கணபதி பூஜைக்கு நிதியுதவி வழங்காததால் அவமானப்படுத்தப்பட்ட முஸ்லிம் தொழிலாளர்கள்

1

புனே: உத்திர பிரதேசத்தை சேர்ந்த 11 பேர் கணபதி பூஜைக்கு நிதிஉதவி வழங்காததால் கணபதி பூஜை ஒருங்கிணைப்பாளர்களால் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களில் பலர் தங்கள் வேலையை விட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிச் சென்றுவிட்டனர்.

கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி கணேஷ் மண்டல் அமைப்பை சேர்ந்தவர்கள் க்ரோவுன் பேக்கர்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களிடம் கணபதி பூஜைக்கு நிதி உதவி கேட்டுள்ளனர். அதுவும் குறிப்பாக ஆளுக்கு 100 ரூபாய் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளனர். ஆனால் தங்களால் 50 ரூபாய் மட்டுமே தர முடியும் என்று இவர்கள் கூறவே பூஜைக்கு பணம் கேட்டு வந்த குண்டர்கள் இவர்களை மிரட்டி பொதுமக்கள் முன்னிலையில் தோப்புகரணம் போட வைத்துள்ளனர். மேலும் அதனை தங்கள் போன்களில் படம் எடுத்து தங்களது நண்பர்களுடம் பகிர்ந்து இவர்களை இன்னும் அவமானப்படுத்தியுள்ளனர்.

மாற்று மத பூஜைக்காக முஸ்லிம் இளைஞர்கள் நிதியுதவி வழங்க முன் வந்தும் தாங்கள் நிர்ணயித்த பணம் தர வேண்டும் என்று நிர்பந்தித்து அவர்களை பொதுமக்கள் முன்னிலையில் மிரட்டி கேவலப்படுத்தியுள்ளனர் இந்த குண்டர்கள்.

இவர்கள் படம் பிடித்த வீடியோ வைரலாக பரவியதும் இந்த சம்பவம் தொடர்பாக சனிக்கிழமை புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் ஆனால் இது வரை எந்த ஒரு கைதும் நடைபெறவில்லை என்றும் காவல்துறை கூறியுள்ளது. மேலும் இவர்கள் புரிந்த குற்றம் பிணையில் வெளிவரக்கூடிய குற்றம் தான் என்றும் குற்றம் புரிந்த மூவருக்கும் திங்கள் நீதிமன்றம் முன் ஆஜராகும்படி நோடீஸ் வழங்கப்பட்டுள்ளது என்று காவல்துறை துணை ஆய்வாளர் மகேஷ் சுவாமி கூறியுள்ளார்.

தங்களுக்கு நிகழ்ந்த இந்த அவமானத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் பல ஊழியர்கள் தங்கள் ஊர்களுக்கே திரும்பிச் சென்று விட்டனர். அவர்கள் பணியாற்றிய நிறுவனத்தின் உரிமையாளரோ அந்த பிரச்சனை முடிந்துவிட்டது என்றும் அதனை இன்னும் நீட்டிக்க தான் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

Discussion1 Comment

  1. பாதிக்கப்பட்டவர்களை வைத்து தனியாக வழக்கு தொடுக்க வேண்டும்.நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.