“எஸ்.டி.பி.ஐ.கட்சியை அரசியல் களத்திலும், தேர்தல் களத்திலும் புறக்கணிக்க முடியாது என்ற சூழல் உருவாகும்”

0

எஸ்.டி.பி.. கட்சி மாநில தலைவர் பேட்டி

புதிய விடியல்: முதன் முறையாக  தமிழகத்தில் 30  இடங்களிலும் புதுவையில் மூன்று இடங்களிலும்  தனித்து  களம் காண்கிறீர்கள். இதனை எவ்வாறு எடுத்துக்கொள்ளலாம்?

தெஹ்லான் பாகவி: எஸ்.டி.பி.ஐ. கட்சியைப் பொறுத்தவரை தனித்துப் போட்டியிடுவது என்பது புதிதல்ல. கடந்த சட்டமன்ற தேர்தலில் ஏழு இடங்களில் எங்கள் கட்சி தனித்துப் போட்டியிட்டது. அந்த வகையில், ஐந்து வருடங்கள் கழித்து தமிழகத்தில் 30 இடங்களிலும், புதுச்சேரியில் மூன்று இடங்களிலும் நாங்கள்  தனித்துப் போட்டியிடுகிறோம். தமிழகத்தில் சிறுபான்மையின முஸ்லிம்  சமூகத்தை அதிக பிரதிநிதித்துவம்  கொண்டுள்ள கட்சிக்கு  இது ஒரு வரலாற்று சாதனைதான் என்றுதான் சொல்ல வேண்டும். இஸ்லாமிய கட்சியாக இருந்தாலும் சரி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி 30 இடங்களிலும் தனித்து போட்டியிடுவது என்பது ஒரு சாதனை தான்.

இவ்வளவு பெரிய அரசியல் களத்தில், பணபலமும், ஆதிக்கபலமும் நிறைந்துள்ள இந்த தேர்தலில்  தனித்துப் போட்டியிடுவதற்கு ஒரு தைரியம் வேண்டும். அது எஸ்.டி.பி.ஐ. கட்சியிடம் இருக்கின்றது. பெயரளவுக்கு போட்டியிட வேண்டும் என்பதற்காக போட்டியிடவில்லை. ஒரு மாற்றத்திற்காக, களத்தில் நின்று எதிரணியினருக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை  கட்சிக்கு இருக்கின்றது. இந்தப் போட்டியின் மூலமாக, எதிர்காலத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஆதரவு இல்லாமல் அரசியல் செய்ய முடியாது என்ற சூழலை நாங்கள் உருவாக்குவோம்.

புதிய விடியல்: போட்டி இடக்கூடிய தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

தெஹ்லான் பாகவி: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வலிமை, கட்டமைப்பு  மற்றும் தொண்டர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து தொகுதிகளை  முதலில் தேர்வு செய்தோம் . இன்னும் 30 தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. ஆனால், தேர்தல் களத்தைப் பொறுத்தவரை பொருளாதாரம் மிக முக்கிய தேவையாக இருக்கின்றது. இதை கருத்தில் கொண்டு 30 தொகுதிகள் மாத்திரமே தற்பொழுது தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

 அடுத்து வேட்பாளர் தேர்வைப் பொறுத்தவரை பொதுநலன், கடந்த காலங்களில் மக்களுக்கு  அவர்கள் செய்த சமூகப் பணி மற்றும் அவர் வகித்து வந்த பொறுப்புகளில், அர்ப்பணிப்புடன் செயல்பட்டது போன்றவைகளை வைத்து வேட்பாளர்களை தேர்வு செய்கின்றோம்.

வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பணபலம் மற்றும் அதை போன்ற தகுதியைக் கொண்டு தேர்வு செய்வதில்லை. தொகுதிக்கான செலவுகளை எங்கள் வேட்பாளர்கள் செலவு செய்வதில்லை. செய்யக்கூடாது என்பதுதான் கட்சியின் தீர்மானமாக இருக்கின்றது. கட்சிதான் செலவு செய்யும்.

ஆனால், மற்ற கட்சிகளின் நிலை அப்படியல்ல. சின்ன கட்சிகள் முதல் பெரிய கட்சிகள் வரை பணபலத்தை அடிப்படையாகக் கொண்டே வேட்பாளர்களை தேர்வு செய்கின்றனர். சீட் வாங்குவதற்காக கோடிக்கணக்கில் பணத்தை செலவழிக்கின்றனர்.

ஆனால், எஸ்.டி.பி.ஐ.கட்சியில் அப்படி கிடையாது. வேட்பாளர் செலவு செய்ய ஆரம்பித்தால், அதை சம்பாதிக்கக்கூடிய சூழல்தான் உருவாகும். இதுதான் மற்ற கட்சிகளில் நடந்து கொண்டிருக்கின்றது.

புதிய விடியல்: ஏறத்தாழ ஒரு வருட காலமாக திமுகவுடன் நீங்கள் நெருக்கமாக இருந்தீர்கள்,  தி.மு.க. கூட்டணியில் இருந்து  வெளியேறியதற்கான காரணங்கள் என்ன?

தெஹ்லான் பாகவி: எஸ்.டி.பி.ஐ. கட்சியைப் பொறுத்தவரை எம்.எல்.ஏ.வாகி விட வேண்டும், எம்.பி.யாகி விட வேண்டும் என்பது மட்டும் நோக்கமல்ல. எஸ்.டி.பி.ஐ. கட்சி லட்சக்கணக்கான தொண்டர்களை கொண்ட கட்டுப்கோப்பான கட்சியாகும். அந்த வகையில் ஒரு போதும் தொண்டர்களின் கண்ணியத்தை அடகு வைக்க மாட்டோம். தி.மு.க. கட்சியைப் பொறுத்தவரை கூட்டணி பேச்சுவார்த்தையில் எங்களுக்குண்டான உரிய மரியாதையையும், பிரதிநிதித்துவத்தையும் தர முன்வராததால் நாங்கள் கூட்டணியில் இருந்து விலகினோம். ஒரு சீட் தருகிறோம் என்ற நிலையிலும் கூட்டணியிலிருந்து வெளியேறி தனியாக நிற்பது என முடிவு செய்தோம்.

புதிய விடியல்: இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக கூறப்படும் மக்கள்  நலக்கூட்டணியில் ஏன் இணையவில்லை ?

தெஹ்லான் பாகவி: தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு, மக்கள் நலக்கூட்டணி பற்றியும் நாங்கள் ஆய்வு செய்தோம். மக்கள் நலக்கூட்டணியில், மக்கள் நலன் இல்லை என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம். அங்கிருக்கக்கூடிய கட்சிகளும் தலைவர்களும் சுயநல அரசியலை கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள் என்பதும் எங்களுக்கு புலப்பட்டது. குறிப்பாக, அங்கிருக்கக்கூடிய வைகோ போன்றவர்களின் அணுகுமுறைகளால்  கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகளே மிக நெருக்கடியோடுதான் பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதை தேர்தல் முடிந்த பிறகு நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

அதிலும், குறிப்பாக மக்கள் நலக்கூட்டணியில் இருப்பவர்கள் ஒரு நிர்ப்பந்தத்திற்காகத்தான்  அணி சேர்ந்திருக்கிறார்களே தவிர, மக்கள் நலன் சார்ந்து அல்ல .

 புதிய விடியல்: சிறுபான்மை மற்றும் தலித் கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திப்பதற்கான சாத்தியங்களே இல்லையா ?

தெஹ்லான் பாகவி: தலித், முஸ்லிம் அரசியல் ஒற்றுமை என்பது பெரிய எதிர்பார்ப்பாகவே இருக்கின்றது என்பது உண்மைதான். வெறும் தலித், முஸ்லிம் அரசியல் ஒற்றுமையினால் மட்டுமே சமூக மாற்றம் ஏற்படும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அதோடு, ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் ஆதரவும் இருந்திட வேண்டும். அப்பொழுதுதான் அந்தக் கூட்டணியால் வெற்றியடைய முடியும் என்று நான் கருதுகின்றேன்.

பெரும்பான்மை இஸ்லாமிய அரசியல் கட்சிகள், தலித் அரசியல் கட்சிகளின்  தலைவர்களிடமும் ஒருவித சுயநலம் இருப்பதையே நம்மால் பார்க்க முடிகின்றது. ஒரு தூரநோக்கு சிந்தனை இல்லை. இந்தத் தேர்தலில் கூட இஸ்லாமிய அரசியல் கட்சிகள் ஒரே கூட்டணியில் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிறையவே முயற்சி செய்தது. ஆனால், நம்மிடம் இருக்கக்கூடிய சமூக நலன், முஸ்லிம் அரசியல் என்ற சிந்தனை, மற்ற முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர்களிடம் இல்லை என்பதை நம்மால் பார்க்க முடிந்தது. சுயநலன் மேலோங்கி இருப்பதையே அந்தத் தலைவர்களின் செயல்பாடுகள் நமக்கு உணர்த்தியது. தலித், முஸ்லிம் அரசியல் ஒற்றுமைக்கு தடைக்கல் தலைவர்களின் சுயநலமே என்பதை நான் இங்கு தெளிவுபடுத்திக் கொள்கின்றேன்.

 புதிய விடியல்: வளர்ந்து வரக்கூடிய அரசியல் கட்சியின் தலைவராக இருக்கின்றீர்கள். ஏன் நீங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை?

தெஹ்லான் பாகவி: வளர்ந்து வரக்கூடிய அரசியல் கட்சியாக எஸ்.டி.பி.ஐ. கட்சி இருந்தாலும், , கட்சியின் மேம்பாட்டிலும் பொருளாதாரத்திலும்  இப்பொழுதுதான் முன்னேற்றம் கண்டு வருகின்றோம். இந்த நிலையில் 33 தொகுதிகளில் போட்டியிடுவது என்பது ஒரு சவாலான விஷயமாகும். அப்படி இருக்கையில்  தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகுதியில் போட்டியிட்டு, முடங்கிக் கிடப்பது களப்பணிக்கும், பிரச்சாரத்திற்கும், தேர்தல் பணிக்கும் பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தும். எனவே,  நான் மாத்திரமல்ல. கட்சியினுடைய முக்கியமான பொறுப்புகளில் இருக்கக்கூடியவர்களான பொதுச் செயலாளர், துணை தலைவர்கள் கூட தேர்தலில் போட்டியிடவில்லை.

புதிய விடியல்: இந்தத் தேர்தலில் என்ன முழக்கத்தை முன்வைத்து தேர்தலை சந்திக்கின்றீர்கள்?

தெஹ்லான் பாகவி: ‘சுயநல அரசியலை ஒழிப்போம், பொதுநல அரசியலை காப்போம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து இந்தத் தேர்தலை சந்திப்போம். பொதுவாகவே இன்றைய அரசியல் சுயநலத்துடனேயே இருக்கின்றது. பொதுநல அரசியல் என்பது தலைவர்களிடம், கட்சிகளிடம் தேடப்படக்கூடிய சூழ்நிலையே இருக்கின்றது. இந்த அரசியல் சூழலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சுயநலனுக்கு அப்பாற்பட்டு சமூகத்துக்காக, மக்களுக்காக களமாடிக் கொண்டிருக்கின்றது.

எனவே, இந்த தேர்தலை சுயநல அரசியலை ஒழித்து, பொதுநலனை மையப்படுத்தி தேர்தலை சந்திக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கின்றோம்.

புதிய விடியல்: இந்த தேர்தலில் உங்களால் வாகுகளை மட்டுமே பிரிக்க முடியும் என்ற கருத்துக்கள் அதிகமாக பகிரப்படுகின்றதே?

தெஹ்லான் பாகவி:  இந்தத் தேர்தல் ஆறுமுனைப்போட்டியாக நிலவுகின்றது. இதற்கு மத்தியிலும் எங்களால் குறிப்பிட்ட வாக்குகளை பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. சில இடங்களில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகளும் இருக்கின்றது. அதை மறுக்க முடியாது. அதே நேரத்தில் நாங்கள் வாங்குகின்ற அந்த வாக்குகள், சமூக நலனுக்காக போராடுகின்ற எஸ்.டி.பி.ஐ.கட்சிக்கு கிடைக்கும் வாக்குகள், வரக்கூடிய காலங்களில் எஸ்.டி.பி.ஐ.கட்சியை அரசியல் களத்திலும், தேர்தல் களத்திலும் புறக்கணிக்க முடியாது என்ற சூழலை உருவாக்கும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். நாங்கள் நடத்தக்கூடிய போராட்டங்களுக்கும், கோரிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கக்கூடிய நிலையையும் ஏற்படுத்தும். குறிப்பாக, சமூகத்துக்காக எஸ்.டி.பி.ஐ. கட்சி முன்வைக்கக்கூடிய கோரிக்கைகள் முக்கியத்துவம் பெறுவதற்கான வாய்ப்புகளும் இதில் இருக்கின்றன.

புதிய விடியல்: முஸ்லிம்கள் போட்டியிடக்கூடிய தொகுதிகளில் போட்டியிடுவதால், முஸ்லிம்களின் வெற்றிவாய்ப்பு பாதிக்காதா ?

தெஹ்லான் பாகவி: முதலில் நீங்கள் ஒன்றை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம் அரசியல் கட்சிகள்,  அதன் தலைவர்களின் கொள்கைகள் சரியாக இல்லை , நீண்டகால அரசியல் பயணத்தில் இருந்தும்,  அவர்களால் சமூகத்துக்கு எந்தப் பயனும் இல்லை என்ற சூழலை புரிந்து கொண்டுதான், ஒரு மாற்று அரசியல் சக்தியாக எஸ்.டி.பி.ஐ. கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே, ஒரு மாற்று அரசியல் சக்தியாக வளர்ந்து வரக்கூடிய சூழலில், அவர்கள் போட்டியிடுகின்றார்கள் என்பதற்காக தேர்தலில் இருந்து ஒதுங்குவது என்பது ஒரு ஆரோக்கியமான சூழலாக இருக்காது.

இருந்தாலும், முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடக்கூடிய எல்லா தொகுதிகளிலும் எஸ்.டி.பி.ஐ. கட்சி போட்டியிடவில்லை. முஸ்லிம் லீக் கட்சி போட்டியிடக்கூடிய ஐந்து தொகுதிகளில், நான்கு தொகுதிகளில் போட்டியிடவில்லை; மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடக்கூடிய நான்கு தொகுதிகளில், மூன்று தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. கட்சி போட்டியிடவில்லை. சில தொகுதிகளில் போட்டியிடுவதை கணக்கில் எடுக்கக்கூடியவர்கள், பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிடவில்லை என்பதை ஏன் கணக்கில் கொள்ள மறுக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

இன்னொன்றையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு அரசியல் கட்சி என்ற முறையில், முஸ்லிம் உறுப்பினர்களையும் தொண்டர்களையும் அதிகமாக கொண்ட கட்சி என்ற முறையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில்தான் போட்டியிட முடியும். இந்த யதார்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் ஒரு அரசியல் கட்சி எங்களுடைய தொண்டர்கள் எங்கு அதிகமாக இருக்கிறார்களோ ,எங்களுடைய கட்டமைப்பு எங்கு வலுவாக இருக்கிறதோ அங்கேதான் நாங்கள் போடியிட முடியும் இதை புரிந்து கொள்ளாதவர்கள்தான் இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றார்கள் என்பதை நான் தெளிவுபடுத்திக் கொள்கின்றேன்.

புதிய விடியல்: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பிரதானமான  கொள்கைகளில் முக்கியமான ஒன்று  பாசிச எதிர்ப்பு. அந்த வகையில் இந்தத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிரான உங்களுடைய பணி எத்தகையது ?

தெஹ்லான் பாகவி: பாரதிய ஜனதா கட்சி இந்தத் தேர்தலில் படுமோசமான ஒரு சூழ்நிலையை சந்திக்கிறது. பல்வேறு அரசியல் கட்சிகளாலும் தனித்து விடப்பட்டிருக்கின்றது. அவர்களுக்கான வெற்றிவாய்ப்பு பெரும்பாலும் இல்லை என்றே கருதுகின்றேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் சில தொகுதிகளில் அவர்களுக்கான வாய்ப்புகள் இருக்கின்றது. இதை காரணமாக வைத்துதான் கன்னியாகுமரி மாவட்டத்தில் எந்தத் தொகுதியிலும் எஸ்.டி.பி.ஐ.  போட்டியிடவில்லை. அங்குள்ள தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக, எதிர் முகாம்களில் இருக்கக்கூடிய கட்சிகளுக்கு ஆதரவாக எஸ்.டி.பி.ஐ. கட்சி கடுமையான, தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய விடியல்: தி.மு.க. கூட்டணியில் இருந்து எஸ்.டி.பி.ஐ. கட்சி வெளியேறியதற்கு ம.ம.க. காரணம்  இல்லை, மாறாக எஸ் டி பி ஐ திமுக கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்று விரும்பியாதாக மமக தலைவர் ஜவாஹிருல்லாஹ் தெரிவித்துள்ளாரே..   இதைப்பற்றிய உங்களுடைய கருத்தென்ன?

தெஹ்லான் பாகவி: எஸ்.டி.பி.ஐ. கட்சி தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு ம.ம.க. தான் காரணம் என்று, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவர்களோ அல்லது எங்களுடைய அதிகாரப்பூர்வ பத்திரிகையிலோ எந்தச் செய்தியும் நாங்கள் வெளியிடவில்லை. அவர்களை குற்றம்சாட்டி அப்படி ஒரு அறிவிப்பும் நாங்கள் செய்யவில்லை. ஆனால், அவர்களாகவே அவர்களுடைய மக்கள் உரிமை வார பத்திரிகையில் அப்படி ஒரு கேள்வியை முன்வைத்து, பதிலை அளித்திருக்கின்றார்கள், அது ஏன்  என்று எனக்கு தெரியவில்லை. நாங்கள் குற்றம் சாட்டாதபோது, அவர்களுக்கு ஏன் இந்த குற்ற உணர்ச்சி ஏற்பட்டது என்று அவர்கள்தான் பதிலளிக்க வேண்டும்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியைப் பொறுத்தவரை மனிதநேய மக்கள் கட்சிக்கு முன்பாகவே தி.மு.க. கூட்டணியோடு தொடர்புகளையும், பேச்சுவார்தையையும் ஏற்படுத்தி வந்தது என்பதை எல்லோரும் அறிவர். மனிதநேய மக்கள் கட்சிக்கு அ.தி.மு.க.வில் கதவுகள் மூடப்பட்ட நிலையில், மனிதநேய மக்கள் கட்சியும் தி.மு.க. கூட்டணியில் வந்தால் நல்லது என்பதை எஸ்.டி.பி.ஐ. கட்சி முன்வைத்து, அதற்கான முயற்சிகளையும் எங்கள்  கட்சி மேற்கொண்டது

அதற்காக எங்கள் நலன் விரும்பிகளின் மூலம் தொடர்பு கொண்டு அதற்கான முயற்சிகளையும்  மேற்கொண்டோம் .

அதனுடைய வெளிப்பாடு தி.மு.க.வின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் எங்களோடு தொடர்பு கொண்டு மனிதநேய மக்கள் கட்சி கூட்டணியில் வருவதால் உங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இருக்கின்றதா  என்று கேட்டார். அதற்கு நாங்கள், எந்த ஆட்சேபனையும் இல்லை. மனிதநேய மக்கள் கட்சி வந்தால் நல்லது என்ற கருத்தையும் நாங்கள் அவரிடம் பதிவு செய்தோம்.

கூட்டணிக்குள் மமக வந்தது இப்படிதான். இதற்கிடையில் ,முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கென்று தி.மு.க. பத்து தொகுதிகளை மாத்திரமே ஒதுக்கி வைத்துள்ளது என்பது  முஸ்லிம் லீக் கட்சி தலைவர்களுக்கும்  மனிதநேய மக்கள் கட்சி தலைவர்களுக்கும் தெரியும். ஆனால், எஸ்.டி.பி.ஐ. கட்சியை அழைப்பதற்கு முன்பே தி.மு.க. தலைவர் கலைஞரிடம் இரண்டு கட்சிகளும் ஐந்து தொகுதிகளை ஒதுக்கித் தர கோரிக்கை  முன்வைத்து, தொகுதிகளையும் பெற்றுக் கொண்டனர்.

அதன்பிறகு, எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்க முடியாத சூழ்நிலையில், இந்த இரண்டு கட்சிகளிடமும் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு ஆளுக்கொரு தொகுதிகளை விட்டுக் கொடுக்குமாறு கோரிக்கை வைத்தது  திமுக.

ஆனால், எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்று சொல்கிறவர்கள், எஸ்.டி.பி.ஐ. கட்சியை கூட்டணியில் தக்க வைப்பதற்கு ஒரு சீட்டை விட்டுக் கொடுப்பதற்கு தயாராக இல்லை. ஆனால், எஸ்.டி.பி.ஐ. கட்சி தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்பு, மனிதநேய மக்கள் கட்சி உளுந்தூர் பேட்டை  தொகுதியை தி.மு.க.விடம் ஒப்படைத்தது என்பதையும் நாம் பார்த்தோம்.

எனவே, எஸ்.டி.பி.ஐ. கட்சி தி.மு.க. கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதற்காக எந்தளவிற்கு முயற்சி செய்தார்கள், விரும்பினார்கள் என்பதற்கு இந்த செய்திகள் போதுமானது.

 புதிய விடியல்: எஸ்.டி.பி.ஐ. கட்சி கடந்த  சட்டமன்ற தேர்தலுக்கும், இந்த தேர்தலுக்கும் இடையில் எந்தளவுக்கான வளர்ச்சியை எட்டியுள்ளது?

தெஹ்லான் பாகவி: எஸ்.டி.பி.ஐ. கட்சி ஒரு அபரிவிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். எல்லா அரசியல் கட்சிகளிடமும், எல்லா தலைவர்களிடமும் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு வளர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் இடையில் பார்தோமென்றால் எல்லா கட்சி தலைவர்களும் எஸ்.டி.பி.ஐ. கட்சியை விரும்புகிறார்கள். குறிப்பாக, இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதற்காக கூட்டணியில் உள்ள எல்லா கட்சித் தலைவர்களும் முயற்சிகளையும், ஒத்துழைப்புகளையும் செய்தார்கள். எஸ்.டி.பி.ஐ. கட்சி அங்கீகாரம் பெற வேண்டும், முன்னுக்கு வர வேண்டும் என்பதில் பல்வேறு தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் முயற்சி செய்தார்கள்.

ஆனால், தனித்து போட்டியிட வேண்டும் என்ற முடிவு எடுத்த பிறகு, மொத்தம் 25 தொகுதிகளில் தான் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்தோம். ஆனால், தொண்டர்கள் மத்தியில் இருந்து இன்னும் அதிகமாக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை வந்து கொண்டே இருந்தது. அதன் அடிப்படையில் ஐந்து தொகுதிகளை அதிகரித்து 30 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். இன்று வரைக்கும் கோரிக்கைகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால்,  நாங்கள் வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளோம்.

இன்றைய சிறுபான்மை அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, அனைத்து கட்சிகளும் தேய்ந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் எஸ்.டி.பி.ஐ.கட்சி வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. சமூகத்தில் உள்ள எல்லா தரப்பு மக்களிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆலிம்கள் கட்சியில் உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். அறிஞர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் கட்சியின் கொள்கைகளும் செயல்பாடுகளும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

பேட்டி: நியாஸ்

Comments are closed.