கல்வியில் முன்னேறியதால் தாக்கப்பட்ட தலித் மாணவர்

1

சமீபத்தில் பள்ளி மாணவர்கள் சிலர் சக மாணவன் ஒருவனை கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த மாணவர்களின் கொடூரச்செயலை கண்டித்த பலரும் குறிப்பிட்ட மாணவன் தாக்கப்படும் காரணம் அறியாதவர்களாக இருந்தனர்.

பீகாரின் முசஃபர்பூர் பகுதில் உள்ள கேந்திரிய வித்யாலயா அரசு பள்ளியில் தான் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. தாக்கப்படும் மாணவன் தலித் சமூகத்தை சேர்ந்தவன் என்று தற்போது தெரியவந்துள்ளது. தன்னுடன் படிக்கும் உயர்ஜாதி மாணவர்களை விட இவர் கல்வியில் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறுவது அந்த மாணவர்களுக்கு வெறுப்பை ஏற்ப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தான் இது போன்று தாக்கப்படுவது முதல் முறையல்ல என்றும் இது போன்று பலமுறை தான் தாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பள்ளி ஆசிரியரின் மகனான தான் கல்வியில் முன்னேற வேண்டும் என்பதே தன் தந்தையின் ஆசை என்றும் அதற்காக அவர் தன்னை தனது உறவினர்களுடன் முசஃபர்பூர் தங்கி கல்வி கற்று வைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். தான் பாடங்களில் அதிக மதிப்பெண் எடுப்பது தனக்கு வீட்டில் நல்ல பெயரை பெற்றுத் தந்தாலும் பள்ளியில் பல பிரச்சனைகளை அது தனக்கு ஏற்படுத்தியது என்று அவர் கூறியுள்ளார்.

தன்னை குறிப்பிட்ட வீடியோவில் தாக்கும் மாணவர்கள் இருவரும் சகோதர்கள் என்றும் அதில் ஒருவர் தனது வகுப்பிலும் மற்றொருவர் தனைவிட குறைந்த வகுப்பில் படித்து வருபவர் என்று அவர் கூறியுள்ளார். தன்னை தாக்கும் மாணவர் கடைசி இருக்கையில் இருப்பவர் என்றும் அவர் தேர்வில் ஜெயிக்க பல குறுக்குவழிகளை கையாண்டாலும் அவரால் அதிக மதிப்பெண் எடுக்க முடிவதில்லை. ஆனால் தான் முதல் இருக்கையில் இருந்து நல்ல மதிப்பெண்கள் பெறுவது அவருக்கு பிடிக்கவில்லை. மேலும் தான் ஒரு தலித் என்று தெரிந்ததும் அது அவருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்திவிட்டது என்று அவர் கூரியுள்ளார். இந்த மாணவர்கள் தனது முகத்தில் அடிக்கடி உமிழ்வார்கள் என்றும் தன்னை தாக்குவது அவர்களுக்கு சந்தோசத்தை ஏற்படுத்துகிறது என்று கூறி பிற மாணவர்களிடம் அதனை படம் பிடிக்க கூறினார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தான் இவ்வாறு தாக்கப்படுவது குறித்து தனது ஆசிரியரிடம் புகாரளித்தும் அந்த மாணவரின் தந்தை சமூகத்தில் அதிகாரம் உள்ளவர் என்பதால் அமைதியாக போகும்படி அவர் அறிவுறுத்தியதாக அம்மாணவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மாணவர்கள் குறித்து புகாரளித்தால் அவர்களின் தந்தையால் தன் குடும்பத்திற்கு ஏற்படும் தொந்தரவுகளை நினைத்து தான் அமைதியாகிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது தான் தாக்கப்படும் வீடியோ வைரலானதும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். குறிப்பிட வீடியோவில் அவர் தாக்கப்படுவது கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதியில் நடைபெற்றது என்றும் தான் தாக்கப்படும்போது அதனை தடுக்க யாரும் முன்வரவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இந்த வீடியோ குறித்து அறிந்த தனது தாத்தாவினால் அதனை பொறுத்துக்கொள்ள இயலவில்லை என்றும் அதனால் அவர் காவல்நிலையத்தில் புகாரளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருந்தும் தங்களை சிலர் இவ்வழக்கை கைவிடுமாறு மிரட்டி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது தான் பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டதாகவும் தனது இறுதி தேர்வு மார்ச் மாதம் இருப்பதகாவும் தெரிவித்த அவர் தற்போது தான் என்ன செய்யட்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இவர் இதனை பிரபல செய்தி நிறுவனமான NDTV க்கு கடிதம் மூலம் தேரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரை தொடர்ந்து அந்த இரண்டு மாணவர்கள் இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் ஆனந்த் தெரிவித்துள்ளார்.(ஆனால் அந்த மாணவர்களை பெயர் வெளியிடப்படவில்லை.)

மாணவன் தாக்கப்படும் காட்சி:

Discussion1 Comment

  1. பாசிசம் வேரூன்றி விட்டதை நிரூபிக்கும் செயல். நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை மீள் கட்டமைப்போம்.