ஒட்டகம் வெட்ட இடைக்கால தடை : நீதிமன்ற உத்தரவை சட்டப்படி எதிர்கொள்வோம் – பாப்புலர் ஃப்ரண்ட்

0

பத்திரிகை செய்தி

ஆகஸ்ட் 25, 2016
சென்னை

ஒட்டகம் வெட்ட இடைக்கால தடை : நீதிமன்ற உத்தரவை சட்டப்படி எதிர்கொள்வோம் – பாப்புலர் ஃப்ரண்ட் மண்டல தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மண்டல தலைவர்கள் கூட்டம் ஆகஸ்ட் 24, 2016 அன்று மதுரை மாவட்ட அலுவலகத்தில் வைத்து  நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் எம்.முகம்மது இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் எம்.முகம்மது ஷேக் அன்சாரி அவர்கள் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர்கள், மண்டல தலைவர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு ,

தீர்மானம் 1 : ஒட்டகம் வெட்ட நீதிமன்றம் பிறப்பித்துள்ள  தடை உத்தரவை சட்டப்படி எதிர்கொள்வோம்

பக்ரீத் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ஒட்டகம் வெட்டுவதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள  தீர்ப்பு முஸ்லிம்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மதவிவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. ஏற்கனவே மத்திய பா.ஜ.க அரசின் தொடர் வெறுப்பு பிரச்சாரங்களினால் பாதிப்புக்குள்ளாகி வரும் முஸ்லிம் சமூகத்திற்கு இத்தீர்ப்பு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பக்ரீத் பெருநாளின் போது ஒட்டகங்கள் அறுப்பது முஸ்லிம்கள் தொன்று தொட்டு கடைப்பிடித்து வரும் பழக்கமாகும். ஆனால் இப்போது புதிதாக தமிழகத்தில் ஒட்டகங்களை அறுப்பதற்கான முறையான இடங்கள் இல்லாததால் இடைக்கால தடை பிறப்பிப்பதாக உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

இந்த இடைக்கால தடை உத்தரவை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சட்டப்படி எதிர்கொள்ளும் என்பதனை தெரிவித்துக் கொள்வதோடு, இவ்வருடம் பக்ரீத் பண்டிகையில் முஸ்லிம்கள் ஒட்டகம் அறுப்பதில் தேவையற்ற இடையூறுகள் வராமல் பாதுகாக்க தமிழக  அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், ஒட்டகம் அறுக்கும் இடங்களில் ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நேரடியாக களத்திற்கு சென்று உரிய சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என்பதனையும்  தெரிவித்துக் கொள்கிறோம்.

தீர்மானம் 2 : செப்டம்பர் 15 – அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆண்டுகள் கழித்த முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் உட்பட அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்

தமிழகத்தில் 2008 ஆம் ஆண்டு அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு 1405 கைதிகள் நல்லெண்ண அடிப்படையில் தமிழக அரசால் விடுதலை செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து சுப்ரமணிய சுவாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மாநில அரசு பிறப்பித்த அரசாணையில் தலையிட முடியாது என்று கூறி வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை தொடர்பான கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தற்போது உயர்நீதிமன்றம் முடித்துவைத்துள்ள மேற்படி  வழக்கை சுட்டிக்காட்டி, வழக்கு நிலுவையில் இருப்பதால் கைதிகளை விடுதலை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்வதில்  தடையாக அமைச்சர் சுட்டிக்காட்டிய வழக்கு நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே முஸ்லிம்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஆயுள் சிறைவாசிகள் விடுதலை விஷயத்தில் இனிமேலும் காரணங்கள் கற்பிக்காமல் வரக்கூடிய செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் கழித்த முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் உட்பட அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு
முஹம்மது சேக் அன்சாரி,
மாநில பொதுச் செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு.

Comments are closed.