கடையில் பணம் கொடுக்கும் போது பிராமணர் கையை தவறுதலாக தொட்டதினால் தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல்

0

ஆக்ராவின் பின்ஹந்த் பகுதியில் உள்ள குயூரி கிராமத்தில் ஒரு பிராமணர் கையை தலித் சிறுவன் தவறுதலாக தொட்டதற்கு கர்பிணிப் பெண் உட்பட அந்த சிறுவனின் குடும்பத்தினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வால்மீகி பிரிவை சேர்ந்த அந்த தலித் குடும்பத்தின் திருமண விஷேசத்தின் போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் திருமணத்தில் பங்கு பெற வந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து தாக்கப்பட்டவர்களில் ஒருவரான வினீதா கூறுகையில் ” என்னுடைய இளைய மகன் சோனு, அணில் ஷர்மா என்ற பிராமணரின் இனிப்பு கடைக்கு திருமண விசேஷத்திற்காக இனிப்பு வாங்க சென்றிருந்தான். வாங்கிய இனிப்புக்கு பணம் கொடுக்கையில் என் மகனின் கை அணில் ஷர்மாவின் கையில் தவறுதலாக பட்டு விட்டது. இதனால் ஆத்திரமடைந்த அணில் ஷர்மா என் மகனை சரமாரியாக தாக்கியுள்ளார்” என்று கூறியுள்ளார்.

வீடு திரும்பிய அந்த சிறுவன் சோனு தன் தாயிடம் நடந்தவற்றை கூறவே வினீதாவும் அவருடன் சில பெண்களும் அந்த இனிப்பு கடைக்கு நியாயம் கேட்க சென்றுள்ளனர். அதன் பின் சில ஆண்களுடன் சோனுவின் வீட்டிற்கு வந்த அணில் ஷர்மா அங்கிருந்தவர்களை மரக்கட்டைகளால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அந்த வீட்டில் இருந்த கர்பிணிப் பெண்ணையும் விட்டுவைக்கவில்லை. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அவரது வயிற்றில் கடுமையாக உதைத்துள்ளனர். சிறுவன் சோனு, அவனது தந்தை உட்பட தாக்கப்பட்ட அந்த பெண்ணையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக வினீதா கூறியுள்ளார்.

இது குறித்து அப்பகுதி சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ மகேந்திர அரித்மன் சிங் இடம் கருத்து கேட்ட பொழுது அங்கு நடந்தவை பற்றி தனக்கு தெரியாது என்றும் ஒரு தலித் குடும்பம் உயர் ஜாதியினரால் தாக்கபட்டதாக செய்திகள் வந்தது என்றும் உடனே தான் அப்பகுதி காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு குற்றவாளிகளை கைது செய்யுமாறு கூறியதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக இது வரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் இது குடி போதையில் இருந்த தலித்களுக்குள் நடந்த ஒரு சாதாரண கைகலப்பு என்றும் அதில் ஒருவர் ஒரு பிராமனருடன் தவறுதலாக நடந்துள்ளார் என்றும் அப்பகுதி காவல்துறை அதிகாரி சத்யேந்தர் சிங் கூறியுள்ளார்.

Comments are closed.