ஒரு வருட மோடி அரசின் ஆட்சி  சாதனையா? வேதனையா?

0

 – முஹம்மது ஷேக் அன்சாரி

மாநில பொதுச் செயலாளர்,

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதம வேட்பாளரான மோடி ஆட்சி அமைத்து ஒரு வருடம் பூர்த்தியாகிவிட்டது. ஒரு வருடம் பூர்த்தியான நிலையில் என்ன சாதித்தார், என்ன வாக்குறுதிகளை நிறைவேற்றினார், இவர்களின் நல்லாட்சி மலர்ந்ததா, விலைவாசி கட்டுப்படுத்தப்பட்டுள்ளதா, அனைத்து மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட்டதா போன்ற கேள்விகளும், ஆட்சிமீதான விமர்சனங்களும் பரவலாக எழுந்துள்ளன.

“புதிதாக பதவி ஏற்றிருக்கும் எந்த அரசுக்கும் தேனிலவு காலம் என்பது உண்டு. அந்த தேனிலவு காலம் என்பது நூறு நாளோ, அதற்கு மேலோ கொடுக்கப்படும். ஆனால், எதிர்பாராதவிதமாக எனது அரசுக்கு அப்படிப்பட்ட தேனிலவு காலம் தரப்படவில்லை” என்று கடந்த ஆண்டு, ஜூன் மாதம், அச்சமயம் எழுந்த விமர்சனங்களுக்காக ஆதங்கப்பட்டார் மோடி. அந்த வகையில் பா.ஜ.க. அரசுக்கு தேனிலவு காலத்தை அதிகமாகவே இந்திய மக்கள் வழங்கிவிட்டனர்.

மோடியின் பிரச்சாரமும் அதற்கான  பலனும்…

2013 செப்டம்பர் 15ம் தேதி மோடி தனது பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

ஹரியானா, ரேவரியில் தொடங்கிய மோடியின் பிரச்சார பயணம் 2014 மே 10ல் உத்தரபிரதேசம் வாரணாசியில் முடிந்த போது அவர் பிரச்சாரத்திற்காக கடந்த தூரம் மட்டும் மூன்று லட்சம் கி.மீ. என்று கணக்கிடப்பட்டது. அவர் கலந்து கொண்ட பொதுக்கூட்டங்கள் 437. டீ கடை பிரச்சாரம், டிஜிட்டல் பிரச்சாரம் என்று, பாமர மக்களையும், புதிய தலைமுறையினரையும் கவரும் விதத்தில் புதிய யுக்திகளை கையாண்டார். ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற இணையதளங்களை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார்.

பல விமர்சனங்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களின் எதிர்ப்பு போன்றவைகளுக்கு மத்தியில் மோடியை பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். பிரதமர் வேட்பாளராக களம் இறக்கின. பா.ஜ.க. என்ற தேசிய கட்சியை தெரியாதவர்களுக்கு கூட மோடியை நன்றாக தெரிகிற அளவிற்கு முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தார்கள். மோடிக்கு முக்கியத்துவம் கொடுத்து கிராமங்கள் வரை கொண்டு சேர்த்ததில் ஊடகங்களுக்கும் பெரும் பங்குண்டு. பெரு நிறுவனங்கள் அனைத்தும் மோடியை பிரதமராக்க வரிந்து கட்டிக்கொண்டு பொருளாதாரத்தை முதலீடாக ஆக்கின.

மோடி தேர்தல் பிரச்சாரத்தின்போது முன்வைத்த முழக்கங்களும், கோஷங்களும் வேடிக்கையான ஆடைகளும், அவர் வழங்கிய சாத்தியமில்லாத வாக்குறுதிகளும் ஏராளம். மோடி தன்னை ஒரு மீட்பராகவே காட்டிக் கொண்டார். இந்தியாவை காக்க வந்த காவலராகவே அனைத்து ஊடகங்களும் அவரை ஊதி பெரிதாக்கின.

மோடி தன்னை வளர்ச்சி நாயகன் என்றும், 56 இன்ச் மார்பு எனக்கு உண்டு, என்னால் மட்டுமே சாதிக்க முடியும் என்றும் தனது பிரச்சாரத்தில் பீற்றிக் கொண்டார். “ஆண்டின் 365 நாட்களும், 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரத்தை கிராமங்களுக்கு உங்களால் வழங்க முடியுமா? அந்த திறன் உங்களிடமில்லை, அதற்கு 56 இன்ச் மார்பு வேண்டும்” என்று தனது பிரச்சாரத்தில் முழங்கினார்.

மோடியின் பிரச்சாரத்திற்கு எதிர் பிரச்சாரங்கள் எதிர் கட்சிகளால் முன் வைக்கப்படாமல் இல்லை. நான் குஜராத்தில் கொண்டு வந்துள்ள வளர்ச்சியை போல் இந்தியாவிலும் கொண்டு வருவேன் என்ற போது, மோடியின் குஜராத் வளர்ச்சி என்பது போலியானது என்று ஆதாரத்தோடு எதிர் தரப்பினர் வாதங்களை முன்வைத்தனர். குஜராத்தில் 3,000 முஸ்லிம்களுக்கும் மேல் படுகொலை செய்யப்பட்டதில் மோடியின் பங்கினை பற்றி பேசினர். என்கௌண்டர் என்ற பெயரில் செய்த பச்சைப் படுகொலைகளையும், அதிலிருந்த மோடியின் அரசியல் பற்றியும் எழுதினர். இந்திய பிரதமர் வேட்பாளர்களில் மோடிக்கு எழுந்த விமர்சனங்களும், விளம்பரங்களும் வேறு எவருக்கும் இருந்ததில்லை என்பதுதான் உண்மை.

இத்தனைக்கு பிறகும் பா.ஜ.க. அங்கம் வகித்த தேசிய ஜனநாயக கூட்டணி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தது. காரணங்கள் பல இருந்தாலும் காங்கிரசின் பத்து வருட ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியும், அதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. லஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடின. ஏழைகள் மற்றும் சிறுபான்மையினரின் நம்பிக்கையை இழந்து ஒரு எஜமானிய மனப்பான்மையுடன் நடந்து கொண்டது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. தங்களை யாரும் வீழ்த்த முடியாது என்ற மமதையில் அதிகப்படியாகவே ஆடினார்கள். இவை அனைத்தும் மக்களை மாறி வாக்களிக்க தூண்டின. இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டனர் பா.ஜ.க.வினர்.

இந்நிலையில் மோடியினால் முன்வைக்கப்பட்ட அத்தனை வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டதா? பா.ஜ.க. மக்களின் நம்பிக்கையை தக்கவைத்துக் கொண்டதா என்பதனை ஆய்வு செய்வது அவசியம்.

சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம்

தனது முதல் நாடாளுமன்ற உரையில் “சிறுபான்மையினரின் மேம்பாட்டுக்காக எனது அரசு பாடுபடும். உடலில் ஒரு அங்கம் மட்டும் பலகீனமாக இருந்தால், அந்த உடலை ஆரோக்கியமானதாக யாரும் கருதுவது இல்லை. சிறுபான்மையினரின் நலன் குறித்து நான் பேசியது, ஏதோ சமாதானத்திற்காக கூறப்பட்ட வார்த்தைகள் கிடையாது. முஸ்லிம் சகோதரர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டுவர சிறப்பு கவனம் செலுத்துவோம்” என்று கூறினார்.

தேசிய அரசியலுக்கு வந்தபின், முஸ்லிம்கள் மத்தியில் கருத்தை மாற்ற வேண்டிய அவசியம் மோடிக்கு ஏற்பட்டுவிட்டது என்பது தேர்தல் பிரச்சாரத்திலும் வெளிப்பட்டது.

ஆனால், தேர்தலுக்கு பின் பிரதமரின் பேச்சுக்கு நேர் எதிரான செயல்பாடுகள்தான் பா.ஜ.க.விடமிருந்து தொடர்ந்து வெளிப்படுகிறது. பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பா.ஜ.க. தலைவர்களின் பேச்சுகளை தட்டிக் கேட்க மனமில்லாமல் தட்டிக் கொடுக்கவே மோடி அரசு முற்படுகிறது. புதிய அமைச்சரவையில் நஜ்மா ஹெப்துல்லாவிற்கு சிறுபான்மைதுறை ஒதுக்கப்பட்டவுடன் “இந்த நாட்டில் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் கிடையாது” என்று சொல்லியது மூலம் முஸ்லிம்களுக்கு கிடைக்கும் சிறிய சலுகைகளையும் கிடைக்காமல் செய்ய முற்பட்டார்.

அதுமட்டுமல்லாமல், சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் 16 சதவிகிதத்தை கடந்த ஆண்டைவிட குறைத்துள்ளது என்பதிலிருந்தே, இவர்களின் சிறுபான்மையினர் மீதான அக்கறை தெரிகிறது. அத்துடன், இந்துத்துவ அமைப்பினரின் கர்வாப்சி என்ற கட்டாய மதமாற்றம், கிறிஸ்தவ ஆலையங்களின் மீது தொடர்ந்து நடக்கும் தாக்குதல்கள் போன்றவை சர்வதேச சமூகத்தையே முகம் சுழிக்க வைத்துள்ளன.

இந்தியாவில் கேள்விக்குள்ளாக்கப்படும் மத சுதந்திரத்தை பற்றி அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கருத்துக்கு பிறகுதான் மோடி தனது மௌனத்தை கலைத்தார். “இந்தியா மத சார்பற்ற நாடு, தனி நபரின் சுதந்திரம், மதம் போன்றவற்றில் தலையிடவும் வெறுப்பை பரப்பவும் யாருக்கும் அனுமதி இல்லை” என்றார். ஆனாலும், குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. கண்டிக்கப்படவுமில்லை. வெறுப்பு பேச்சுகளும் தொடரத்தான் செய்கின்றன.

சமீபத்தில் கூட மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி நஞ்சை உமிழ்ந்துள்ளார். அதன் மூலம் தனது விசுவாசத்தை அதிகமாகவே காட்ட முற்பட்டுள்ளார். “மாட்டிறைச்சி உண்ணாமல் உயிர் வாழ முடியாது என்று நினைக்கும் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும்” என்றார். தேர்தலுக்கு முன்னே முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்புவது பற்றி பேசியுள்ளனர். “மோடிக்கு வாக்களிக்காதவர்கள் பாகிஸ்தானுக்கு போக வேண்டி வரும்” என்று ஜார்க்கண்ட் மாநில பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான கிரிராஜ் சிங் பேசியது சர்ச்சைக்குள்ளானது.

சமீபத்தில் பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி சொன்னது நினைவிருக்கலாம். “கிறிஸ்துவ ஆலயங்களிலும், மஸ்ஜித்களிலும் இறைவன் இல்லை. ஆகையினால் அவற்றை இடித்து விடலாம்” என்றார்.

முஸ்லிம்களின் வாக்குகளை பறிக்க வேண்டும் என்று சிவசேனா கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் தனது சாம்னா பத்திரிகையில் எழுதியுள்ளார்.

“மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் எந்த செயலையும் அரசு சகித்துக்  கொள்ளாது. சிறுபான்மையினரை அரசு முழுமையாக பாதுகாக்கும் என உறுதியாக கூறுகிறேன்” என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினாரே, பாதுகாப்புக்காக நடவடிக்கை எடுத்தார்களா? சமீபத்தில் டைம்ஸ் பத்திரிகையின் கேள்விக்கு பதில் அளித்த மோடி “சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக எந்த ஒரு தனி நபராவது கருத்து தெரிவித்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். பேசியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்? அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுக்க மோடியின் சட்டம் இடம் தரவில்லையா?

சமீபத்தில் சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் தனது ஆண்டறிக்கையை பிரிட்டனில் வெளியிட்டது. அதில், “இந்தியாவில் கடந்த மே மாதம் பொதுத்தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மையுடன் வெற்றிப்பெற்று ஆட்சியமைத்து நல்ல நிர்வாகம், அனைவருக்குமான வளர்ச்சி, சேவைகளும், சுகாதாரமும் ஏழைகளுக்கும் கிடைக்கும் என்று உத்திரவாதங்கள் வழங்கியது.

ஆட்சிக்கு வந்தபின் தனி மனித சுதந்திரம், கருத்து சுதந்திரத்தில் அதிகாரம் படைத்தவர்கள் தலையிடுவது தொடர்கிறது. உத்தரப்பிரதேசத்திலும் வேறு சில மாநிலங்களிலும் மதக்கலவரம் நடைபெற்றுள்ளது. ஜாதி ரீதியான பாகுபாடும், கலவரமும் தொடர்ந்து பரவுகின்றன. இந்து அமைப்புகள் சிறுபான்மையினரைக் கட்டாயப்படுத்தி, இந்து மதத்துக்கு மாற்றுவதாக தகவல்கள் வெளியாயின.

நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் நிலங்களிலிருந்தும் வீடுகளிலிருந்தும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, புதிய சுரங்கங்கள், அணைகள் அல்லது அவற்றை விரிவாக்கும் பணிகளுக்காக ஆதிவாசி மக்கள் அப்புறப்படுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

அவசர சட்டமும், ஏழைகள் மற்றும் விவசாயிகள் நிலையும்

“வேளாண்மையையும், உள்கட்டமைப்பையையும் மேம்படுத்துவோம், ஏழைகளுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த எனது தலைமையிலான அரசு முன்னுரிமை கொடுக்கும், ஏழைகளுக்குத்தான் அரசு இருக்க வேண்டுமே தவிர, படித்தவர்களுக்கும் பணக்காரர்களுக்கும் அல்ல” என்றார் மோடி. இதில் எதை உண்மைப்படுத்தினார்? தேர்தலுக்காக பேச ஆரம்பித்தவர், இன்னும் பேசிக்கொண்டே இருக்கிறாரே தவிர  எதையும் சாதிக்கவில்லை என்பதுதான் அனைவரின் கருத்தும்.

வேளாண்மை மீதும் விவசாயிகள் மீதும் அக்கறையுள்ள கட்சியாக காட்டிக்கொள்ளும் பா.ஜ.க. அரசு, தான் கொண்டுவந்துள்ள நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கும், ஏழைகளுக்கும் துரோகம் இழைத்துள்ளது. அனைத்து விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் எதிர்த்த பிறகும் இந்த சட்டத்தைக் கொண்டு வருவதிலிருந்து பின்வாங்கவே மாட்டோம் என்கிறார்கள். இந்த சட்டம் விவசாயிகளுக்கு நன்மையே பயக்கும் என்கிறார்கள்.

வளர்ச்சி என்ற பெயரில் விவசாயிகளின் நிலத்தை அவனின் விருப்பமில்லாமலே பறித்து, அவனை அதிலிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி பெரு நிறுவனங்களுக்கு கொடுப்பதுதான் நன்மை பயக்குமா? யாருக்கு நன்மை பயக்கும் என்பதை மக்கள் நன்றாக உணர ஆரம்பித்து விட்டார்கள். அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்திற்கு ஆதரவு கோரியபோது இவர்களின் கூட்டணியில் இருக்கும் சிவசேனா கட்சி கூட “விவசாயிகளின் பாவத்தை சம்பாதிக்க நாங்கள் விரும்பவில்லை” என்று ஆதரவு தர

மறுத்துவிட்டது. (கூட்டணியில் இல்லாத அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்தது தனி கதை).

ஏற்கெனவே விவசாயிகளின் தற்கொலை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை 26 சதவிகிதம் அதிகம் என்று மத்திய வேளாண்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதில் மேக் இன் இந்தியா என்ற பெயரிலும், ஸ்மார்ட் நகரம் என்ற பெயரிலும், வளர்ச்சி என்ற பெயரிலும் விவசாய நிலங்களை பெறு நிறுவனங்களுக்கும், அந்நிய நிறுவனங்களுக்கும் பட்டா போட்டு கொடுக்கும் செயலை மோடி அரசு செய்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் எதையெல்லாம் எதிர்த்தார்களோ அதையே அதைவிட சிறப்பாக செய்கிறார்கள்.

மேக் இன் இந்தியா பிரச்சார இயக்கத்தை கடந்த நவம்பரில் தொடங்கி இன்று நாடு, நாடாக சென்று பெரு நிறுவனங்களுக்கு இந்தியாவில் ஆலைகள் திறக்க அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார். இது இந்திய மண்ணுக்கு செய்யும் ஒரு பச்சை துரோகம். அதுபோல், தனது சுதந்திர தின உரையில் “வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழிற்சாலைகளை அமைத்து இங்கிருந்து உலகின் எந்த பகுதிக்கும் ஏற்றுமதி செய்யலாம். ஆனால், இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டும்.

அதற்கு தேவையான அனைத்து வசதிகளையும், குறிப்பாக மின்சாரம் உள்ளிட்டவை கிடைக்கும். இந்தியாவில் கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக மின்னணு பொருட்கள் அதிகம் இறக்குமதி செய்யப்படுகின்றது. இதை குறைக்க மின்னணு பொருட்கள் உற்பத்தி இந்தியாவிலே செய்ய வேண்டும். இதன்மூலம் மின்னணு பொருட்கள் விலை குறைவாக கிடைக்கும்” என்றார்.

மேக் இன் இந்தியா பிரச்சார துவக்க நிகழ்ச்சியில் ஐநூறுக்கும் மேற்பட்ட முதலாளிகள் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி “கடந்த  சில ஆண்டுகளில் நான் சந்தித்த தொழிலதிபர்கள் பலர், இந்தியாவிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் சென்று தொழில் தொடங்கப் போவதாக கூறினர். அரசு கொள்கைகள் அவ்வப்போது மாற்றப்படுவது. சி.பி.ஐ. விசாரணை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொழிலதிபர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. இதனால் நம்பிக்கையை இழந்துள்ளனர். அவர்களின் அச்சத்தை அகற்றவும், நம்பிக்கையை வளர்க்கவும் ஆவன செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.

மேலே குறிப்பிட்ட இரண்டு செய்திகளின் மூலம் இந்திய மக்களுக்கு மோடியின் பா.ஜ.க. அரசு சொல்லும் செய்தி என்ன? முதலாவதாக வெளிநாட்டு உள்நாட்டு தொழிலதிபர்களுக்கு சிகப்பு கம்பள வரவேற்பும், அதில் அவர்களுக்கு சகல சலுகைகளும் வழங்கப்படும். இந்திய மக்கள் பலரும் மின்சாரத்தை அனுபவிக்காத சூழ்நிலையில் தடையற்ற மின்சாரம் வழங்குதல் போன்ற சலுகைகள் கிடைக்கும். இவ்வளவு கிடைத்த பிறகும் அவர்கள் தவறு செய்யும் பட்சத்தில் ஏற்படும் சி.பி.ஐ. விசாரணைகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற செய்தி அடங்கியிருக்கிறது.

இரண்டாவதாக, இந்தியாவை உற்பத்தி தொழிற்சாலையாக ஆக்கி கழிவுக் கூடமாக மாற்றுவது. ஏற்கெனவே, 105 நாடுகளின் கழிவுகளை கொட்டும் குப்பை தொட்டியாக இந்தியா பயன்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ஐ.நா. சபை 2014ன் ஆய்வு அறிக்கையில் மின்னணு பொருட்கள் கழிவு அதிகம் கொட்டப்படும் நாடுகளில் ஐந்தாவது இடத்தில் இந்தியா இருக்கிறது என்கிறது. இங்குள்ள நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு, இங்குள்ள காற்று மாசுபடுத்தப்பட்டு, விவசாயம் செய்ய தகுதியில்லா பூமியாக மாற்றுவதுதான் இவர்களின் திட்டம்.

மூன்றாவது, விவசாயத்தை அழிப்பதன் மூலமும், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகளுக்கு அனுமதி வழங்குவதன் மூலமும், புதிய சாலை பாதுகாப்பு சட்டத்தின் மூலமும் விவசாயிகளும், சிறுதொழில் வணிகர்களும் தெருவுக்கு வந்தால் மட்டுமே வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கூலி தொழிலாளிகள் கிடைப்பார்கள் என்ற மறைமுக நோக்கமும் இதில் இருக்கிறது.

“இந்திய விவசாயிகள் துயரத்திலுள்ள நிலையில் அவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணாமல், வெளிநாட்டு பயணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் பிரதமர். மோடியின் அரசுக்கு பத்துக்கு பூஜ்யம் மதிப்பெண்கள்தான் அளிப்பேன்” என்று ராகுல் காந்தியே எள்ளி நகையாடும் அளவிற்கு மிக மோசமாக ஆட்சி நடக்கிறது.

“கடந்த ஓராண்டாக நான் ஒரு நாளும் ஓய்வில்லாமல் உழைக்கிறேன். பலரும் கேட்கிறார்கள், மோடி ஏன் இவ்வளவு நாடுகளுக்கு பயணிக்கிறார் என்று. ஆனால், நான் அதிகமாக பணியாற்றுவதற்காக விமர்சிக்கப்படுகிறேன்” என்று ஷாங்காய் நகரில் மோடி பேசியுள்ளார். ஆனால், எந்த பெரு நிறுவனங்கள் மோடியை பிரதமராக கொண்டுவர முயற்சித்ததோ அந்த முதலாளிகளுக்காக ஓடாய் உழைக்கிறார். அதில், எந்த ஏழைக்கு என்ன லாபம்?

 அதானிக்கு 6,000 கோடி கடன், உயிர்காக்கும் மருந்துகளின் விலை நிர்ணய கட்டுப்பாட்டை நீக்கியது மூலம் நிறுவனங்களுக்கு அதிக லாபம் கிடைக்க செய்தது, இராணுவம், ரயில்வே துறை மற்றும் காப்பீட்டு துறையில் அந்நிய முதலீடு என்று முதலாளிகளுக்கு சேவகம் செய்யும் பணியில் காங்கிரஸ் அரசையே பா.ஜ.க.வின் மோடி அரசு மிஞ்சி விட்டது.

தேர்தல் பிரச்சாரத்தில் கருப்பு பணத்தை பற்றி வாய் கிழிய மோடி மேடை தோறும் பேசினார். வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்டெடுப்பது மட்டுமல்ல, அதை இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் பகிர்ந்தளிப்போம் என்றார். அதுபற்றி கேட்கப்பட்டதற்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி “15 லட்சம் ரூபாய் தருவேன் என்று

சொன்னது ஒரு உதாரணத்திற்காக சொல்லப்பட்டது” என்கிறார். கருப்பு பண விவகாரத்தில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியும், பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் அரசுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

வளர்ச்சி என்ற வெற்று முழக்கத்தை முன்வைத்து ஆட்சிக்கு வந்த பா.ஜ.க.வின் செயல்பாடுகளை கண்டு அவர்களே இன்று விமர்சிக்க தொடங்கிவிட்டனர். பா.ஜ.க.வின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி “வாரணாசியை ஜப்பானின் டோக்யோ போன்று மேம்படுத்துவதாக பிரதமர் மோடி கூறியிருந்தார். அதை எதிர்க்கவில்லை. அதற்குமுன் இங்கே அடிப்படை வசதிகளை முதலில் செய்ய வேண்டும். வாரணாசி நகரை குப்பைகள் நிறைந்த இடமாகவா நீடிக்க விரும்புகிறோம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். “ஒரு வருட ஆட்சியில் மோடி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததினால் மோடி மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது” என்று பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகித்த ஐ.ஜே.கே. தலைவர் பாரிவேந்தர் தெரிவித்திருக்கிறார்.

விலை ஏற்றம்தான் சாதனையா?

மன்மோகன் ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி தொடர்ந்து விமர்சித்து வந்தார்கள் பா.ஜ.க. தலைவர்கள். இன்று சர்வதேச கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்தபோதும் அந்த பலன் மக்களை சென்றடைய விடாமல் தடுப்பது மட்டுமல்லாமல், தொடர்ந்து டீசல், பெட்ரோல் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்களின் கல்லாவை நிரப்பும் சேவையை செய்கிறது மோடி அரசு.

கடந்த வருடம் செப்டம்பரில் ஐந்து நாள் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தார். செல்வதற்கு முன் வாக்களித்த இந்திய மக்களுக்காக ஒரு காரியத்தை செய்தார், என்ன அது? மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டிலிருந்த உயிர்காக்கும் 108 மருந்துகளின் விலை கட்டுப்பாட்டை நீக்கினார். இதனால், 14 மடங்கு வரை மருந்துகளின் விலை உயர்ந்துள்ளது. இதனால், சாமானிய மக்களும், ஏழைகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேசமயம், அமெரிக்க மருந்து நிறுவனங்களின் முதலாளிகளுக்கு கொள்ளை லாபம் கிடைக்க வழிவகை செய்து தனது விசுவாசத்தை காட்டியுள்ளார் மோடி.

அதுபோல், ரயில் சேவையில் பிரீமியம் டிக்கெட் மற்றும் பிரீமியர் ரயில் என்று அறிமுகப்படுத்தியுள்ளது, எப்படியெல்லாம் மக்களின் பொருளாதாரத்தை சுரண்டலாம் என்பதனை மட்டுமே இவர்கள் சிந்திப்பார்களோ என்றே நமக்கு தோன்றுகிறது. பிரீமியம் டிக்கெட்டை பொறுத்த வரை மக்களின் தேவையை பொறுத்தும், அது போல் ரயில் கிளம்பும் நேரம் நெருங்க, நெருங்க அதன் கட்டணமும் உயர்ந்து  கொண்டே போகும். இது சில நேரம் விமான கட்டணத்தை விடவும் அதிகமாகிவிடும்.

இதே நிலையை ஆம்னி பேருந்து நிறுவனங்கள் திருவிழா மற்றும் பண்டிகை காலங்களில் அவர்களின் இஷ்டத்திற்கு மக்களின் தேவையை பயன்படுத்தி விலையை நிர்ணயம் செய்கின்றன. அப்படி செய்யும் நிறுவனங்களை நாம் திருடர்கள், மோசடி செய்கிறார்கள் என்று சொல்வது உண்டு. அதே மோசடியைதான் மோடி அரசு செய்கின்றது.இவர்களை என்ன வென்று சொல்லது?.

தேர்தல் பிரசாரத்தின் போதும் அதன் பிறகும் பா.ஜ.க.வினர் தொடர்ந்து தமிழர்களை ஏமாற்ற முன் வைத்த விஷயம், ‘தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை மோடி கொண்டு வருவார்’ என்பதுதான். ஆனால் இதுவரை எந்த தீர்வும் காணப்படவில்லை.

இன்னும் தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யபடுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடரத்தான் செய்கின்றன. ஆக மொத்தம் மோடி என்பது ஒரு மாயைதான், அவரின் அரசு மக்களுக்கான அரசு இல்லை என்பதனை இந்த ஒரு வருட ஆட்சி நமக்கு உணர்த்துகிறது.

கடந்த காலங்களில் மக்கள் நல்வாழ்வு துறைகளுக்கு வழங்கப்பட்ட உதவிகள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. உதாரணத்திற்கு குழந்தைகள் மேம்பாட்டு துறைக்கான நிதி 16,646.6 கோடியிலிருந்து 8,448.77 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இவர்களின் அரசு குழந்தைகளின் மீது எந்த அளவு அக்கறை வைத்துள்ளது என்பது இதிலிருந்து தெரிகிறது.

மொத்தத்தில் மோடி அரசு எதையும் இந்திய மக்களுக்காக சாதிக்கவில்லை. அதே சமயம் அவரை முன்னிறுத்திய பெரும் நிறுவனங்களுக்கும், முதலாளிகளுக்கும் நிறையவே செய்திருக்கிறார். அதனால்தான் இந்திய தொழில் வர்த்தக அமைப்பான அசோசெம் மோடியின் ஒரு வருட அரசுக்கு 10க்கு 7 மதிப்பெண் வழங்கியுள்ளது.

இந்த வருட பட்ஜெட்டில் சமூக பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை குறைத்த பா.ஜ.க அரசு, கார்ப்பரேட் வரியை 30 சதவிகிதத்திலிருந்து, 25 சதவிகிதமாக குறைத்துள்ளது. இதனால் அரசுக்கு ஏற்படும் இழப்பை மக்களிடமே திணிக்க முற்படுகிறது மோடி அரசு.

மோடி சாதித்தது என்ன?

மோடி சாதிக்கவில்லை என்று சொல்லிவிடவும் முடியாது. அவர் பதவி ஏற்ற பிறகு இந்திய நாடாளுமன்றத்தில் பேசியதை விட வெளிநாட்டு நாடாளுமன்றத்தில் பேசியது அதிகம். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 15ற்கும் மேற்பட்ட  நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்ற பிரதமர் என்ற பெருமையையும் பெறுகிறார்.

“பிரதமரை அதிகம் டிவிட்டரில்தான் பார்க்க முடிகிறது., பாராளுமன்றத்தில் பார்க்க முடிவதில்லை” என்று முன்னாள் காங்கிரஸ் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆஸாத் சொல்வதில் உள்ள உண்மை புரிகிறது.

முன்னாள் டீ வியாபாரியான மோடி பத்து லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆடையை உடுத்திய ஒரே இந்திய பிரதமர். வெளி நாடுகளிலும் சென்று எதிர் கட்சிகளை தேர்தல் பிரச்சாரத்தை போன்றே தாக்கி பேசிய ஒரே பிரதமர் போன்ற பெருமைகளையும் பெற்றுள்ளார்.

மக்களின் நலனில் அக்கறையில்லாத, தன் நலனிலும், முதலாளிகளின் நலனில் மட்டும் அக்கறை கொண்ட அரசின் ஓராண்டு ஆட்சியிலேயே மக்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இனி வரும் நான்கு ஆண்டுகளும் எவ்வாறு இருக்குமா என்ற கவலையும் இல்லாமல் இல்லை.

(ஜூன் 2015 இதழில் வெளியான அட்டைப்பட கட்டுரை)

Comments are closed.