கள்ளக்குழந்தையும் காவிக்குழந்தையும்

0

-தமீம்

இந்திய புத்தகத்தின் வரலாற்றுப் பக்கங்களில் மிக மோசமான வரலாற்றையும், துரோகத்திற்கு இலக்கணமாகவும் திகழ்ந்துகொண்டு இருக்கிறதென்றால் அது ஆர்.எஸ்.எஸ். என்பதில்லை ஐயமேதுமில்லை.  அதேபோல் உலக வரலாற்றில் இரத்தக்கறை படிந்த கரும்புள்ளி, அமெரிக்காவின் ஆயுதக் கிடங்கு, கள்ளக்குடியேற்றத்தின் மொத்த உருவம் இஸ்ரேல் என்பதிலும் மாற்றமேதுமில்லை.

“பலஸ்தீனம் என்பது ஒரே பூமிதான்.  அதுதான் நாடு.  அதைத்தான் அங்கீகரிக்க முடியும்; இஸ்ரேலை அங்கீகரிக்க முடியாது” என இஸ்ரேல் உருவாக்கப்பட்ட போது, அப்போதைய பிரதமர் நேரு அறிவித்து அமெரிக்காவிற்கு அதிர்ச்சி அளித்தார்.  அணிசேராமை என்ற வார்த்தைக்கு இலக்கணமாய் திகழ்ந்த இந்திய தேசம்,ஃ பலஸ்தீனில் இஸ்ரேலிய இராணுவத்தால் நிகழ்ந்த கொடூர நிகழ்வுகளை கண்டிக்கவும், ஃபலஸ்தீன் மக்களுக்கான ஆதரவு நிலைப்பாட்டையும் வெளிப்படுத்த தயங்கியதில்லை. ஃபலஸ்தீனத்திற்கான தூதரகத்தை தொடங்கிய அரபு அல்லாத முதல் ஜனநாயக நாடு இந்தியா. ஃபலஸ்தீன தலைவர் யாசர் அரபாத்தை வரவேற்று கௌரவித்தது இந்தியா. “இரு நாடுகளை  பிளவுபடுத்தி இன்னொரு இரத்தக்கோடு உருவாவதை உலகம் ஏற்கக்கூடாது” என காந்தி அறிவித்தார். இந்தியா 1950ல் இஸ்ரேலை அங்கீகரித்தாலும் அதனோடு எந்த வகையிலும் நட்பு பாராட்டவில்லை.

இந்திய மக்களையும் நாட்டையும் மதத்தின் அடிப்படையில்  பிளவு படுத்த வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ்.ஸின் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் சியோனிஸத்தின் பங்கு அளப்பறியது. இஸ்ரேலிய பயணத்தை இடைவிடாது கடைபிடித்த, ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் கருத்தாளமும் சியோனிச யூதர்களின் கருத்தாளமும் ஒரே நேர்கோட்டில் இருந்தன. 1967ம் ஆண்டு ஆர்கனைசர் பத்திரிகையில் சித்திரகுப்தர் என்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் எழுதிய கட்டுரையில் இஸ்ரேலும் இந்துக்களும் இணைந்து ஏன் அரபுக்களையும் அவர்களின் கூட்டாளியான பாகிஸ்தானையும் எதிர்கொள்ளக்கூடாது என்று கேள்வி எழுப்பினார். கலாச்சார  ரீதியிலும் சிந்தனை ரீதியிலும் யூதர்களும் பார்ப்பனர்களும் ஒன்றினைந்தே உள்ளனர்.

1999 முதல் 2004 வரையிலான பா.ஜ.க. ஆட்சி காலத்தில்தான் இஸ்ரேல் அதிபர் ஏரியல் ஷரோன் இந்தியா வந்தார். இந்தியாவிற்கு வருகை புரிந்த முதல் இஸ்ரேலிய அதிபர் ஷரோன். அதேபோன்று அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஷ்வந்த் சிங் 2000மாவது ஆண்டில் இஸ்ரேலுக்கு பயணம் செய்து பல ஒப்பந்தங்களையும் கையெழுத்திட்டார்

2014ஆம் ஆண்டு பா.ஜ.க. அரசு அரியணை ஏறியதிலிருந்து நமது தேசம் மதவாதிகளின் ஆக்டோபஸ் கரங்களில் சிக்குண்டு சர்வாதிகாரத்தின் பக்கம் சாய்ந்து வருகிறது. உலக அரங்கில் மோடி தன்னை கதாநாயகனாக சித்தரித்தாலும் பயங்கரவாதத்தின் பாதுகாவலன் என்பதனை செயல்பாடுகள் மூலம் அவ்வப்போது வெளிப்படுத்த தவறவில்லை. குஜராத் முதல்வராக மோடி இருந்தபோதே நிகழ்ந்த பல இஸ்ரேலிய தலைவர்களின் வருகையும், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இஸ்ரேலின் வியாபாரத்தை இந்திய சந்தையில் விற்க மோடியை ஒரு நல்ல வியாபாரியாக உருவாக்கின. 2002ம் ஆண்டில் குஜராத்தில் மோடி தலைமையில் நடத்தப்பட்ட  இன சுத்திகரிப்பில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஃபலஸ்தீன அப்பாவி மக்களுக்கு எதிராக இஸ்ரேல் பயன்படுத்திய அனைத்து யுக்திகளும் பயன்படுத்தப்பட்டன.

குஜராத் இன கலவரத்திற்குப் பின் பல நாடுகள் மோடிக்கு கருப்பு கொடி காட்டி தங்களின் நாட்டிற்கு வர தடை விதித்த பின்பும் இஸ்ரேல் வெளிப்படையாகவே மோடிக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது அனைவரும் அறிந்த விஷயம். இஸ்ரேலின் அழைப்பை ஏற்று 2006ம் ஆண்டு 5 நாள் சுற்றுப் பயணமாக இஸ்ரேல் சென்றார் மோடி.

உலக பயங்கரவாதியான இஸ்ரேல் 2014ஆம் ஆண்டு ஃபலஸ்தீனில் நிகழ்த்திய மிகக் கொடூர  தாக்குதலைக் கண்டித்து ஐ.நா. சபை 2015 ஜூலை 3ல் இஸ்ரேலுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்த போது 41 நாடுகள் ஆதரித்தாலும் இந்தியா கள்ள மௌனம் சாதித்து ஒதுங்கியது. அதை தொடர்ந்து 2016ல் இந்தியா வந்த இஸ்ரேல் ஜனாதிபதி ரூவென் ரிவ்ளின், இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளும் இனைந்து தீவிரவாத்தை எதிர்ப்பதாக அறிவித்தது மிகவும் அபத்தமாக இருந்ததை உண்மையில் தீவிரவாதத்தை எதிர்ப்பவர்கள் அறிவர். காரணம் உலக அரங்கில் தீவிரவாதத்தை உருவாக்கியவர்களும், இந்தியாவில் தீவிரவாதத்தை உருவாக்கியவர்களும் சேர்ந்து வெளியிட்ட அறிக்கை அது.

அதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி, இஸ்ரேலின் கொடூரத்தை அங்கீகரித்தவராய், தனது இஸ்ரேலிய பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார். அம்பானிக்கும் அதானிக்கும் மட்டுமல்ல இந்திய சந்தையை யூத தொழிலதிபர்களுக்கும் ஏற்றவாறு கட்டமைப்பதில் முனைப்போடு செயல்படுவோம் என்ற உறுதியை இப்பயணத்தின் மூலம் உண்மைபடுத்தியுள்ளார் மோடி. நாட்டின் தலைநகரில் விவசாயிகளை  நிர்வாணமாக்கிய மோடி இப்பயணத்தில் விவசாயம், தொழில்நுட்பம், தண்ணீர், சுற்றுலா போன்ற துறைகளில் இஸ்ரேலுடன் ஒத்துழைப்போடு செயல்படுவோம் என்று கூறுவது யார் நலனுக்காக என்பது நாடறியும்.

யூத சியோனிசத்தின் நிறுவனராக கருதப்படும் தியோடர் ஹெசில் கல்லறைக்கு சென்ற மோடி, கல்லறை மேல் உள்ள கருங்கல் பலகை மீது தனது கையை வைத்து உணர்வுப் பூர்வமாக அஞ்சலி செலுத்தி, இன அழிப்பிற்கான தனது விசுவாசத்தை பறைசாற்றியுள்ளார்.

இஸ்ரேல், ஃபலஸ்தீனத்தின் மேற்குக்கரையிலிருந்தும், காசாவிலிருந்தும் மிகப்பெரும் நீர்வள ஆதாரங்களை திருடிக் கொண்டிருக்கும் சூழலில் இஸ்ரேலுடன் நீர் மேலாண்மை ஒப்பந்தம், 4 கோடி அமெரிக்க டாலர் செலவில் தொழிலாய்வு, வளர்ச்சி மற்றும் தொழில்மேம்பாட்டு நிதி, விவசாயத்துறையில் மூன்றாண்டு ஒப்பந்த பணித்திட்டம், ஜியோ – லியோ ஆப்டிக்கல் லிங்க் மற்றும் சிறு செயற்கைக்கோள்களுக்கான இயக்க மின்விசை ஒப்பந்தம், இந்திய தொழில்நுணுக்க ஜவுளி உற்பத்தியாளரான கார்வார் – வால்ரோப்ஸ் என்று இந்திய நிறுவனமும் இஸ்ரேலைச் சேர்ந்த ஏரோடீ என்ற உற்பத்தி கம்பெனியும் சேர்ந்து ஒப்பந்தம் என பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார் மோடி.

இந்தியாவில் இன்று பசுவின் பெயரில் நாட்டில் நடக்கும் கொலைகளும், அநீதங்களும், இந்துத்துவ வெறுப்பு பிரச்சாரங்களும் இஸ்ரேலிய சகுனிகளின் பயிற்சியே.  ஜனநாயகத்தின் பெயரால் நடைபெறும் ஜனநாயக படுகொலைகள், வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகளின் தற்கொலைகள் என இந்துத்துவாவின் கொடூர முகம் நாட்டை வதைக்க, மோடி அரசின் இத்தகைய ஏகாதிபத்திய ஆதரவு மற்றும் பிற்போக்கு வெளியுறவுக் கொள்கைகள் இந்திய தேசத்தின் அரசியலமைப்பையும், ஜனநாயக கோட்பாட்டையும் அஸ்திவாரத்தோடு அசைத்துப் பார்க்க்ர்ம் செயல்கள். யூத சியோனிசமும், பார்ப்பண இந்துத்துவாவும் வெளிப்படையான கூட்டு என்பது உலக அமைதிக்கு விடப்பட்ட சவால்.

2006ல் காசாவில் மக்கள் தேர்ந்தெடுத்த ஹமாஸை ஏற்கமாட்டோம் என்று மக்களின் ஜனநாயகப் படுகொலையை செய்தன அமெரிக்காவும், இஸ்ரேலும். அதே படுகொலையைதான் இன்று பார்ப்பணமும் செய்கின்றது. அருணாசல பிரதேசத்தில் ஆட்சியை கவிழ்த்து, அரியணை ஏறியது, கோவா, மணிப்பூரில் பெரும்பான்மை மக்களின் ஆதரவை இழந்து ஆட்சி அமைத்தது, புதுச்சேரியில் ஆளுணர் மூலம் மக்களால் புறக்கணித்த நபர் உட்பட மூவரை மக்கள் பிரதிநிதியாக நியமித்தது, தமிழகத்தில் ஆளும் அ.இ.அ.தி.மு.க அரசை துண்டாக்கி ஐ.டி ரெய்டின் மூலம், பணபலத்தின் மூலமும் தனது கைப்பாவையாக வைத்திருப்பது, மேற்குவங்க முதல்வர் மம்தாவின் அதிகார வரம்பில் ஆளுணர் தலையிடுவது என நித்தம் அந்த ஜனநாயக படுகொலையைச் செய்துவருகின்றது பா.ஜ.க அரசு.

“காஃபிர்கள் அல்லாஹ்வின் ஜோதியை வாயால் ஊதி அணைத்துவிட நாடுகின்றனர். இந்நிராகரிப்போர் வெறுத்தபோதிலும் அல்லாஹ் தன் ஒளியை பிரகாசமாக்கி வைப்பான்” என்ற இறைவசனத்தில் இறைவன் நமக்கு அளிக்கும் வாக்கே இதுபோன்ற பார்ப்பன, யூத பயங்கரவாதிகளுக்கு வரலாறு அளித்த பதில்; இனியும் அளிக்கவிருக்கும் பதில். சத்தியத்திற்கெதிரான இவர்களின் படைகள் ஒருபோதும் வெற்றி கொள்ளப்போவதில்லை என்பதை வரலாறு பறைசாற்றும்; அது எவ்வளவு பெரிய ஆயுதம் தாங்கிய படையாக இருப்பினும் சரியே.

மதவாத மத்திய பாசிச அரசின் செயல்திட்டங்கள் அனைத்தும் தேசமக்கள் அனைவரையும் ஒரு அபாயகரமான சூழலுக்கு இட்டுச்செல்வதுடன், நாட்டு மக்கள் ஜனநாயகத்தின் மீதும், இந்திய அரசியலமைப்பின் மீதும் கொண்ட நம்பிக்கையை கேள்விக்குறியாக்குவதோடு,  தேசப்பிரதமரின் வெளிநாட்டு பயணம் ஏகாதிபத்தியத்தை ஏகோபித்த வரவேற்புக்கு உட்படுத்தவும், கார்ப்பரேட் கல்லறையில் சிறு,குறு விவசாயிகளை வதையிடவும், பாசிச சித்தாந்தத்தின் இரத்தக்கறையை பால்வண்ணச்சாயமிடவுமே வகைசெய்தது. இந்தியாவை நவீன காலணியாதிக்கத்துக்கு இட்டுசெல்லும் இத்தகைய செயல்கள் இறையாண்மை மற்றும் சமத்துவத்தை உயர்த்திப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவதோடு அதை நாட்டின் குடிமக்கள் அனைவரும் இங்கு இருக்கக்கூடிய வளங்களை பயன்படுத்தி ஒன்றினைந்து செயலாற்ற வேண்டிய நிர்பந்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சவாலை சாதிக்கும் சாணக்கியர்களாக நாம் உருவாக வேண்டும்; அத்தகைய சாணக்கியர்களை உருவாக்க வேண்டும்.

Comments are closed.