ஒவ்வொரு காலையும் வழிபாட்டுத் தளங்களுக்கு ரோந்து செல்லுங்கள்:டில்லி  காவல்துறை தலைவர் அமுல்யா

0

டில்லி காவல்துறை ஆணையர் அமுல்யா பட்நாயக், தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளிடம் ஒவ்வொரு அதிகாலையும் நகரத்தில் உள்ள மசூதிகள், கோவில்கள், தேவாலையங்கள் போன்ற வழிபாட்டு தளங்களுக்கு ரோந்து செல்லுங்கள் என்றும் இதனை அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதனை “ Good Morning Patrolling” என்று அழைக்கும் காவல்துறை தலைவர் இது போன்ற ரோந்தின் போது வழிபாட்டு தளங்களில் ஆட்சேபனைக்குரிய பன்றி இறைச்சி அல்லது மாட்டிறைச்சி ஆகிய இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் என்றும் அப்படி இருந்தால் அதனை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் இதன் மூலம் தேவையற்ற பதற்றங்களை தவிர்க்கலாம் என்றும் கூறியுள்ளதாக தெரிகிறது

இவரின் இந்த நடவடிக்கைக்குப் பின்னணியில் வழிபாட்டு தளம் ஒன்றில் இருந்து இறைச்சி எடுக்கப்பட்ட சம்பவம் உள்ளது என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2014 இல் ஒக்லா பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் இறந்த பன்றியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மேலும்  2015 இல் சரிதா விஹார் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் இறைச்சிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தவிர இது போன்ற ரோந்துகளின் மூலம் திருட்டு முதலிய பல குற்றங்களை தவிர்க்க முடியும் என்று அவர் நம்புவதாக கூறப்பட்டுள்ளது. இது போன்ற குற்றங்கள் பொதுவாக அதிகாலை நேரங்களில் தான் நடைபெறுகிறது என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக ரோந்துப் பட்டியல் ஒன்று தயார் செய்யுமாறும் அனைத்து காவலர்களுக்கும் இது குறித்து தெரியப்படுத்துமாறும் அவர் கூறியுள்ளார். டில்லியில், 13 காவல்நிலைய மாவட்டங்களும், 165 காவல் நிலையங்களும் உள்ளன.

Comments are closed.