கர்நாடகாவில் துப்பாக்கி தோட்டாக்களுடன் ஒருவர் கைது: கெளரி லங்கேஷ் கொலையில் தொடர்புடையவரா?

0

2015  ஆம் ஆண்டு ஹிந்து யுவ சேனா என்ற அமைப்பை துவங்கிய K.T.நவீன் குமார் என்பவரை, சட்டவிரோதமாக துப்பாக்கி குண்டுகள் வைத்திருந்த காரணத்தால் கர்நாடக குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்துள்ளது. இந்நிலையில் இவருக்கும் பிரபல பத்திரிகையாளர் கெளரி லங்கேஷின் கொலைக்கும் தொடர்பு இருக்குமா என்று சந்தேகிக்கப்படுகிறது.

மத்திய குற்றவியல் காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றின் பேரில் பெங்களுரு காவல்துறை, சிக்மகளுறு மாவட்டத்தை சேர்ந்த K.T.நவீன் குமார் என்பவரை கைது செய்துள்ளது. இவரிடம் இருந்து காவல்துறை .32 ரக துப்பாக்கித் தோட்டாக்கள் ஐந்திணை பறிமுதல் செய்துள்ளது. இது தொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் பத்து தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்த காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர்,

“குற்றம் சாட்டப்பட்டவர் தன்னிடம் உள்ள துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் குறித்து அவ்வப்போது பெருமை அடித்து வருபவர். ஆனால் அவர் மீது ஆயுத வியாபார வழக்கு எதுவும் இல்லை. இவர் வலதுசாரி இந்து அமைப்புகளின் தீவிர ஆதரவாளர். மேலும்  2015 ஆம் ஆண்டு ஹிந்து யுவ சேனா என்கிற அமைப்பை அவர் தொடங்கியுள்ளார்.”

என்று தெரிவித்துள்ளார். எனினும் தற்போதயை இந்த கைது கெளரி லங்கேஷ் கொலை வழக்கு தொடர்பானது அல்ல என்றும் அது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படும் என்றும் சிறப்பு புலனாய்வு பிரிவின் விசாரணை அதிகாரி M.N.அனுசெத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக மற்றொரு ஆயுத வியாபாரியான தாகிர் கைது செய்யப்பட்ட போதும் கெளரி லங்கேஷ் வழக்கு முடிவுற்றதாக கூறப்பட்டது. ஆனால் அவருக்கும் கெளரி லங்கேஷ் கொலைக்கும் தொடர்பில்லை என்று பின்னர் தெரியவந்தது. தற்போதைய இந்த கைதின் மூலம் கெளரி லங்கேஷின் கொலை வழக்கு தீர்க்கப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.