பணத்திற்காக மனித உரிமைகளை விலை பேசுகிறதா ஐ.நா.சபை?

0

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் கடந்த வியாழன் அன்று சவூதி அரேபியா ஐக்கிய நாடுகள் சபைக்கு அளித்துவரும் நிதியுதவியை நிறுத்தி விடுவதாக மிரட்டியதால் அந்நாட்டை குழந்தை கொலையாளிகள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த மிரட்டலை விடுத்தார் யார் என்பதை அவர் குறிப்பிடவில்லை என்றாலும் சவூதி அரசாங்கத்திடம் இருந்து இந்த மிரட்டல் வந்துள்ளதாக கருதப்படுகிறது.

ஐ.நா வின் 2015 இன் “Children and Armed Conflict” அறிக்கையில் ஏமெனில் உள்ள சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் “குழந்தைகளை கொல்பவர்கள் அல்லது ஊனப்படுத்துபவர்கள்” பட்டியலிலும் “பள்ளி மற்றும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துபவர்கள்” பட்டியலிலும் இடம் பிடித்திருந்தது. இந்த அறிக்கையின் படி சவூதி தலைமையிலான கூட்டுப்படைகளின் தாக்குதலில் 785 குழந்தைகளில் 60% குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் 1168 குழந்தைகள் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கு சவூதி அரசாங்கத்திடம் இருந்து பலத்த எதிர்ப்பு வரவே கடந்த திங்கள் கிழமை பாண் கீ மூன் இந்த எண்ணிக்கையை மறு ஆய்வு செய்வதாக கூறியுள்ளார். ஆனால் கடந்த வியாழன் அவர் இந்த எண்ணிக்கையை மறு பரிசீலனை செய்வதற்கான உணமையான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறிய போது, ” அந்த அறிக்கையில் எந்த ஒரு குழந்தையும் அனுபவிக்கக் கூடாத பயங்கரங்கள் விவரிக்கப்பட்டுள்ளது” என்றும் “ஆனால் அதே நேரம், இந்த நாடுகள் தங்களது நிதி யுதவிகளை நிறுத்திவிட்டால் அதனால் பாதிக்கப்படும் லட்சக்கணக்கான குழந்தைகளைப் பற்றியும் கவலை கொள்ள வேண்டியுள்ளது” என்று கூறியுள்ளார். இந்த நாடுகளின் நிதியுதவி நின்றுவிட்டால் பலஸ்தீன், தென் சூடான், சிரியா, ஏமன் மற்றும் இன்னும் பல நாடுகளில் உள்ள குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார். மேலும் தனது இந்த முடிவு மிகவும் வேதனைக்குரிய முடிவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கில் ஐக்கிய நாடுகள் சபைகளுக்கு நிதியுதவி செய்யும் நாடுகளில் சவூதி அரேபியா பெரும் பங்கு வகிக்கிறது. 2014 ஆம் ஆண்டு மட்டும் சவூதி அரசு ஐ.எஸ். இயக்கத்தவர்களால் பாதிக்கபப்ட்ட மக்களுக்கு உதவுவதற்காக 500 மில்லியன் டாலர்களை ஐக்கிய நாடுகளுக்கு கொடுத்து உதவியுள்ளது. இது மனிதநேய உதவிகளுக்காக ஒரு தனி நாடு கொடுக்கும் தொகையில் அதிக பட்ச தொகையாகும். ஃபலஸ்தீனுக்கான நிதி யுதவி செய்பவர்களில் சவூதி அரசு மூன்றாம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.