ஐ.நா. மனித உரிமை கழகத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா

0

.நா. மனித உரிமை கழகத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா

தங்களின் அடிப்படை உரிமைகளுக்காக அமைதி வழியில் போராடிவரும் ஃபலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் சட்டவிரோத தாக்குதல்களை சர்வதேச நாடுகள் பலவும் கண்டித்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவிப்பு செய்துள்ளது.

இந்த அறிவிப்பை வெளியிட்ட ஐநாவிற்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி, சர்வதேச நாடுகளின் இஸ்ரேலிய எதிர்ப்பு கொள்கைகளே இதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் இஸ்ரேல் ஃபலஸ்தீனியர்களின் அடிப்படை மனித உரிமைகளை அப்பட்டமாக மீறும் போதும் இஸ்ரேலை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் அமெரிக்கா, மனித உரிமைகளை கேலிக்கூத்தாக்கும் ஒரு மோசடி அமைப்பில் தாங்கள் நீடித்திருக்க விரும்பவில்லை என்று ஐநா மனித உரிமை ஆணையத்தை குறித்து கூறியுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில், ஐநா மனித உரிமை அமைப்பின் உயர் ஆணையர் செய்த் ராஅத் அல் ஹுசைன், “அமெரிக்காவின் இந்த முடிவு ஆச்சர்யமளிக்கவில்லை என்றாலும் ஏமாற்றமளிக்கிறதுஎன்று தெரிவித்துள்ளார். உலகில் தற்போது நிலவி வரும் மனித உரிமை சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு மனித உரிமையில் தனது நிலையை அமெரிக்கா உயர்த்தவேண்டுமே அல்லாது அதில் இருந்து பின்வாங்கக் கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த பிரிட்டனின் வெளியுறவுத்துறை செயலர் போரிஸ் ஜான்சன், சர்வதேச அளவில் தங்களை ஜனநாயகத்தின் பாதுகாவலர்களாக காட்டிக்கொள்ளும் அமெரிக்காவின் இந்த முடிவு அதன் கூற்றினை பொய்பிப்பதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவின் இந்த முடிவை இஸ்ரேல் மிகவும் துணிச்சலான முடிவு என்று கூறி வரவேற்றுள்ளது. காஸாவில் இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதல் குறித்து விசாரிக்கும் முடிவை ஐநா மனித உரிமை ஆணையம் கடந்த மாதம் அறிவித்ததை தொடர்ந்து அமெரிக்காவின் இந்த முடிவு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐநா விற்கான அமெரிக்க தூதராக நிக்கி ஹேலி பதவியேற்ற 2017 இல் இருந்தே இந்த முடிவு குறித்து அவர் அறிவித்து வந்துள்ளார் என்று செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் மனிதஉரிமை குறித்து தம்பட்டம் அடித்து ஐநா மனித உரிமை ஆணையத்தை குறை கூறும் அமெரிக்கா தங்கள் நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகளை சிறை பிடித்து வைத்திருப்பதும் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.