ஓராண்டு ஆட்சியில் ஒன்றுமில்லை: பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்

0

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஓராண்டு ஆட்சியில் நடைமுறையில் ஏதும் நடைபெறவில்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்ற போது பல்லியா தொகுதியின் உறுப்பினர் பரத் சிங் இந்த கருத்தை கூறினார்.
ஓராண்டு ஆட்சியின் சாதனைகள் என்று அரசாங்கம் கூறி வரும் அதே சமயம் உண்மையில் களத்தில் எதையும் காண முடியவில்லை என்று அவர் கூறினார். பரத் சிங்கின் இந்த கூற்றிற்கு உத்தர பிரதேசத்தை சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் மேஜையை தட்டி வரவேற்றது கட்சியின் தலைவர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார். வழக்கம்போல் அவர் எதுவும் கூறாமல் மௌனமாக இருந்தார்.
அரசாங்கத்தின் செயல்பாடுகள் பல தரப்பினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் விளக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பா.ஜ.க. உத்தரவிட்டுள்ளது. நேற்றைய கூட்டத்தின் போதும் மூத்த அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, அருண் ஜேட்லி ஆகியோர் இது குறித்து கூறிய போது, பிரதம மந்திரியின் கிராம சாலை திட்டத்தின் கீழ் உத்தர பிரதேசத்தில் ஒரு இன்ச் ரோடு கூட போடப்படவில்லை என்று பரத் சிங் தெரிவித்தார்.
பரத் சிங்கின் கருத்துகளை தொடர்ந்து நேற்றைய கூட்டம் அவசர அவசரமாக முடிக்கப்பட்டது. மோடியின் ஓராண்டு ஆட்சி திருப்திகரமாக இல்லை என்று பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் அருண் சோரி சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தது கவனிக்கதக்கது.

Comments are closed.