கடந்த தசாப்தத்தின் 90% வெறுப்பு வன்முறைகள் மோடி ஆட்சியிலேயே நடைபெற்றது:மனித உரிமை கண்காணிப்பகம் அறிக்கை

0

கடந்த தசாப்தத்தின் 90% வெறுப்பு வன்முறைகள் மோடி ஆட்சியிலேயே நடைபெற்றது:அறிக்கை

கடந்த தசாப்தத்தில் சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட 90% வெறுப்பு தாக்குதல்கள் மோடியின் ஆட்சியிலேயே நடைபெற்றுள்ளது என்று மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்ட 104 பக்க அறிக்கையில், 2014 மோடி ஆட்சி பொருப்பெற்றதும் பசு பாதுகாவலர்கள் என்று தங்களை கூறிக்கொள்பவர்கள் சிறுபான்மையினர் மீது நடத்திய தாக்குதல்கள் கடுமையாக உயர்ந்தது என்று தெரிவித்துள்ளது. அத்துடன் இது போன்ற தாக்குதல்களின் போது காவல்துறை அதிகாரிகள் அதனை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்காமல் அந்த தாக்குதல்களை நியாயப்படுத்தியும் இன்னும் பல நேரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களையும் குடும்பத்தாரையுமே கைது செய்தும் இத்தகைய தாக்குதல்களை மறைமுகமாக ஊக்குவித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இந்த அறிக்கை சமீபத்தில் நடைபெற்ற 11 தாக்குதல்களையும் அதன் மீதான அரசின் நடவடிக்கைகளையும் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது. 2015 மே மாதம் முதல் 2018 டிசம்பர் மாதம் வரை குறைந்தப்சம் 44 பேர் இது போன்ற வெறுப்பு வன்முறைகளில் பலியாகியுள்ளனர் என்றும் இதில் பெரும்பான்மையினர் முஸ்லீம்கள் என்றும் இவர்கள் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி கொலை செய்யப்பட்டனர் என்று மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. கொலை செய்யப்பட்டவர்கள் பலரின் உடல் மரங்களில் தொங்கவிடப்பட்டும், சிதைக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் உள்ளது இந்த தாக்குதல்களில் உள்ள வெறுப்பின் உச்த்தை காட்டுகிறது.

மேலும் ஏறத்தாழ அனைத்து தாக்குதல்களிலும் பாதிக்கப்பட்டோர்களின் குடும்பம் நீதியை நாடும் போது அவர்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது என்றும் பல வழக்குகளில் காவல்துறையே முறையான நடவடிக்கைகளை எடுக்கமலும், கால தாமதப்படுத்தியும் குற்றவாளிகளுக்கு உதவுகின்றனர் என்று தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் வன்முறையாளர்களின் அரசியல் தொடர்புகள் தான் என்று மனித உரிமை கண்காணிப்பகத்தின் தெற்காசிய இயக்குனர் மீனாச்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

NDTV நடத்திய மற்றொரு ஆய்வில், மக்களை மதவாரியாக பிரிக்கும் பேச்சுக்கள் மற்றும் சொற்பொழிவுகள் 2014 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் 500% அதிகரித்துள்ளது என்று தெரியவந்துள்ளது. இதில் 90% பேச்சுகள் ஆளும் பாஜகவினரிடமிருந்தே வந்துள்ளது. இது போன்ற வெறுப்பு பேச்சுக்களுடன் கடுமையான பசு பாதுகாவல் சட்டங்கள் வன்முறை கும்பல்களை மேலும் ஊக்குவிக்கின்றது என்று இவ்வறிக்கை தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே முஸ்லிம் ஆண்கள் மற்றும் பெண்களை ஓடும் ரயிலில் தாக்குவது, தாழ்த்தப்பட்ட தலித் மக்களை தாக்கி நிர்வாணப்படுத்துவது, மாட்டு சாணம் மற்றும் சிறுநீரை உண்ண கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்டார்கள் என்று காரணம் கூறி இரு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு ஆண்கள் கொல்லப்படுவது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இது போன்ற பல தாக்குதல்கள் வீடியோவிலும் படமாக்கப்பட்டது மூலம் இந்த வன்முறை கும்பல் எந்த விதமான பின்விளைவுகளுக்கும் சட்ட நடவடிக்கைகளுக்கும் அஞ்சவில்லை என்று தெளிவாகின்றது. இது குறித்து சமூக ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் ஹர்ஷ் மந்தர் தெரிவிக்கையில், “ஒரு குற்றத்தை செய்யும் போது நீங்கள் பாதுக்கப்படுவீர்கள் என்றும் அந்த செயலுக்காக கதாநாயகனைப் போன்று கருதப்படுவீர்கள் என்றும் நீங்கள் உணராதவரை அந்த குற்றத்தை புரியும்போது உங்கள் முகத்தை வீடியோவில் பதிவு செய்ய மாட்டீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இது போன்ற தாக்குதல்களை எவ்விதத்திலும் கண்டிக்காமல் மெளனம் காத்து வந்த மோடி நீண்ட அமைதிக்குபின் அதனை கண்டித்தார். இதுவும் கூட சம்பிரதாயத்திற்காக செய்யப்பட்டது என்றும் சிறுபான்மையினர் மத்தியில் இருந்து அச்சத்தை விலக்க பாஜகவை ஆட்சியில் இருந்து நீக்குவது மட்டுமே தீர்வாகாது என்றும் ஹர்ஷ் மந்தர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.