எஸ்.பி.பட்டிணம் சையது முஹம்மது கொலை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி !

0

ராமநாதபுரம்: எஸ்.பி. பட்டிணம் காவல்நிலையத்தில் சையது முகம்மதுவை விசாரணை என்ற பெயரில் அக்டோபர் 14 2014 அன்று சுட்டுக் கொலை செய்த எஸ்.ஐ. காளிதாஸை குற்ற வழக்கில் கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. முடிவு செய்திருக்கிறது.

சம்பவம் நடந்த ஆரம்பம் முதலே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வழக்கறிஞர் குழு களத்தில் இறங்கி பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி வந்தது. இந்தக் குழுவில் வழக்கறிஞர் எஸ்.எம்.ஏ. ஜின்னா, வழக்கறிஞர் என்.எம். ஷாஜகான், வழக்கறிஞர் ஏ. சையது அப்துல் காதர், வழக்கறிஞர் எஸ்.ஏ.எஸ். அலாவுதீன், வழக்கறிஞர் எம்.கே. நஜிமுதீன், வழக்கறிஞர் உமர் ஃபாரூக் ஆகியோர் களத்தில் நின்று அரசுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை கொடுத்தனர். இதனடிப்படையில் நீதி விசாரணையை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் கொலை செய்யப்பட்ட சையது முகம்மதுவின் தாய்மாமா ஜகுபர் சாதிக் மதுரை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடுத்தார். இதனை விடியல் நவம்பர் 2014 இதழில் தெளிவாக பதிவு செய்துயிருந்தோம்.

இச்சம்பவம் குறித்து ராமநாதபுரம் மாஜிஸ்திரேட் வேலுச்சாமி விசாரணை நடத்தினார். இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு, மதுரை சி.பி.சி.ஐ.டி.யின் தனிப்படையினர் விசாரித்தனர். விசாரணையின்போது தன்னை கத்தியால் குத்த சையது முகம்மது முயன்றதால், தற்காப்புக்காக சுட்டதாக எஸ்.ஐ. காளிதாஸ் தெரிவித்தார். ஆனால், எஸ்.ஐ. திட்டமிட்டே சுட்டுக் கொன்றதாகவும், அவர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் என்றும் பல்வேறு தரப்பில் கோரிக்கை விடப்பட்டிருந்தது.

images

இந்நிலையில் எஸ்.ஐ.யின் துப்பாக்கியிலிருந்து வெளியான குண்டுதான் சையது முகம்மதுவை கொன்றது என்ற தடய அறிவியல் ஆய்வக ஆய்வறிக்கையானது விசாரணை குழுவினருக்கு கிடைத்தது. இது குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை குழுவில் இடம்பெற்ற அலுவலர்கள் கூறியதாவது:

சம்பவத்தின் அனைத்து அம்சங்கள் குறித்தும் விசாரணை நடத்தியதில் எஸ்.ஐ. துப்பாக்கியால் சுடும் அளவுக்கு, சையது முகம்மதுவால் அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கவில்லை. ஓர் உயிரிழப்புக்கு காரணமாக எஸ்.ஐ. காளிதாஸ் மீது கொலை வழக்கு பதிய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான அறிக்கை சி.பி.சி.ஐ.டி. தலைமையகத்துக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. எஸ்.ஐ. மீது குற்றச்சாட்டு பதிய டி.ஐ.ஜி.யிடம் முன் அனுமதி பெற வேண்டும். இதற்கான கடிதம் ராமநாதபுரம் டி.ஐ.ஜி.க்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த அனுமதி கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், ராமநாதபுரம் ஆயுதப்படை வளாகத்தில் தங்கியுள்ள எஸ்.ஐ. காளிதாஸ் கைதாகும் நிலை உருவாகும் என்றனர்.

நன்றி: தமிழ் ஹிந்து, 25.02.2015

சையது முகம்மதுவை இழந்து நிற்கும் குடும்பத்திற்கு ஒரு ஆறுதலாகவும், பாப்புலர் ஃப்ரண்டின் சட்டப்போராட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாகவும் இந்நடவடிக்கை இருக்கிறது.

Comments are closed.