கற்பழிப்பு வழக்கில் போலிச் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என தீர்ப்பு: கலவரத்தில் 30 பேர் பலி

0

போலிச் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் தன்னை கற்பழித்துவிட்டார் என்று எழுதப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம் இந்த சர்ச்சை தொடங்கியது. அப்போதைய பிரதமர் வாஜ்பாயிற்கு எழுதப்பட்ட இந்த கடிதத்தில் சுமார் 40 பெண்களுடன் தானும் ராம் ரஹீம் சிங்கிற்கு சேவைகள் புரிந்து வந்ததாகவும் பின்னர் தான் சாத்வியாக மாறியதும் தன்னை குர்மீத் மிரட்டி பலவந்தமாக பல முறை கற்பழித்துவிட்டார் என்றும் குறிப்பிட்டிருந்தது. மேலும் தன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்றும் அவர் கூறியதையும் அந்தப்பெண் தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் தான் தன்னைப்போலவே மேலும் பல பெண்கள் குர்மீத் சிங்கினால் பாதிக்கப்பட்டுள்ளது தனக்கு தெரிந்தது என்றும் அதனால் தான் இந்த கடிதத்தை தான் எழுதுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட ஹரியானா நீதிமன்றம் இதனை 2002 ஆம் ஆண்டு CBI க்கு மாற்றியது. CBI இன் விசாரணையில் குர்மீத் சிங்கால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட இரண்டு பெண்கள் கண்டறியப்பட்டனர். இந்த இடைப்பட்ட காலத்தில் குர்மீதின் உதவியாளர் ஓட்டுனர் என்று பலர் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டனர். இதற்கு காரணம் இந்த வழக்கு என்று கருதப்பட்டது.

தற்போது இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிமன்றம் இவரை குற்றவாளி என்று கூறி தீர்பளித்துள்ளது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இநிலையில் இவரின் கைதையடுத்து வன்முறை நடைபெறலாம் என்று கருதப்பட்டதனால் பள்ளி கல்லூரி மற்றும் பல அலுவலகங்களுக்கு விடுமுரையளிக்கப்பட்டது, பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டனர்.

எதிர்பார்த்தது போலவே அவர் குற்றவாளி என்ற தீர்ப்பு வெளியானதும் அவரது ஆதரவாளர்கள் வன்முறை வெறியாட்டத்தில் இறங்கினர். பஞ்சாப், ஹரியானா, டில்லி, நொய்டா மற்றும் காசியாபாத் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற வன்முறையில் 30 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 250 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் காவல்துறை கண்காணிப்பாளர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், ஊடகத்தினர் உட்பட 60 காவலர்களும் அடக்கம்.

தீர்ப்பு அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே குர்மீத்தின் குண்டர்கள் அரசு வாகனங்களுக்கும், அரசு கட்டடங்களுக்கும் தீவைக்கத் தொடங்கினர். கண்ணீர்ப்புகை மூலம் காவல்துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்ச்சித்து தோல்வியடைந்தனர். இந்த தீர்ப்பை அடுத்து குர்மீத் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த Z+ பிரிவு பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது. தற்போது ரோதக்கில் உள்ள சிறப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள குர்மீத் சிங்கிற்கான தண்டனை வருகிற 28 ஆம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த தீர்ப்பின் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே குர்மீத் சிங்கின் ஆதரவாளர்கள் பஞ்ச்குல்லா தெருக்களில் குழுமினர். இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறும் என்ற தெரிந்தும் தேவையான முன்னேற்பாடுகள் எதையும் ஆளும் பாஜக அரசு செய்திருக்கவில்லை. மேலும் இந்த தீர்ப்பினால் 485 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பாக்பட் மாவட்ட மாஜிஸ்திரேட் அப்பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கியுள்ளார். தேரா சாச்சா சவுதா அமைப்பை சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறை சம்பவம் குறித்து பல எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து நிலைமையை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவராத மத்திய அரசை கண்டித்துள்ளனர்.

Comments are closed.