கட்சி கூட்டத்தை விட்டு வெளியேறிய யோகி அதித்யநாத். உ.பி. பா.ஜ.க.வில் மோதலா?

0

உத்திர பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க விற்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தின் வெளிப்பாடாக அக்கட்சி எம்.பி.யோகி அதித்யானத் கட்சியின் செயற்குழு  கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பா.ஜ.க. வின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட யோகி அதித்யாநாத் அக்கட்சியின் தலைவர்களின் முடிவில் அதிருப்தி கொண்டதாகவும் அதனால் அக்கூட்டம் முடியும் வரை காத்திருக்காமல் பாதியிலேயே வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.

அதித்யாநாத்தின் ஹிந்து யுவ வாகினி அமைப்பின் உத்திர பிரதேச தலைவர் சுனில் சிங், இது குறித்து கூறுகையில், “சனிக்கிழமை யோகி அதித்யநாத் டில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்குகொள்ளவில்லை.” என்றும் “12 மணியளவில் அவர் லக்னோவிற்கு செல்ல இருந்த விமானம் மூலம் லக்னோ சென்றுவிட்டார்” என்று கூறியுள்ளார்.

ஹிந்து யுவ வாகினி என்ற இயக்கத்தை தனிப்பட்ட முறையில் நடத்தி வரும் யோகி அதித்யநாத் அந்த அமைப்பு மூலம் கோரக்பூர் மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்து வந்தார். பா.ஜ.க. வின் உத்திர பிரதேச முதல்வர் வேட்பாளாராக தன்னை அறிவிக்க வேண்டும் என்று அவர் பா.ஜ.க. விடம் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. ஆனால் அவரின் கோரிக்கைக்கு சரியான பதில் வராததாலும் மோடியின் அமைச்சரவையில் அவருக்கு மந்திரி பதவி கூட கிடைக்காததாலும் அவர் அதிருப்தியில் இருந்தார் என்று கூறப்படுகிறது.

10 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட 27 பேர் கொண்ட பா.ஜ.க. உத்திர பிரதேச தேர்தல் கமிட்டி குழுவிலும் அவரது பெயர் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் கோராக்பூர் பகுதியில் அதித்யாநாத்தின் ஆளுகைக்கு போட்டியாக திகழும் ஷிவ் பிரதாப் சுக்லா மற்றும் ராமபதிராம் திரிபாதி ஆகிய இரண்டு பிராமண தலைவர்கள் அக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக யோகி அதித்யாநாத்திற்கு நெருக்கமானவர்கள், பா.ஜ.க. வின் இந்த செயல் அதற்கு பாதகமாக முடியும் என்றும் அதித்யாநாத் மற்றும் அவரது ஹிந்து யுவ வாகினி அமைப்பு அப்பகுதியில் செல்வாக்கு மிகுந்தது என்றும் அதனால் இந்த கருத்து வேறுபாடு தீர்க்கப்படவில்லை என்றால் அதற்கு விலையாக பா.ஜ.க. பல தொகுதிகளை இழக்க நேரிடும் என்று கூறியுள்ளனர்.

Comments are closed.