எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கவர்னர் மாளிகை பேரணி

0

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கவர்னர் மாளிகை பேரணி

மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள மதரீதியிலான குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டி தினந்தோறும் நாட்டின் எல்லா பகுதிகளிலும் மிகுந்த எழுச்சியுடன் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் மதுரை, நெல்லை, கோவை, திருவாரூர்,  ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக ஜனவரி 18ம் தேதி அன்று ‘ஆவணங்களை காட்ட மாட்டோம், அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்’ என்ற முழக்கத்துடன் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் மாபெரும் பேரணி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் நடந்தது.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில், கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியிலிருந்து துவங்கிய பேரணியில், நாட்டை பிளவுப்படுத்தும்  சட்டங்களை இயற்றியுள்ள மத்திய அரசை கண்டித்தும், அந்த நடவடிக்கைகளுக்கு துணைபோகும் தமிழக அரசை கண்டித்தும், தமிழக அரசு இந்த சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கோரியும்  முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பேரணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி, மாநில பொதுச்செயலாளர்கள் அப்துல் ஹமீது, நிஜாம் முகைதீன், அச.உமர் பாரூக், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு, பாப்புலர் ஃப்ரண்ட் மாநில துணைத்தலைவர் முஹம்மது சேக் அன்சாரி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் குணங்குடி ஹனீஃபா,மனிதநேய மக்கள் கட்சியின் அப்துல் ஹமீது, சமூக ஆர்வலர் ஏ.கே.அப்பலோ ஹனிபா, தமிழ்தேச மக்கள் முன்னணியின் செந்தில் ஆகியோர் மத்திய அரசின் மதரீதியான கருப்புச் சட்டத்தை கண்டித்து உரை நிகழ்த்தினர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் உரையாற்றுகையில்; நாடு முழுவதும் மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்கள் தொடரும் நிலையில், என்.ஆர்.சி.யை தற்போது துவங்கும் திட்டம் இல்லை என பிரதமர் மோடி தெரிவிக்கின்றார். தற்போது இல்லாவிட்டாலும் எப்போது வேண்டுமானாலும் என்.ஆர்.சி. துவங்கும் என்பதே அந்த அறிவிப்பின் உள்ளர்த்தம். என்.பி.ஆர்.க்காக முதலில் உங்கள் தகவல்களை நீங்களே கொடுங்கள், எங்களுக்கு எந்த ஆவணங்களும் தேவையில்லை என்று அரசு கூறினாலும், அதன்பிறகு கணக்கெடுப்பாளர்களால் சந்தேகத்திற்குரியவர் என்று குறிக்கப்பட்ட நபர்களின் தகவலை சரிபார்க்க ஆவணங்களை கட்டாயம் அளிக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்படும். ஆவணங்களை திரட்ட முடியாத பூர்வகுடி மக்கள் குடியுரிமை அற்றவர்களாக அறிவிக்கப்படும் அபாயம் உள்ளது. இதன்மூலம் முஸ்லிம்களும் மற்ற விளிம்பு நிலை மக்களும் குடியுரிமையை உறுதி செய்வதில் எவ்வளவு ஆபத்தான சூழலை சந்திக்க நேரும் என்பதே மதச்சார்பற்ற ஜனநாயக அரசியலில் நம்பிக்கை உள்ளவர்கள் வெளிப்படுத்தும் அச்சமாக உள்ளது. இந்த சட்டங்களை திரும்பப் பெரும் வரை எஸ்.டி.பி.ஐ. கட்சி மக்களை திரட்டி தொடர்ச்சியாக போராடும். இந்தியா என்ற பன்முக தேசத்தை காக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி தொடர்ந்து களமாடும்” என தெரிவித்தார். பேரணியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

Comments are closed.