ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியிடம் இந்திய குடியுரிமையை நிரூபிக்க கூறிய அஸ்ஸாம் காவல்துறை

0

ஓய்வு பெற்ற இந்திய இராணுவ அதிகாரி ஒருவரை  வெளிநாட்டினர் என்றும் அவர் தனது இந்திய குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என்றும் அஸ்ஸாம் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்திய இராணுவத்தில் 30  வருடங்களாக பணியாற்றி இராணுவ அதிகாரியாக ஓய்வுபெற்ற முஹம்மத் அஸ்மல் ஹக் என்பவருக்கு வெளிநாட்டினருக்கான நீதிமன்றத்தில் இருந்து அவர் வெளிநாட்டினர் என்றும் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியவர் என்றும் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அவர் தனது இந்திய குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என்றும் அவருக்கு கூறப்பட்டுள்ளது.

அஸ்ஸாமின் கம்றுப் மாவட்டத்தில் 1968 இல் பிறந்தவர் ஹக், இவரது தாயின் பெயர் 1951 ஆம் ஆண்டு தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படியிருக்க அஸ்ஸாம் காவல்துறை ஹக் 1971 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் குடியேறினார் என்று குற்றம்சாட்டி அவரை சந்தேகத்திற்கு இடமான வாக்காளர் என்று குறிப்பிட்டுள்ளது.

இது போன்றதொரு நிலைமையை ஹக் சந்திப்பது இது முதல் முறையல்ல என்றும் கூறப்படுகிறது. முன்னதாக 2012 ஆம் ஆண்டு அவரது மனைவியும் இது போன்றே சட்டவிரோதமாக குடியேறியவர் என்று குற்றம் சாட்டப்பட்டார். பின்னர் அவர் இந்திய குடிமகள் என்பது நிரூபணம் ஆனது.

ஹக்கின் இந்த நிலை குறித்து அவரது வழக்கறிஞர் அமான் வதூத் கூறுகையில், “பல இந்திய குடிமக்கள் அவர்களின் பெயர் மற்றும் வயதில் ஏற்படும் சிறு பிழைகளினால் இது போன்று வெளிநாட்டினர் என்று கூறப்படுகின்றனர்.” என்று கூறியுள்ளார்.

தனது இந்த நிலை குறித்து மிகவும் வருத்தமுற்ற ஹக், தனக்கு ஏற்பட்ட இந்த நிகழ்வால் மிகவும் ஏமாற்றமடைந்த தான் பலமுறை கண்ணீர் விட்டு அழுததாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அஸ்ஸாம் டிஜிபி முகேஷ் சஹாய், இந்த நோட்டீஸ் எதற்காக வழங்கப்பட்டது என்பது குறித்து தான் விசாரிப்பதாக உறுதியளித்துள்ளார். மேலும் இந்த இராணுவத்தின் கிழக்கு படைப் பிரிவு தலைமை ஹக்கின் தொடர்புக்கு சென்று அவருக்கு தேவையான உதவிகளை செய்வதாக தெரிவித்துள்ளது.

Comments are closed.