கடமையைச் செய்ததால் தண்டிக்கப்பட்ட காவல்துறையினர்: குடும்பத்தினர் போராட்டம்

0

மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் பகுதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பணியாற்றி வந்த சுரேஷ் யாதவ் என்பவர் சமூக வலைத்தளமான வாட்ஸ்அப் மூலம் சிறும்பான்மையினருக்கு எதிராக மத மோதல்களை தூண்டும் பதிவுகளை பகிர்ந்துள்ளார். இவர் மீது புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து இவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். ஆனால் கைது செய்யப்பட்ட இவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர் என்பதினால் இவரை கைது செய்த காவல்துறையினர் மீது கொலை குற்றம், வழிப்பறி என்று பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. (பார்க்க செய்தி)

சுரேஷ் யாதவை காவல்துறையினர் கைது செய்த போது, “நீங்கள் யார் மீது கை வைத்துள்ளீர்கள் என்று உங்களுக்கு தெரியாது. நங்கள் நினைத்தால் முதலமைச்சர்களை, ஏன் பிரதமர்களை கூட பதவி இறக்க முடியும். நாங்கள் அரசை உருவாக்கவும் செய்வோம் உடைக்கவும் செய்வோம். நீங்கள் எல்லாம் மதிப்பில்லாதவர்கள். பொறுத்திருந்து பாருங்கள். உங்கள் சீருடைகளை நாங்கள் அகற்றவில்லை என்றால் நாங்கள் சங்க்பரிவாரத்தில் இருந்து விலகிவிடுகிறோம்” என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் மிரட்டியுள்ளனர்.

சுரேஷ் யாதவை கைது செய்ததை அடுத்து தங்கள் மேல் போடப்பட்டுள்ள வழக்குகளால் தலைமறைவாகியுள்ளனர் அந்த காவல்துறையினர். இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இந்த காவல்துறையினரின் குடும்பத்தினர் மூன்று பக்க மனுவை டி.ஜி.பி. மற்றும் காவல்துறை ஐ.ஜி இடம் சமர்பித்துள்ளனர். தங்கள் பணியை துணிச்சலாக செய்ததற்காக ஏன் இவர்கள் வேட்டையாடப்படுகிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், “காவல்துறையினர் நக்சல்களை விட வலது சாரி சங் பரிவார அமைப்பினரைக் கண்டு அச்சமுற்றுள்ளனர்” என்று அதில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சுரேஷ் யாதவ் மற்றும் அவரது கூட்டாளிகளை பணியில் இருந்த காவல்துறையினரை தாக்கியதற்காக அவர்கள் மீது வழக்கு பதியப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து மத்திய பிரதேச காவல்துறை ஐ.ஜி ஜனார்த்தன் கூறுகையில், இவ்விஷயத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல்துறையினர்களின் மனைவிகள், உறவினர்கள் என ஏறத்தாள 20 பெண்கள் தன்னை சந்தித்ததாகவும் தங்களது கணவர்கள் மீது போலியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர்களது மனுவை இவ்வழக்கை விசாரணை செய்யும் SIT யிடம் தான் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த சுரேஷ் யாதவ் கைது செய்யப்பட்ட பின் இது தொடர்பாக விசாரிக்க SIT குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழு எஸ்.பி.ராஜேஷ் ஷர்மா மற்றும் அப்பகுதி காவல் நிலைய பொறுப்பு அதிகாரி ஜியா உல் ஹக் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்தது. மேலும் ஐ.ஜி. டி.சி. சர்கார் மற்றும் மாவட்ட துணை எஸ்.பி. யாதவ் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனையடுத்து ஜனார்த்தன் காவல்துறை ஐ.ஜி. யாக அக்டோபர் 7 ஆம் தேதி  பொறுபேற்றார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் பாலகாட் பகுதி காவல்துறையினர் இவ்வழக்கில் பாதிக்கப்பட்டுள்ள தங்களின் சக காவல்துரையினர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதோடு காவல்துறையின் மனநிலை குறித்தும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரை கையாளும் போது செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்ற எழுதப்படாத சட்டங்களை குறிப்பிட்டும் துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

சுரேஷ் யாதவின் கைது சம்பவத்தின் போது யாதவின் கூட்டாளிகள் காவல்துறையினரை தாக்கியதாகவும் அவர்களை மோசமான சொற்களை கொண்டு வசைபாடியதாகவும் காவல்துறையினரை பணிசெய்ய விடாமல் தடுத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், “கிட்டத்தட்ட 1000 பேர் கொண்ட ஆர்.எஸ்.எஸ். வி.ஹெச்.பி., பஜ்ரங்தள், கவ்ரக்ஷா சமிதி மற்றும் பா.ஜ.க குண்டர்கள் காவல் நிலையத்தை எரித்துவிடுவதாகவும் கலவரம் நடத்தப் போவதாக மிரட்டியதாகவும் இறுதியில் காவல்துறையினரால் காவல்நிலையம் காப்பாற்றபப்ட்டது என்றும் ஆனால் அதற்கு பதிலாக காவல்துறையினர் மீது கொலை முயற்சி வழக்கு, கொள்ளை வழக்கு, பதிவு செய்யப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

காவல்துறையினர் மீது சுரேஷ் யாதவை தாக்கியதாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகே சுரேஷ் யாதவ் மருத்துவமனைக்கே எடுத்துச் செல்லப்பட்டுள்ளார் என்றும் அதுவும் முன்னால் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரும் தற்போது பா.ஜ.க வில் உள்ள ஒருவரது மருத்துவமனைக்கு அவர் எடுத்துச் செல்லப்பட்டுள்ளார் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதே போன்று 2015 இல் இரண்டு பஜ்ரங்தள் அமைப்பினர் மற்றும் ஒரு காவலர் இடையேயான மற்றுமொரு மோதலையும் குறிப்பிட்டுள்ள அவர்கள்,  இந்த சம்பவத்தில் பஜ்ரங்தள் அமைப்பினர் அப்பகுதி காவல்துறை சாவடி ஒன்றை சூறையாடியதாகவும், குறிப்பிட்ட காவலரை மிரட்டி அவரது மனைவியிடம் அவரது வீட்டில் வைத்தே மோசமாக நடந்து கொண்டதாகவும் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை கிழித்து எரிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

காவல்துறையினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ். இடையேயான இந்த மோதல் குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரஷாந்த் சிங், “கைது சம்பவத்தின் போது சில வார்த்தைகள் கூறப்பட்டிருக்கலாம். தற்போது இந்த சம்பவம் ஆர்.எஸ்.எஸ். மற்றும் காவல்துறை இடையேயான மோதலாக சித்தரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் நிஜத்தில் அப்படி அல்ல. சிலர் இதனை அரசியலாக்குகின்றனர்.” என்று கூறியுள்ளார். மேலும் “குறிப்பிட்ட அந்த பதிவை யாதவ் உருவக்கவில்லை. அவர் பகிரமட்டுமே செய்துள்ளார். அப்படியிருக்க அவரை ஏன் இவ்வழக்கில் தனிமைப்படுத்த வேண்டும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Comments are closed.