கத்தாருடன் உறவை முறிக்கும் சவூதி, எகிப்து தலைமையிலான நாடுகள்

0

சவூதி அரேபியா, எகிப்து தலைமையிலான ஐக்கிய அமீரகம், ஏமன், லிபியா, பஹ்ரைன், மற்றும் மாலதீவு முதலிய நாடுகள் கத்தார் தீவிரவாதத்திற்கு துணை போகிறது என்று கூறி அந்நாட்டின் உடனான தங்களின் உறவுகளை துண்டித்துள்ளன. இந்த நாடுகளின் மேற்கண்ட இந்த நடவடிக்கை டொனால்ட் டிரம்ப்பின் சவூதி வருகையால் நிகழ்ந்தது என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

சவூதி முதலிய நாடுகளும் எகிப்தும் பல காலமாக அவர்களின் அரசியல் எதிரியாக கருதும் இஹ்வானுள் முஸ்லிமீன் இயக்கத்திற்கான கத்தாரின் ஆதரவு நிலைபாட்டை குறை கூறி வந்தன. தற்போது மாலதீவு மற்றும் லிபிய அரசையும் இணைத்து இந்த நாடுகள் எடுத்துள்ள நடவடிக்கை பெரியளவிலான அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றது. மேலும் இந்த முடிவை எடுத்துள்ள நாடுகளில் பல OPEC இன் உறுப்பு நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கத்தார் உடனான போக்குவரத்து உட்பட அனைத்து உறவுகளையும் முறித்துள்ள இந்த நாடுகள் தங்கள் நாட்டில் வசிக்கும் கத்தார் நாட்டவர்கள் வெளியேறுவதற்கு இரண்டு வாரம் அவகாசம் கொடுத்துள்ளன. இன்னும் சவூதி தலைமையிலான கூட்டுப்படையில் இருந்தும் கத்தார் வெளியேற்றப்பட்டுள்ளது.

கத்தார் பல போராளி குழுக்களை ஆதரிக்கின்றது என்றும் அவர்களின் கருத்துக்களை ஒளிபரப்புகின்றது என்றும் சவூதி குற்றம் சாட்டியுள்ளது, இந்த குற்றச்சாட்டு கத்தாரின் அரசு தொலைக்காட்சியான அல்-ஜசீரா தொலைகாட்சியை மறைமுகமாக சுட்டிக்காட்டுவது என்று கருதப்படுகிறது. மேலும் அல்-ஜசீரா தொலைக்காட்சி மற்றும் அதன் இணையதள பக்கங்கள் சவுதியில் முடக்கப்பட்டுள்ளன.

இது குறித்து சவூதி அரேபியாவின் அரசு செய்து நிறுவனம், இஹ்வானுல் முஸ்லிமீன், ஐஎஸ்ஐஎஸ், அல்கொய்தா போன்ற பல்வேறு தீவிரவாத இயக்கங்கள் மற்றும் பிரிவினைவாத இயக்கங்களை கத்தார் ஆதரிக்கின்றது என்றும் இந்த இயக்கங்களின் திட்டங்கள் மற்றும் செய்திகளை தங்களின் ஊடகங்கள் வாயிலாக தொடர்ச்சியாக அந்நாடு வெளியிடுகின்றது என்றும் கூறியுள்ளது. மேலும் சவுதியின் கதிஃப் மற்றும் பஹ்ரைன் நாட்டில் உள்ள ஈரானின் ஆதரவு பெற்ற ஷியா பிரிவினைவாதிகளை கத்தார் ஆதரிக்கின்றது என்றும் சவூதி கூறியுள்ளது.

தங்கள் மீதான இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ள கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர், வெறும் பொய்கள் மேல் கட்டமைக்கப்பட்ட இவர்களின் பிரச்சாரம் தற்போது புனைவின் முழுமையை அடைந்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும் ஐக்கிய அமீரகத்தில் உள்ள தங்களின் குடிமக்கள் 14 நாட்களுக்குள் கத்தாருக்கு திரும்புமாறும், நேரடியாக கத்தாருக்கு பயணம் மேற்கொள்ள முடியாதவர்கள் குவைத் மற்றும் ஓமன் நாட்டின் மூலமாக கத்தாருக்கு பயணம் மேற்கொள்ளுமாறும் கத்தார் தெரிவித்துள்ளது.

இந்த உத்தரவுகளை அடுத்து அபு தாபியின் எதிஹாத் விமான சேவை, துபையின் எமிரேட்ஸ் விமான சேவை, Flydubai விமான சேவை அனைத்தும் காத்தாரின் தோகாவுக்கு செல்லும் அல்லது தோகாவில் இருந்து புறப்படும் விமான சேவைகளை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைத்துள்ளது. இதனை தொடர்ந்து கத்தார் விமான சேவையும் தங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சவுதிக்கு செல்லும் அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

கத்தார் மீதான இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரான், தற்போது நடப்பது கத்திச்சண்டையின் முதற்கட்ட முடிவு என்று கூறியுள்ளார். இது அமெரிக்க அதிபர் டிரம்பின் சவூதி வருகையை குறிப்பதாக கூறப்படுகிறது. டிரம்பின் சவூதி பயனத்தின் போது டிரம்ப் மற்றும் பல அமெரிக்க அதிகாரிகள் சவுதியின் பாரம்பரிய வாள் நடனத்தில் ஈடுபட்டனர்.

தற்போதையை இந்த பிளவு குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க தேசிய செயலாளர் ரெக்ஸ் டிள்ளர்சன், அமெரிக்கா, மத்திய கிழக்கில் உள்ள தங்களின் நட்பு நாடுகளுக்கிடையேயான விரிசல்களை சரிசெய்யுமாறு கேட்டுகொள்கிறது என்று கூறியுள்ளார்.

கத்தாருக்கு எதிரான இந்த நடவடிக்கையில் கத்தாரின் பங்குச் சந்தை நிலவரம் 7.5% வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போதைய இந்த நிலவரம் கடந்த 2014 ஆம் ஆண்டில் சவூதி, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அமீரகம் கத்தார் போராளி குழுக்களை ஆதரிக்கின்றது என்று கூறி தங்களின் தூதுவர்களை திரும்பபெற்றதை அடுத்து ஏற்ப்பட்டதை விட மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. 2014 இல் இந்த நாடுகளிடையே போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. மேலும் இந்நாடுகளின் குடிமக்களும் வெளியேற்றப்படவில்லை.

இந்த நிகழ்வு மூலம் கத்தாரின் சர்வதேச கவுரவம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. வருகிற 2022 இன் கால்பந்து உலககோப்பை போட்டி கத்தாரில் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையின் முன்னேற்றம் குறித்து அவ்வப்போது கத்தாருடன் விசாரித்துக்கொண்டு இருப்பதாக FIFA தெரிவித்துள்ளது.

2011 அராபிய வசந்தத்தின் போது கத்தார் ஊடகங்கள் இஸ்லாமிய இயக்கங்களை ஆதரித்தன. மேலும் எகிப்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் அரசை கவிழ்த்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த இராணுவ தளபதி அப்தெல் ஃபதாஹ் அல்-சிசி இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தை தீவிரவாத இயக்கம் என்று அறிவித்தார். தற்போது கத்தார் தனது ஊடகங்கள் மூலம் அரபு தேச பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வண்ணம் பிரிவினைவாத விதைகளை கத்தார் விதைத்து வருகிறது என்று எகிப்து தரப்பில் இருந்து குற்றம் சாட்டப்படுகிறது.

கத்தாரின் மீதான இந்த நடவடிக்கையை அடுத்து எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. திரவ இயற்க்கை எரிவாயுவின் மிகபெரிய விற்பனையாளர் கத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.