எஸ்.பி.பட்டினம் அப்பாவி இளைஞரை சுட்டுக்கொன்ற காவல் அதிகாரிக்கு மீண்டும் பணி நியமனம்.!

0

எஸ்.பி.பட்டினம் அப்பாவி இளைஞரை சுட்டுக்கொன்ற காவல் அதிகாரிக்கு மீண்டும் பணி நியமனம்.! நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய தமிழக அரசுக்கு #SDPI கட்சி கோரிக்கை.!

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில் செய்யது முஹம்மது என்ற அப்பாவி இளைஞரை, விசாரணைக்கு அழைத்து சென்று, காவல் நிலையத்தில் வைத்து அநியாயமான முறையில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தார் காவல் உதவி ஆய்வாளர் காளிதாஸ். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரு அப்பாவியை அநியாயமான முறையில் விசாரணைக்கு அழைத்து சென்று சுட்டுக்கொன்ற உதவி ஆய்வாளர் காளிதாஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்தன. இதையடுத்து தமிழக அரசு இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு காளிதாஸை பணியிடை நீக்கம் செய்தது. விசாரணையின் அடிப்படையில் இராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது சிபிசிஐடி. அதன்படி காளிதாஸ் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த காளிதாஸ் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தனக்கு வழங்கப்பட்ட பணியிடை நீக்கத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பணியிடை நீக்கத்தை தடை செய்து உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் வலுவான எதிர்ப்பு தெரிவிக்காததன் விளைவே இத்தகைய தீர்ப்பை நீதிமன்றம் அளித்துள்ளது.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொறுப்புள்ள காவல் அதிகாரியே சட்ட விரோதமாக செயல்பட்டு கொலை குற்றவாளியாகியுள்ளார். இத்தகைய அதிகாரிக்கு மீண்டும் பணி நியமனத்தை அளிப்பது என்பது மேலும் இதுபோன்ற குற்றச்செயல்கள் நடக்க வழிவகுத்துவிடும். ஆகவே, உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்து குற்றவாளியான காளிதாஸின் பணியிடை நீக்கத்தை உறுதி செய்ய வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

Comments are closed.