கர்கரே மரணம்: மறு விசாரணை கோரும் மனு ஒத்திவைப்பு

0

மஹாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்பு படையின் முன்னாள் தலைவர் ஹேமந்த் கர்கரே மரணம் குறித்து புதிய விசாரணை நடத்த வேண்டும் என்று மும்பை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை கோடைகால விடுமுறைக்கு பின்னர் எடுத்து கொள்ளப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த வழக்கில் பதில் தாக்கல் செய்வதற்கு முன்னர் தாங்கள் இதை குறித்து விவாதிக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து நீதிமன்றம் இந்த அறிவிப்பை வெளியிட்டது. பீகார் மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராதாகாந்த் யாதவ், மறு விசாணை கோரும் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மும்பை முன்னாள் காவல்துறை அதிகாரி எஸ்.எம். முஷ்ரிஃப் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் யாதவ் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்துத்துவ தீவிரவாத அமைப்பான அபிநவ் பாரத்தான் ஹேமந்த் கர்கரேயை கொலை செய்ய திட்டமிட்டதாக முஷ்ரிஃப் அப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 26, 2008ல் மும்பையில் தாக்குதல்கள் நடைபெற்ற சமயத்தில், உளவுத்துறையின் உதவியுடன் காமா மருத்துவமனையில் அபிநவ் பாரத் ஒரு தாக்குதலை நடத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு கர்கரே திட்டமிட்டே அனுப்பப்பட்டதாக யாதவ் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளார். அன்றைய தினம் விலே பார்லே பகுதியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பில் அபிநவ் பாரத்தை சேர்ந்த சிலர் இறந்ததாகவும் அதனை மறைப்பதற்கு மும்பை க்ரைம் பிரிவு முயற்சித்ததாகவும் ரதாகாந்த் யாதவ் தெரிவித்துள்ளார்.

Comments are closed.