கற்பழிக்கப்பட்டவரின் தந்தையை போலி வழக்கில் சிக்க வைக்க முயன்றதாக பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கார் மீது சிபிஐ வழக்கு

0

கற்பழிக்கப்பட்டவரின் தந்தையை போலி வழக்கில் சிக்க வைக்க முயன்றதாக பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கார் மீது சிபிஐ வழக்கு

பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார், இளம் பெண் ஒருவரை தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் தனது மகளுக்காக நியாயம் கேட்க வந்த கற்பழிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை தனது ஆதரவாளர்கள் உதவியுடன் காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொலை செய்யப்பட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அவர் கொல்லப்படுவதற்கு முன்னதாக ஆயுத தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் ஏப்ரல் 3 ஆம் தேதி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இவழக்கு தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் குறிப்பிட்ட நபர் மீது போலியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த காவல்துறையினர் குல்தீப் செங்காருடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

கடந்த புதன் கிழமை மக்கி காவல் நிலைய அதிகாரி அசோக் சிங் பதவ்ரியா மற்றும் காவல்துறை துணை ஆய்வாளர் காம்தா பிரசாத் சிங் ஆகியோரை, கொல்லப்பட்டவரை போலியாக ஆயுத தடுப்பு வழக்கில் சிக்க வைத்ததற்காக சிபிஐ கைது செய்தது. அவர்கள் மூன்று நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது கைது செய்யப்பட்ட இரண்டு காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் குறித்து விசாரிக்க குல்தீப் சிங்கை இரண்டு நாள் போலீஸ் காவலில் வைத்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மூன்றாம் தேதி, கற்பழிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மீது டிங்கு சிங் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆயுத தடுப்பு பிரிவு உட்பட பல பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கையை அசோக் சிங் மற்றும் காம்தா பிரசாத் முதலிய காவல்துறை அதிகாரிகள் பதிவு செய்தனர். ஆனால் சிபிஐ விசாரணையில் இந்த காவல்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டவரிடம் இருந்து ஆயுதங்கள் பெறப்பட்டதாக ஆவணங்களை போலியாக தயார் செய்ததை சிபிஐ கண்டறிந்தது. இந்த காவல்துறையினர் குறித்த அனைத்து ஆவணங்களையும் விசாரித்த சிபிஐ இவர்கள் குறிப்பிட்ட ஏப்ரல் மூன்றாம் தேதி டில்லியில் இருந்த குல்தீப் சிங் செங்காருடன் அடிக்கடி தொடர்பில் இருந்ததை கண்டறிந்துள்ளனர். கொல்லப்பட்டவர் மீது புகாரளித்த டிங்கு சிங்கின் தொலைபேசி அழைப்புத் தகவல்களும் அவர் குல்தீப் சிங் செங்காருடன் தொடர்பில் இருந்ததை தெரிவித்துள்ளது.

Comments are closed.