கருணை சேவை புரியும் கஃபீல் கான்!

0

கருணை சேவை புரியும் கஃபீல் கான்!

உத்திர பிரதேசத்தைச் சார்ந்த மருத்துவர் கஃபீல் கானைக் கேள்விப்படாதவர்கள் மிகக் குறைவு என்ற அளவுக்கு அவர் புகழ் பெற்றிருக்கிறார்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்தத் துயர நிகழ்வு நடந்தது உ.பி.யில். கோரக்பூரிலுள்ள பிஆர்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொத்துக் கொத்தாக குழந்தைகள் மரணித்தன.
மூளை அழற்சி (Encephalitis) என்ற நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அந்தக் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்குத் தேவையான ஆக்சிஜன் மருத்துவமனையில் இருப்பு இல்லாததால் குழந்தைகள் உயிர் இழக்க ஆரம்பித்தனர்.

அந்த மருத்துவமனையின் மூத்த மருத்துவரான கஃபீல் கான் மனிதாபிமானத்தோடு களமிறங்கினார். தன் சொந்தச் செலவில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வரவழைத்து குழந்தைகளைக் காப்பாற்றினார்.
இந்த மனிதாபிமான உயிர் காக்கும் சேவையை உலகமே பாராட்டியது. பல பெற்றோர் கண்ணீருடன் அவர் கரங்களைப் பற்றி நன்றி தெரிவித்த படங்கள் வெளியாயின. அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன.
ஆனால் உ.பி.யில் யோகி ஆதித்யநாத் தலைமையில் கொடுங்கோலாற்றும் கொடுமைக்கார ஃபாசிச பாஜக அரசு என்ன செய்தது? அவரைப் பாரட்டுவதற்குப் பதிலாக கைது செய்தது.

காரணம் என்ன? அவர்தான் அந்த மருத்துவமனையின் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவுக்கான மருத்துவர். அவரது தலைமையிலுள்ள பிரிவில் குழந்தைகள் இறந்ததனால் அவர்தான் அதற்குப் பொறுப்பு என்று கூறி அவரைக் கைது செய்தது காவல்துறை.

யோகியின் மீது உலகமே காறித் துப்பியது. கஃபீல் கான் ஏழு மாதங்கள் காராக்கிருகத்தில் காலத்தைக் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இப்போது குழந்தைகளுக்கு அதே மூளை அழற்சி நோய் வந்து பீகாரில் நிறைய குழந்தைகள் இறப்பதைக் கேள்விப்பட்ட மருத்துவர் கஃபீல் கான் உடனே பீகார் விரைந்தார். தன்னோடு உயிர் காக்கும் சேவை செய்யும் இன்னும் சில மருத்துவர்களையும் அழைத்துக்கொண்டு அவர் பீகாரில் சுற்றுப்பயணம் செய்து பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையளித்து வருகிறார்.
இதுவரை 300க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அவர்கள் உரிய சிகிச்சை அளித்து, இலவசமாக மருந்துகளும் அளித்து வருகின்றனர்.

தற்பொழுது அவர் பீகாரில் முஸாஃபர்பூரில் ஆறு மருத்துவர்கள் கொண்ட குழுவுடன் மருத்துவ முகாம் ஒன்று நடத்தினார்.

மருத்துவர் கஃபீல் கான் ஒரு முஸ்லிம் என்ற காரணத்தால் ஃபாசிச பாஜக அரசால் அநியாயமாக சிறையிலடைக்கப்பட்டார். ஏழு மாதங்களுக்குப் பிறகு அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் அவரை பிஆர்டி மருத்துவமனையில் மீண்டும் பணியில் இணைய அனுமதிக்கவில்லை யோகி அரசு. பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு அறிவிக்கப்படவில்லை. பணியும் செய்ய விடாமல், பணியிலிருந்தும் விடுவிக்காமல் கொடுமை செய்தது யோகி அரசு. இதனால் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி மிகுந்த சிரமத்திற்கு ஆளானார் மருத்துவர் கஃபீல்.

அத்தோடு நில்லாமல் அவரின் சகோதரர்கள் தாக்கப்பட்டனர். அவர்களின் வியாபாரங்கள் முடக்கப்பட்டன. இப்படி அவரின் குடும்பத்தார் மீதும் அட்டூழியங்களை அவிழ்த்துவிட்டார்கள் அநியாயக்கார யோகி அரசின் அதிகாரிகள்.

இந்த நெருக்கடியான நிலையில்தான் Crowdnewsing என்ற சமூக வலைத்தளம் மூலம் மக்களிடமிருந்து 20 லட்சம் ரூபாய் வரை நிதி சேகரிக்கப்பட்டு அவரிடம் அளிக்கப்பட்டது.
இதனைக்கொண்டு அவர் தன் கடன்களையெல்லாம் அடைத்தார். மக்கள் ஆதரவால் இன்று வரை முதுகெலும்புடன் தைரியமாக தலைநிமிர்ந்து நின்று யோகி அரசின் கொடுமைகளை எதிர்கொண்டு வருகிறார்.

கடந்த வருடமும் உ.பி.யில் இதே மூளை அழற்சி நோயால் பல ஏழைக் குழந்தைகள் இறந்தன. வசதியுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசிகளைப் போடுகிறார்கள். ஒரு தடுப்பூசி 1200 ரூபாய். அடுத்த வேளை கஞ்சிக்கு அல்லாடிக்கொண்டிருக்கும் ஏழைகள் இந்தத் தொகைக்கு எங்கே போவார்கள்?
“அவர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட அரசு மருத்துவமனைகளை நாட வேண்டிய நிலையே உள்ளது. ஆனால் அரசு மருத்துவமனைகளில் போதிய இருப்பு இல்லாததால் ஏழைக் குழந்தைகளுக்கு அவை கிடைப்பதில்லை. அதனால்தான் ஏழைக் குழந்தைகள் இந்நோய்க்கு எளிதாக இரையாகின்றனர்” என்கிறார் மருத்துவர் கஃபீல்.

தற்பொழுது பீகாரில் பாதிக்கப்பட்ட முஸாஃபர்பூரில் தங்கி, மருத்துவ முகாம்களை நடத்தி குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளித்தும், மேல்சிகிச்சைக்கான அறிவுறுத்தலும் கொடுத்து வருகின்றனர் கஃபீல் கான் தலைமையிலான மருத்துவக் குழுவினர்.

மருத்துவர் கஃபீல் கான் பீகாரில் தங்கள் குழு அளித்து வரும் சிகிச்சைகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் செய்திகளை அப்டேட் செய்து வருகிறார்.

சிகிச்சையின் பத்தாவது நாள் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அளித்த விவரம் வருமாறு:
343 குழந்தைகள் பரிசோதிக்கப்பட்டன.

  • 328 குழந்தைகளுக்கு மருந்துகள் அளிக்கப்பட்டன.
  • கடுமையாக நோய் பாதிக்கப்பட்டுள்ள 22 குழந்தைகளுக்கு மேல்சிகிச்சைக்காக எழுதிக்கொடுக்கப்பட்டுள்ளது.
  • 250 டிஜிட்டல் தெர்மோமீட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • ஓஆர்எஸ் என்றழைக்கப்படும் உப்புநீர் பாக்கெட் 1000 வழங்கப்பட்டுள்ளன.
  • ஆயிரக்கணக்கான மக்கள் கட்டியணைத்தனர்.

இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இப்படி மக்கள் சேவையில் தன்னை இணைத்துக்கொண்டு உயிர்காக்கும் சேவை செய்யும் ஒரு மருத்துவரைத் தலையில் வைத்துக் கொண்டாட வேண்டாம், அவருக்கு உரிய மரியாதை கொடுத்து, முஸ்லிம் என்ற பாரபட்சம் காட்டாமல் அவரது சேவையை ஊக்குவிக்க வேண்டும் யோகி அரசு.

ஆனால் குழந்தைகளுக்கு மூளை அழற்சி போன்ற கொடிய நோய்கள் வராமலிருக்க மாட்டு மூத்திரத்தைக் குடித்தால் போதும் என்று சொல்லாமல் இருந்தால் சரி!

-MSAH

Comments are closed.