ஏமனின் முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் ஸாலெஹ் ஹவ்தி கிளர்ச்சியாளர்களால் கொலை

0

அரபு நாடுகளில் ஏழை நாடு என்று அழைக்கப்படும் ஏமன் நாட்டு முன்னாள் ஜனாதிபதியான அலி அப்துல்லாஹ் ஸாலெஹ் ஹவ்தி கிளர்ச்சியாளர்களால் ஏமன் தலைநகரம் சனாவிற்கு அருகில் வைத்து கொலை செய்யப்பட்டார்.

இவரின் மரணம் திங்கள் கிழமை சனாவை மையமாக வைத்து இயங்கும் உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அது பின்னர் ஸாலெஹின் அரசியல் கட்சியான GPC எனும் General People’s Congress கட்சியால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் உள்துறை அமைச்சகம், சனா மற்றும அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட போராட்டக்கார்களின் பல முக்கிய இடங்களை தாங்கள் கைப்பற்றி விட்டதாகவும் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ஸாலெஹின் முன்னாள் பாதுகாப்புபடை தலைவர் ஹுசைன் அல் ஹமிதியும் கொல்லப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்றில் ஸாலெஹின் உருவத்தை ஒத்த ஒருவரின் உடல் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. அந்த உடலை கிளர்ச்சியாளர்கள் ஒரு போர்வை மூலம் வாகனம் ஒன்றில் ஏற்றுவது போன்று அந்த காட்சி அமைந்துள்ளது.

ஹவ்தி இனக்குழுக்களுடன் தனது உறவை வெளிப்படையாக முறித்துக் கொண்ட இரண்டு நாட்களுக்குள் ஸாலெஹ் கொலை செய்யப்பட்டுள்ளார். தொலைகாட்சி ஒன்றில் வெளியான விவாத நிகழ்ச்சி ஒன்றில் கடந்த சனிக்கிழமை சவூதி தலைமையிலான கூட்டுப் படைகளுடனான தனது பேச்சுவார்த்தை குறித்து அவர் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

தற்போது ஸாலெஹின் படையின் கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகள் ஹவ்தி குழுக்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்ததாக ஹவ்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில பகுதிகள் மட்டுமே மீதம் இருப்பதாக ஈரானுடன் நெருக்கமான ஹுசைன் அல்புகைதி தெரிவித்துள்ளார்.

2012 ஆம் ஆண்டு பதிவியில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்னர் சுமார் முப்பதாண்டு காலம் அரேபிய தீபகற்பத்தில் ஒரு முக்கியமான நபராக திகழ்ந்தார் ஸாலெஹ். தற்போதைய ஏமனின் யுத்தத்திலும் அவருக்கு முக்கிய பங்குண்டு.

கடந்த 2014  ஆம் ஆண்டு ஈரானின் ஆதரவுள்ள ஹவ்தி கிளர்ச்சியாளர்கள் சனாவிற்குள் புகுந்தனர். அந்த நகரை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த அவர்கள் அப்போதைய ஜனாதிபதி அப்த் ரப்பு மன்சூர் ஹாதியை அங்கிருந்து வெளியேற்றினர். அவர் அங்கிருந்து வெளியேறி சவுதியில் தஞ்சம் புகுந்தார். இவர் 2012 ஆம் ஆண்டு ஸாலெஹிற்கு பின்னர் ஆட்சிக்கு வந்தவர்.

பின்னர் ஹாதியின் அரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்த 2015 மார்ச் மாதம் சவூதி தலைமையிலான கூட்டுப்படைகள் இந்த யுத்தத்தில் தங்களை இணைத்தது. சவூதி கூட்டுப்படைகளின் மூன்று மாதகால வான்வெளி தாக்குதளுக்குப் பிறகு ஹவ்தி படைகளுடனான தனது கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ஸாலெஹ்.

அப்பகுதியில் மிகவும் சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ஸாலெஹின் மறைவு அந்நாட்டிற்கு பிகப்பெரும் அதிர்ச்சி என்று கருதப்படுகிறது. இது குறித்து ஏமன் போஸ்ட் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் கூறுகையில், “ஸாலெஹின் மறைவு அவரது அரசியல் இயக்கத்திற்கு முற்றுப்புள்ளியாக இருக்காது. இருந்தாலும் இது மிகபெரும் இழப்பு.” என்று கூறியுள்ளார். மேலும், “ஏமனில் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு ஸாலெஹ் அபிமானத் தலைவர். அதனால் அவரது மரணம் பதிலளிக்கப் படாமல் போகாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போதைய ஸாலெஹின் மறைவிற்கு பிறகு ஹவ்திகள் ஒரே தலைமையின் கீழ் ஒன்று பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னர் இவர்களுக்கு இரு தலைமைகள் இருந்தன. இரு வேறு நோக்கங்கள் இருந்தன. போரை வெற்றி பெற இரு வேறு வழிகள் இருந்தன. தற்போது அவ்வாறல்ல என்று கூறப்படுகிறது.

ஏமனில் ஏற்பட்டுளால் இந்த பதற்றமான சூழ்நிலையில் செவ்வாய் கிழமை மனிதநேய அடிப்படையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அகப்பட்டுக் கொண்டிருக்க சனா போர்க்களமாகியுள்ளது என்று ஐநா கூறியுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஏமனுக்கான மனித நேய ஒருங்கிணைப்பாளர் ஜேமி மெக்கோல்ட்ரிக், “டிசம்பர் ஐந்தாம் தேதி அனைத்து தரப்பினரும் மனிதாபிமான அடிப்படையில் காலை 10 மணியில் இருந்து மாலை 4 மணி வரையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும், பொதுமக்களை தங்கள் வீடுகளில் இருந்து வேறு இடங்களுக்கு உதவிகள் பெறவும், அடைக்கலம் தேடிச்செல்லவும் அனுமதிக்க வேண்டும். மருத்துவ குழுவினரை உயிர் காப்பு நடவடிக்கைகளை செய்ய அனுமதிக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார். மேலும் சனாவில் நடைபெற்ற தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் உட்பட பத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.