ஓபிஎஸ் மகன் கல்வெட்டு விவகாரம்: கோவில் நிர்வாகி கைது!

0

தேனி அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் ரவீந்திரநாத் பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் என்று கல்வெட்டில் பொறித்தது தொடர்பாக கோவில் நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், அதிமுக சார்பில் தேனி மக்களவை தொகுதியில போட்டியிட்டுள்ளார். அவருக்கு எதிராக அமமுக தரப்பில் தங்கத் தமிழ்செல்வனும், காங்கிரஸ் தரப்பில் முன்னாள் மாநில தலைவர் இ.வெ.கி.ச இளங்கோவனும் போட்டியிட்டுள்ளனர்.

இரு தினங்களுக்கு முன்பு குச்சனூர் கோவில் ஒன்றுக்கு நன்கொடை வழங்கியவர்களின் பெயர்களை கல்வெட்டில் பதிவு செய்து, கோவில் சுவற்றில் அவற்றை பதித்திருந்தனர். அதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் பெயருடன், நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற வாசகமும் இடம்பெற்றிருந்தது. தேர்தல் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தானாகவே நாடாளுமன்ற உறுப்பினராக ரவீந்திரநாத் தேர்வாகியிருக்கிறார் என்கிற ரீதியில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட, பின்னர் அவை வேறு ஒரு கல்வெட்டின் மூலம் மறைக்கப்பட்டன.

இத்தகைய சூழலில், இவ்விவகாரம் தொடர்பாக கோவில் நிர்வாகியும் முன்னாள் காவலருமான வேல்முருகனை, காவல்துறையினர் இன்று கைது செய்தனர். ரவீந்திரநாத் அளித்த புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது சின்னமனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Comments are closed.