ஏழைகளின் பணத்தை பிடுங்கி கோடீஸ்வரர்களின் கடன்களை தள்ளுபடி செய்யும் வங்கிகள்

0

கருப்புப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் உள்ள அசெளகரியங்களை பொறுத்துக்கொள்ளுங்கள் என்று மோடி கேட்டுக்கொண்ட போது அந்த அசெளகரியங்களில் இதுவெல்லாம் அடங்கும் என்றும் பொதுமக்கள் அறிந்திருக்க மாட்டார்கள். இதுவரை தங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை பெறுவதற்காக 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் பலர் தங்கள் நாட்களை வங்கி வாசலில் வெயில், மழை, குளிர் பாராமல் செலவழித்தும் வரும் இவ்வேளையில் மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளது பாரத ஸ்டேட் வங்கி. தாங்கள் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காத கோடீஸ்வரர்களின் 7,016 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களை தள்ளுபடி செய்ய ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கருப்புப்பணத்திற்கு எதிரான இந்த அதிரடி நடவடிக்கையில்(?) வங்கிகளிடம் வாங்கிய கடனை திரும்ப கொடுக்காமல் நாட்டை விட்டு தப்பியோடி பிரிட்டனில் ஒழிந்துக்கொண்ட விஜய் மல்லையா பெற்றுள்ள 1,201 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்ததும் அடக்கம். இவரின் கடனையும் சேர்த்து வேண்டுமென்றே தாங்கள் பெற்ற கடனை திருப்பி செலுத்தாத 63 கோடீஸ்வரர்களின் கடன்களையும் தள்ளுபடி செய்ய எஸ்பிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் கூடுதலாக 31 பேரின் கடன் தொகையில் பாதியளவையும் SBI தள்ளுபடி செய்யயிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த பட்டியலில் 17 வங்கிகளில் ஏறத்தாள 6,963 கோடியை கடனாக பெற்று திரும்பச் செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடிய குற்றவாளியான கிங்பிஷர் நிறுவனர் விஜய் மல்லையாவுடன், கே.எஸ்.ஆயில், சூர்யா பார்மாசூடிகல்ஸ், ஜி.இ.டி பவர், சாய் இன்போ சிஸ்டம், ஆகியோரின் கடன்களான தலா 596, 526, 400, 376, கோடிகளும் தள்ளுபடி செய்யப்பட இருக்கின்றன.

கடந்த 2013 முதல் 2015ஆம் நிதியாண்டுகளில் 29 மாநில வங்கிகள் இதுபோன்று கோடிகளில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாதவர்களின்  ரூ.1.14 லட்சம் கோடி கடன் தொகையை தள்ளுபடி செய்திருந்தது. அதிலும் கூடுதல் கடன் தொகையாக ரூபாய் 40,084 கோடி வாராக் கடனை எஸ்பிஐ வங்கியே தள்ளுபடி செய்திருந்தது. இது குறித்து செய்தித் தாள்களில் வெளியான செய்தியைப் பார்த்து உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் மக்கள் தினம் 4500 ரூபாய்க்காக கால் கடுக்கக் காத்திருக்கும் இவ்வேளையில் இத்தகைய அறிவிப்பு பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Comments are closed.