கடந்த 15 வருடங்களில் கஷ்மீரில் 318 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: மனித உரிமை குழு அறிக்கை

0

கடந்த 15 வருடங்களில் கஷ்மீரில் 318 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: மனித உரிமை குழு அறிக்கை

உலகின் மிக அதிகப்படியான இராணுவ மயமாக்கப்பட்ட பகுதியில் கஷ்மீர் சிறுவர்கள் வசிகின்றார்கள் என்றும் கடந்த 15 வருடங்களில் கஷ்மீரில் 318 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் மனித உரிமை குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Terrorized: Impact of Violence on the Children of Jammu and Kashmir (2018) என்ற தலைப்பிட்ட தங்களது அறிக்கையில் Jammu Kashmir Coalition of Civil Society  என்ற மனித உரிமைக் குழு, ஜம்மு கஷ்மீர் குழந்தைகள் மீதான வன்முறையின் தாக்கம் குறித்து ஆய்வு செய்துள்ளது. இதில் 2003 இல் இருந்து 2017 ஆம் காலகட்டம் வரையில் நடைபெற்ற மோதலில் அப்பகுதியில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்ற கொலை, கைது, கூட்டு வன்முறை, பாலியல் வன்முறை ஆகியவற்றை குறித்த தகவல்களை தருகிறது.

இந்த அறிக்கையில், ஜம்மு கஷ்மீர் குழந்தைகள் சுமார் ஏழு லட்சம் இராணுவ வீரர்களை கொண்ட உலகின் மிக அதிகப்படியான இராணுவ மயமாக்கப்பட்ட பகுதியில் வசிக்கின்றனர் என்றும் ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு வரையறுத்துள்ள குழந்தைகளுக்கு எதிரான ஆறு விதிமீறல்களும் இங்கு நடைபெற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 15 வருடங்களில் கஷ்மீரில் கொல்லப்பட்ட பொதுமக்களில் 6.95% பேர் சிறுவர்கள் என்றும் இந்த பதினைந்து வருடங்களில் மொத்தம் 318  சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதே காலகட்டத்தில் கஷ்மீரில் குறைந்தபட்சம் 16,436 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் இதில் சுமார் 8537 பேர் போராளிகள் என்று குற்றம்சாட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கீடுபடி கடந்த 15  வருடங்களில் காஷ்மீரில் நாள் ஒன்றிற்கு சராசரியாக மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இத்துடன் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கொல்லப்படும் முறையை பார்க்கையில் இவர்கள் அப்பகுதியில் எழுச்சியை ஒடுக்க நடத்தப்படும் அரச வன்முறையின் நேரடி இலக்கு என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

“ஜம்மு கஷ்மீரில் மாநில காவல்துறையாலும், இந்திய இராணுவத்தாலும் குறைந்தபட்சம் 144 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். இது கொல்லப்பட்ட மொத்த குழந்தைகளின் எண்ணிக்கையில் ஏறத்தாழ பாதியளவு 44.02 சதவிகிதமாக உள்ளது. இதில் பெரும்பான்மையாக 110 குழந்தைகள் அரச வன்முறையால் பல்வேறு வன்முறை சம்பவங்களின் போது கொல்லப்பட்டுள்ளனர். எட்டு குழந்தைகள் அரச படைகளால் பெல்லட் குண்டுகளால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.” என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இன்னும் 27 குழந்தைகள் உளார் ஏரி விபத்தின் போது பாதுகாப்பு படையினரின் பாராமுகத்தாலும், போராட்டங்களின் போது அரச படைகள் துரத்தியதால் செல்ல இடமின்றி நீர் நிலைகளில் குதித்ததாலும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.

மேலும் ஜம்மு கஷ்மீரில் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க சட்ட வழிமுறைகள் எதுவும் இல்லை என்றும் இதனால் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் அவர்கள் சிறுவர்கள் என்று கூட பார்க்கப்படாமல் PSA சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்றனர் என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

1990 களில் கஷ்மீர் பள்ளத்தாக்கில் ஆயுதம் தாங்கிய போராட்டம் தொடங்கிய போது அதனை ஒடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளில் சிறுவர்களே அரச வன்முறைக்கு முதல் பலியாகினர் என்றும் 90களின் தொடக்கத்தில் பொதுமக்கள் மீதான ஒடுக்குமுறைகள் பரவலாக இருந்தது என்றும் அவப்போது கூட்டுப் படுகொலைகள் நிகழ்வது வாடிக்கையாக இருந்தது என்றும் 1990 இல் மட்டுமே 12  கூட்டுப்படுகொலைகள் பாதுகாப்பு படையினரால் பொதுமக்கள் மீது நிகழ்த்தப்பட்டது என்றும் இதில் குழந்தைகள் உட்பட 421 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு பிரிட்டனை மையமாகக் கொண்டு இயங்கும் Save the CHildren அமைப்பு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும் 2,15,000 அநாதைகள் உள்ளனர் என்றும் இதில் 37% குழந்தைகள் தங்கள் இரு பெற்றோரையும் இழந்துவிட்டனர் என்றும் இது அக்குழந்தைகளின் உடல் மற்றும் மனநலத்தை நேரடியாக பாதித்துள்ளது என்றும் இக்குழந்தைகள் பல கோணங்களில் சமூக பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டுள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

கஷ்மீர் பள்ளத்தாக்கு இரானுவ மயமாக்கப்பட்டதில் முதல் பாதிப்பு குழந்திகளின் கல்வி தான் என்றும் இது 90 களின் தொடக்கத்தில் பெரும்பான்மையான பள்ளிகள் இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டதினால் ஏற்பட்ட விளைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளை இரணைவ மயமாக்குதல் அதிகப்படுத்தப்படும்போது மாணவர்கள் தங்களது படிப்பை பாதியில் நிறுத்துவதும் அதிகரித்தது என்றும் தெரிவித்துள்ளது. இராணுவத்தின் இந்த செயலினால் அப்பகுதி மக்களிடையே அதிருப்தி அதிகரித்த காரணத்தால் இரணுவம் பள்ளிகளில் இருந்து வெளியேறியது என்றும் அதானல் தற்போது இராணுவம் ஆக்கிரமித்துள்ள பள்ளிகள் குறைவாக உள்ளன என்று அவ்வறிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் தற்போதும் பள்ளிகளின் மிக அருகாமையில் தான் இராணுவ முகாம்கள் உள்ளது என்று Jammu Kashmir Coalition of Civil Society வின் அறிக்கை தெரிவித்துள்ளது.

Comments are closed.