கர்நாடக முஸ்லிம் இளைஞர் கொலைவழக்கில் வி.ஹெச்.பி குண்டர்கள் கைது

0

கர்நாடகா மாநிலம் மடிக்கேரியில் திப்பு ஜெயந்தி கொண்டாடப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையை கலைக்க காவல்துறையினர் தடியடி மேற்கொண்டனர். இதிலிருந்து தப்பிக்க ஓடிய 67 வயதான டி.எஸ்.குட்டப்பா சுவர் ஏறி குதிக்கும் போது தவறி விழுந்து மரணமடைந்தார். இவர் கர்நாடக மாநில வி.ஹெச்.பி.யை (விஷ்வ இந்து பரிஷத்) சேர்ந்தவர்.

இவர் மரணத்திற்கு பழிதீர்க்க ஷாகுல் ஹமீத் என்ற 27 வயது இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது கொலை வழக்கை விசாரணை செய்த காவல் துறையினர் இவர் கொலையில் தொடர்புடைய நபர்களை கைது செய்துள்ளனர். ஹலேறி பகுதியை சேர்ந்த காவேரியப்பா, தேசூர் பகுதியை சேர்ந்த பீஷ்மா மற்றும் மடிக்கேரி பகுதியே சேர்ந்த ரமேஷ் ஆகிய இவர்கள் விஷ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குட்டப்பாவின் மரணத்திற்கு பழிவாங்கவே சாகுல் ஹமீதை இவர்கள் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு கார் மற்றும் .22 காலிபர் துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் நீதிமன்றம் முன் ஆஜராக்கப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

திப்பு ஜெயந்தியை தொடர்ந்து மடிக்கேரியில் ஏற்பட்ட பரபரப்பை அடுத்து சித்தபுராவில் உள்ள தனது வீட்டிற்கு செல்லும் வழியில் ஹமீத் சுட்டுக் கொல்லப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் இவர் .22 காலிபர் தோட்டா தாக்கி உயிரிழந்தார் என்பது தெரியவந்தது. அந்த தோட்டாவில் உள்ள தடயங்களை வைத்து விசாரணை செய்ததில் அது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பீஷ்மாவிற்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. இந்த துப்பாக்கியை 70000 ரூபாய் கொடுத்து அவர் கடந்த ஏப்ரல் மாதம் அவர் வாங்கியிருக்கிறார் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

Comments are closed.