கடையநல்லூர் மசூத் கஸ்டடி மரண வழக்கு: டி.எஸ்.பி. மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

0

கடையநல்லூரை சேர்ந்த மசூத் என்பவரை ஒரு வழக்கில் விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்ற கடையநல்லூர் காவல்துறையினர் ஆரல்வாய்மொழி காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இவரை கீரிப்பாறை பகுதியில் வைத்து காவல்துறையினர் அடித்து கொலை செய்ததாக அவர் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். 2005ல் நடைபெற்ற இந்த சம்பவத்தை உயர்நீதி மன்றத்தின் உத்தரவின் பெயரில் கோட்டாட்சியர் விசாரித்தார்.
மசூத் காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்டதை உறுதி செய்த கோட்டாட்சியர் மசூதின் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டதோடு அவர் மனைவி அசனம்மாளுக்கு 7.86 இலட்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி குற்றம்சாட்டப்பட்டுள்ள டி.எஸ்.பி. பிரதாப் சிங் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் பிரதாப் சிங்கின் மனுவை நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன் மற்றும் என்.கிருபாகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு நபரான க்யூ பிரிவு டி.எஸ்.பி. சந்திரபால் ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கொலை செய்யப்பட்ட மசூதின் மனைவி அசனம்மாளுக்கு மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு (NCHRO) சட்ட உதவிகளை வழங்கி வருகிறது.

Comments are closed.