ஒரே ஆண்டில் எட்டு கவர்னர்களை கண்ட மிசோரம்

0

மத்தியில் ஆட்சி செய்யும் தேசிய ஜனநாயக அரசு நேற்று நான்கு மாநிலங்களுக்கு கவர்னர்களை நியமித்துள்ளது. இரண்டு கவர்னர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் சண்முகநாதன் மேகாலயாவின் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2000ம் ஆண்டில் பா.ஜ.க. சார்பில் ஒடிஸா மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்மு ஜார்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்க பா.ஜ.க. மூத்த தலைவர் தகாதா ராய் திரிபுரா கவர்னராகவும் முன்னாள் அஸ்ஸாம் முதன்மை; செயலாளர் ஜே.பி.ரகோவா அருணாசல பிரதேசத்தின் கவர்னராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜார்கண்ட் கவர்னராக இருந்த செய்யது அகமது மணிப்பூருக்கும் அருணாசல பிரதேச கவர்னராக இருந்த நிர்பய் சர்மா மிசோராமுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வருடத்தில் மிசோராமுக்கு இதுவரை எட்டு கவர்னர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மோடி பதவியேற்றதை தொடர்ந்து மிசோராம் கவர்னராக இருந்த புருஷோத்தமன் நாகலாந்துக்கு மாற்றப்பட்டார். இது குறித்து தன்னிடம் கலந்தாலோசனை செய்யவில்லை என்று கூறிய புருஷோத்தமன் தனது பதவியை ராஜினாமா செய்தார். மஹாராஷ்டிரா கவர்னராக இருந்த சங்கர்நாராயணன் மிசோராமுக்கு மாற்றப்பட்டதை ஏற்க மறுத்துவிட்டார்.
குஜராத் கவர்னராக இருந்த கமலா பெனிவால் மற்றும் அஜீஸ் குரைஷி ஆகியோர் மிசோராம் கவர்னர்களாக நியமிக்கப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டனர். கவர்னர்களை பதவியை விட்டும் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மோடி அரசாங்கம் மீது நீதிமன்றத்தில் முறையிட்டவர் குரைஷி என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் உள்துறை செயலாளர் வி.கே.துக்கால் மற்றும் முன்னாள் டெல்லி கமிஷ்னர் கே.கே. பால் ஆகியோரும் மிசோராம் கவர்னர்களாக பதவி வகித்தனர். தற்போது மேற்கு வங்க கவர்னர் கேசரிநாத் திரிபாதி மிசோராம் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார்.

(புகைப்படம்: மிசோராம் புதிய கவர்னர் நிர்பய் சர்மா)

Comments are closed.