கருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்!நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!

0

பத்திரிகை செய்தி

அக்டோபர்  09, 2018
சென்னை

கருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்!நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!

நக்கீரன் வாரமிருமுறை இதழின் ஆசிரியர் கோபால் இன்று (அக்டோபர் 9, 2018) புனே நகருக்கு விமானம் மூலம் செல்ல சென்னை விமான நிலையம் சென்ற போது கைது செய்யப்பட்டார். ஆளுநர் மாளிகையில் இருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவிக்கின்றது. கல்லூரி மாணவிகளை பாலியல் உறவுக்கு நிர்ப்பந்தித்ததாக பேராசிரியை நிர்மலா தேவி மீது குற்றம் சாட்டப்பட்டு அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்றது. பேராசிரியை நிர்மலா தேவி கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை தனக்கு தெரியும் என்றும் ஆளுநர் மாளிகைக்கு தான் சென்று வந்ததையும் விசாரணையில் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி மாநில ஆளுநரின் பெயரும் இந்த வழக்கில் தொடர்பு படுத்தப்பட்டது. இந்த வழக்கு மற்றும் அதன் விசாரணை குறித்து நக்கீரன் இதழில் தொடர்ந்து எழுதியதற்காகத்தான் அதன் ஆசிரியர் கோபால் இன்று (09.10.2018) கைது செய்யப்பட்டதை காவல்துறையிடம் கொடுக்கப்பட்ட புகார் மூலம் அறிய முடிகிறது.

கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 124 -ன் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. ஆனால், எழும்பூர் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் அவர்கள் இந்த பிரிவின் கீழ் அவரை கைது செய்திட இயலாது என்று கூறி அவரை விடுதலை செய்தார். ஒரு செய்தியை வெளியிட்டதற்காக ஆளுநர் பணியில் குறுக்கிட்டதாக குற்றம் சுமத்தி ஒரு பத்திரிகை ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்திருப்பதன் மூலம் கருத்துரிமைக்கு எதிரான தனது சகிப்பின்மையை மாநில அரசு வெளிப்படுத்தியுள்ளது. மேலும் தமிழகத்தில் நடைபெறுவது மக்களாட்சி அல்ல, கவர்னரின் ஆட்சிதான் என்பதை இந்த செயல் மூலம் மாநில அரசு மீண்டும் நிரூபித்துள்ளது. தனக்கு எதிராக கருப்பு கொடி காட்டுபவர்கள் மீது கெடுபிடி,மாநில அரசின் செயல்பாடுகளில் தலையிடுவது என்று தொடர்ந்து தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் மாநில ஆளுநரை பாப்புலர் ஃபரண்ட் வன்மையாக கண்டிக்கின்றது.

பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளில் மாற்றுக் கருத்து இருந்தால் அல்லது தவறுகள் இருந்தால் அதனை முறையாக எதிர்கொள்ள வேண்டுமே அல்லாமல்,பத்திரிகையாளர்களை கைது செய்வதென்பது கோழைத்தனத்தின் வெளிப்பாடே ஆகும். கருத்துரிமையை நசுக்கும் இந்துத்துவ சங்பரிவார்களின் போக்கை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அப்படியே வெளிப்படுத்தியுள்ளார். நிர்மலா தேவி விவகாரம்,பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடு என்று எதிலும் முறையான பதிலை அளிக்காத ஆளுநர் புரோகித் தனக்கு எதிராக கருத்துகளை வெளிப்படுத்துபவர்களின் குரலை நசுக்குவது கொடுமையின் உச்சகட்டம்.

தனக்கு வேண்டாத பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மீது அவதூறு வழக்கு போடுவதை முந்தைய அதிமுக அரசு வழக்கமாக கொண்டிருந்தது. தற்போதைய அரசு அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதோ என்ற அச்சத்தைத்தான் தமிழகத்தின் சமீபத்திய செயல்பாடுகள் ஏற்படுத்துகின்றன. நீதிமன்றம்,காவல்துறை,பத்திரிகையாளர்கள் ஆகியோரை ஆபாசமாகவும் வெளிப்படையாகவும் பேசிய மற்றும் கருத்துக்களை பதிவு செய்த எச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்காத அரசும் காவல்துறையும் நக்கீரன் கோபால் போன்றவர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுப்பது அவர்களின் பாரபட்சமான போக்கினை வெளிப்படுத்தியுள்ளது. ஆளுநரை திருப்திபடுத்துவதற்காக நக்கீரன் கோபாலை கைது செய்த மாநில அரசிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் தனது கண்டனங்களை தெரிவித்து கொள்வதுடன் இனிமேலாவது தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்வதுடன் பத்திரிகை சுதந்திரத்தையும் பேணிக் காத்திட வேண்டும் என்றும் மாநில அரசை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றது.

 

இப்படிக்கு
எம். முஹம்மது இஸ்மாயில்,
மாநில தலைவர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு

Comments are closed.