பன்முகத்தன்மை வாய்ந்த நம்முடைய தேசத்தில் அவரவர் தங்களின் மதத்தையும் வழிபாட்டையும் நடத்த முடியாத ஒரு சூழல் ஏற்ப்பட்டிருக்கிறது. முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் வெறுக்கப்படுகின்றார்கள், துரத்தப்படுகின்றார்கள் அடித்தும் கொல்லப்படுகின்றார்கள். இது நமது நாட்டில் பல பகுதிகளில் சாதாரணமான ஒரு நிகழ்வாக ஆக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு மனிதனை கொள்வதற்கு ஒரு தொப்பி அல்லது ஒரு தாடி ஒரு ஜிப்பா அல்லது ஒரு முஸ்லிம் என்ற ஒரு அடையாளம் இருந்தால் மட்டும் போதும் வேறு எந்த காரணமும் தேவையில்லை என்ற வெறுப்பும் குரோதமும் விதைக்கப்பட்டிருக்கிறது.
எனவே இதற்கு எதிராக சொந்த நாட்டு குடிமக்களையே சந்தேகத்தின் நிழலில் நிறுத்தி அவர்களை அழிப்பதற்கு அல்லது சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கும் NRC என்கிற செயல்திட்டத்தை BJP யும் RSS ம் தவறாக பயன்படுத்தக் கூடிய நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. எல்லா ஆதாரங்களையும் கொண்டு என் ஆர் சி அலுவலகத்தில் சமர்ப்பித்தாலும் முஸ்லிம் என்ற காரணத்திற்காக அந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது காரணம் கேட்டால் No Reason என்று பதிலளிக்கிறார்கள். அவர்களாகவே 25 லட்சம் மக்கள் முஸ்லிம் இல்லை என்று தீர்மானித்துக் கொண்டு ஒரு பார்மாலிட்டி காக exercise ஐ நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

அதேபோன்று ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முழக்கம் பிஜேபி ஆர்.எஸ்.எஸ். கூடாரங்களிலிருந்து கேட்க முடிகிறது. இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முழக்கம் நம் இந்திய கூட்டாட்சி தத்துவத்தையே அழிவின் பாதையில் கொண்டு சேர்க்கக்கூடிய அபாயகரமான ஒரு திட்டம். மாநில உரிமைகளை மெல்லமெல்ல பறித்து மத்திய அரசின் காலடிகளில் சரணாகதி அடையக்கூடிய ஒரு நிலை தான் இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற செயல் திட்டம். மொத்தத்தில் இந்திய ஜனநாயகத்தின் மீதும் பன்முகத் தன்மையின் மீதும் மக்களுடைய நியாயமான உரிமைகள் மீதும் அவர்களுடைய உயிர்களின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் இந்த நாட்டையும் மக்களையும் அதிகமாக நேசிக்க கூடிய நாம் அமைதியாக கடந்து போவதில் எந்த அர்த்தமும் இல்லை.

நீதிக்காக உரிமைக்காக போராடுவதற்கு நாம் முன் வரவேண்டும். ஆர்எஸ்எஸ் பாசிசம் என்பது வீழ்த்த முடியாத ஒரு சக்தி ஒன்றும் அல்ல. இதைவிட எவ்வளவோ பெரிய சக்திகளை எல்லாம் சரித்திரம் சந்தித்து இருக்கிறது. அவை இங்கு தடம் தெரியாமல் ஆக்கப்பட்டிருக்கிறது. எனவே நீதியின்பால் அக்கறை கொண்ட நாம் உறுதியாக போராடினால் ஒரு மாற்றத்தை கொண்டு வர முடியும். இந்த ஆர்எஸ்எஸ் பாசிசத்தின் அஸ்திவாரமே பொய் என்பது தான். எனவே பொய் என்பது அதன் இயல்பிலேயே பலவீனமானது, அந்தப் பொய் என்பதற்கு இது பொய் என்பது வெளிப்படும் வரையில்தான். உண்மை இயல்பிலேயே வலிமையானது. அது வெளிப்படும் போது பல மடங்கு வலிமையைக் கொடுக்கக்கூடியது.
எனவே விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் வெற்றியா தோல்வியா என்ற விளைவுகளை எல்லாம் இந்த நீதிக்கான போராட்டத்தில் காட்ட வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அப்படி போராடியும் பார்த்ததாக எந்த ஒரு முன் உதாரணம் இல்லை. நீதிக்காக போராடி அவர்களுடைய பார்வையில் தோற்றவர்கள் தான் தீரன் திப்பு சுல்தான், பகத் சிங் இன்று நாம் இங்கு நின்று கொண்டு இருக்கின்ற திருநெல்வேலி கட்டபொம்மன்.

இதுபோன்ற எத்தனையோ உதாரணங்களைக் கூறலாம். அவர்கள் எல்லாம் நீதிக்காக போராடி தோற்றவர்கள் ஆக இருக்கலாம். ஆனால் அவர்கள் தான் இன்றளவும் வாழ்கின்றார்கள். எனவே வெற்றியா தோல்வியா என்பதை பொருட்படுத்தாமல் நாம் எதற்காக வாழ்கின்றோம் எதற்காக சாகின்றோம் என்பதுதான் அர்த்தம் மிகுந்த கேள்வியாகும். எனவே நீதிக்காக போராடினால் வரலாறு உங்களை வாழ்த்தும் இல்லை என்றால் காலங்காலமாக வரலாறு உங்களை பழிக்கும் எனவே நம்முடைய தேசத்தை நம்முடைய மக்களை நம்முடைய உரிமைகளை பாதுகாப்பதற்காக பாசிச கொடுங்கோலர்களை எதிர்த்து போராடுவதற்கு இந்த நாட்டு மக்கள் தயாராக வேண்டும் என்று கூறினார்.

இறுதியில் நெல்லை மாவட்ட தலைவர் J. முகம்மது அலி நன்றியுரை கூறினார். நிகழ்ச்சியில் 5000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Comments are closed.