ஐ.நா. அவையில் போப் பிரான்சிஸும், பிரதமர் மோடியும்!

0

– செய்யது அலீ

போப் பிரான்சிஸும், பிரதமர் நரேந்திர மோடியும் சில தினங்களுக்கு முன் ஐ.நா. பொது அவையில் உரை நிகழ்த்துவதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு வருகை தந்திருந்தனர். உலகின் இரண்டு புவி கண்டங்களில் இருந்து வருகை தந்த இருவரும், மாறுபட்ட மதம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கக் கூடியவர்கள். இருவருக்குமிடையே வேறுபாடுகள் ஏராளம். சில ஒற்றுøமகளும் உண்டு. போப் பிரான்சிஸ், உலக கத்தோலிக்க அவையின் உயர்பீடத்தில் அமர்ந்திருக்கும் செல்வாக்கு மிகுந்த நபர். மோடியோ, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமர். அர்ஜெண்டினாவில் ஏழை மக்கள் மத்தியில் பல ஆõண்டுகள் பணியாற்றிவிட்டு வாடிகனுக்கு வந்தவர் போப் பிரான்சிஸ். ஒரு டீக்கடைக்காரருக்கு மகனாக பிறந்து ஏழைகள் மத்தியில் வாழ்ந்த பிறகே பிரதமர் பதவிக்கு வந்ததாக மோடி கூறிக் கொள்கிறார்.

எனினும், இருவருக்கும் இடையேயான இடைவெளி எத்தகையது என்பதை ஐ.நா. அவையில் அவர்கள் ஆற்றிய உரைகள் மற்றும் சமீபகால செயல்பாடுகளை மதிப்பீடு செய்தால் புரிந்து கொள்ள முடியும். போப் பிரான்சிஸ் தமது ஐ.நா. உரையில் இன்றைய முதலாளித்துவ சுரண்டல் அமைப்பு உலகை முன்னோக்கி அழைத்துச் செல்ல உதாவது என்று சாடினார். அவர் மேலும் கூறுகையில்:

“சுயநலனும், அதிகாரத்தின் மீதான எல்லையற்ற வேட்கையும் இயற்கை வளங்களை துஷ்பிரயோகம் செய்வதற்கும், ஏழைகளையும் சமூகத்தில் நலிந்தோர்களையும் ஒதுக்கி தள்ளுவதற்கும் வழி வகுக்கிறது. சுற்றுச் சூழலுக்கான உரிமை தேவை. மனித குலம் இதனை துஷ்பிரயோகம் செய்ய, சுரண்ட அதிகாரம் படைத்தவர்களல்லர். சுற்றுச்சூழலுக்கு விளைவிக்கப்படும் தீங்கு மனிதகுலத்துக்கு இழைக்கப்படும் தீங்காகும்” என்று குறிப்பிட்டார்.

பழமையானதொரு கலாச்சாரத்தை மோடி பிரதிநிதித்துவப்படுத்தினாலும் தான் ஒரு சந்தை வளர்ச்சியின் பிரச்சாரகர் என்பதையே அவர் தனது உரை மற்றும் நடவடிக்கைகள் மூலம் காட்டிக் கொண்டார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வல்லரசுகளின் கிளப்பில் இந்தியாவுக்கும் நிரந்தர இடம் வேண்டும் என்பது மோடி ஆற்றிய உரையின் சாராம்சம். இந்தியா ஏழைகளின் நாடாக இருந்தாலும் பிரபுக்களின் அவையில் தங்களுக்கும் இடம் வேண்டும் என்பதே இந்தியாவின் கோரிக்கை. அதற்கு வளர்ச்சி தேவை. பணம் தேவை. சுற்றுச்சூழல் பாதுகாப்பும் தேவை.

சுற்றுச்சூழலை பாதுகாப்பது அரசின் செயல்திட்டம் என்று மோடி ஐ.நா. உரையில் குறிப்பிட்டார். ஆனால், நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காரியங்கள் எவ்வளவு தூரம் முரண்பாடானது என்பதை கிரீன் பீஸ் தன்னார்வ தொண்டு நிறுவனம் மோடி உரையாற்றுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னால் எழுதிய ஒரு திறந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியது. மோடி அரசு இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக உழைக்கும் தன்னார்வ தொண்டர்களை தேசவிரோதிகளாக சித்தரித்து வருகிறது. அவர்களில் பலரும் அரசின் அடக்குமுறைக்கு ஆளாகின்றனர். அரசின் இத்தகைய செயல்பாடுகள் இந்தியாவின் கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாயக நிலைப்பாட்டிற்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்பதை அவர்கள் அக்கடிதத்தில் மோடிக்கு உணர்த்தினர்.

சுருக்கமாக, ஒரு ஆண்டு இடைவேளைக்குப் பிறகு ஐ.நா. அவைக்குச் சென்ற மோடி இந்தியா மீதான நம்பிக்கையின் வீழ்ச்சியை பிரகடனப்படுத்தினார். சர்வதேச ஊடகங்களும் இத்தகையதொரு செய்தியைத்தான் கூறுகின்றன. மனித உரிமைகளையும், குடிமக்களின் உரிமைகளையும் நசுக்கிவிட்டு இந்தியாவால் முன்னேற இயலாது என்ற செய்தி நியூயார்க்கில் மோடிக்கு கிடைத்திருக்கும்.

இந்தியாவின் அதிகார மையங்களுக்கு சில எச்சரிக்கைகள் ஐ.நா. அவையில் இருந்து கிடைத்துள்ளது. மக்கள் நலனுக்கு உகந்த கொள்கைகளையும், நிலைப்பாடுகளையுமே உலகம் அங்கீகரிக்கிறது. போப் பிரான்சிஸின் உரைக்கு கிடைத்த வரவேற்பும், மோடியின் உரைக்கு கிடைத்த விமர்சனங்களும் அளிக்கும் செய்தி தெளிவானது, அதிகார மமதையும், சக்தி பிரகடனமும் ஒரு நாட்டை உலகின் முன்னால் புனிதர்களாக மாற்றிவிடாது.

Comments are closed.