கஷ்மீரின்  குழந்தைகள் – பேசப்படாத பகுதிகள்

0

 – ஷஹீத்

உலகில் உக்கிரமான போர்கள் நடக்கும் பகுதிகளில் குழந்தைகள் சந்திக்கும் பல்வேறு உளவியல் சிக்கல்களை காஷ்மீரில் சிறுவர்கள் சந்திப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஜூலை மாதம் 8-ம்  நாள் புர்ஹான் வாணி கொல்லப்பட்டதிலிருந்து இன்று வரை அரசுக்கு எதிராக தினமும் ஒரு பேரணி நடைபெற்று வருகிறது. இதுவரை வீதிகளில் இறங்கி போராடிய 83 நபர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர் , 1600 நபர்கள் காயமடைந்திருப்பதாக உத்தியோகப்பூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால் நிதர்சனத்தில் இந்த எண்ணிக்கை பல மடங்காக இருக்கக்கூடும்.

நமது சென்னையின் மொத்த மக்கள் தொகையில் சரிபாதி அளவு உள்ள “கஷ்மீர் பள்ளத்தாக்கு” (Kashmir Valley) எனப்படும் பகுதியில் மட்டுமே இத்தனை இழப்புகள் எனில் அங்கு நடைபெருபவற்றை வெறும் அரசியல் கிளர்ச்சி என்று கடந்து போய்விட முடியாது. இத்தகைய தகவமைப்புகளில் வாழும் குழந்தைகளுடைய உளவியல் கூறுகள் எவ்வாறு இருக்கும். நிச்சியமாக அவர்கள் ஒவ்வொருவரும் வன்முறை அல்லது மரணம் போன்ற ஏதோ ஒரு இழப்புகளால் நேரடியாக தொடர்புபடுத்தப்பட்டு இருக்கின்றனர்.

சமீபத்திய அசாதாரண சூழ்நிலைகளால் மூடப்பட்ட பள்ளிகளில் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் திறக்கப்பட்டன. இத்தகைய பள்ளிகளில் குழந்தைகள் எழுத்துக்கள் கொண்டு விளையாடப்படும் விளையாட்டுகளில் கூட “Burhan” “Azadi” “Freedom”,  போன்றவையே அதிகம் இடம்பெறுவதும், அவர்கள் சாதாரண பேச்சு வழக்குகளில் கூட பாதிப்புகள், ஊரடங்கு உத்தரவு, எதிர்ப்பு போராட்டம் மற்றும் கல்லெறிதல் பற்றியே இருப்பதும் அதிக கவனத்தை பெறுகிறது. குழந்தைகளிடம் இருந்து தன்னெழுச்சியாக உருவாகும் இத்தகைய ஆழ்மனதின் வெளிப்பாடுகள்தான் கிளர்ச்சிகள் பற்றிய மனோ நிலைகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தும் ஊக்கியாக பயன்படுவதாக உளவியல் பகுப்பாய்வாளர்கள் நம்புகின்றனர்.

“எட்டு வயது ஜுனைத் அஹமத் பெல்லட் குண்டுகள் மூலம் ராணுவத்தால் தாக்கப்பட்ட அன்று மாலையில் நவாபசாரில் உள்ள தன் வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த காவல்துறை வாகனத்தில் இருந்த காவலர்கள் அவ்விடத்தில் குழுமியிருந்தவர்களைக் காரணமில்லாமல் அடித்து விரட்டினர். நடப்பதைச் சுதாரித்து ஜுனைத் ஓடுவதற்கு முன்பாகவே அவனை நோக்கி, அவனது வயதையும் பாராமல், பெல்லட் குண்டுகளால் தாக்கினர்.” என்கிறார் ஜுனைதின் உறவினர் ஒருவர்.

“ஜுனைதின் நெஞ்சுப்பகுதியில் சுடப்பட்ட குண்டுகள் அவனது நுரையீரலைத் தாக்கின. ஜுனைத் சிறிது தூரத்தில் நின்றிருந்ததால் பாதிப்பு அதிகமில்லை“  என்கிறார் ஜுனைதின் மருத்துவர்.

”ஜுனைத் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்ரீ மஹாராஜா ஹரிசிங் மருத்துவமனையில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 933 பெல்லட்டால் தாக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் 60 முதல் 70 வரையிலானார் பதினைந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆவர். 440 பேர் கண்களில் பாதிக்கப்பட்டுள்ளனர். 250 பேர் இரண்டு முறை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டனர். பெரியவர்களைக் காட்டிலும் சிறுவர்களுக்கு மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளுக்கு அதிகத் தேவையும் சிரமமும் உள்ளன என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜூலை 14-ம் நாள் மருத்துவமனையில் சுயநினைவு தப்பிய நிலையில் அனுமதிக்கப்பட்ட இஷா மாலிக்கின் வயது வெறும் நான்கு. பெல்லட் குண்டுகளால் பாதிக்கப்பட்டு கண் பார்வை பறிபோன நிலையில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தையின் நிலை ஒட்டுமொத்த மருத்துவ பணியாட்களையும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

தொடர்ச்சியாக 35 முதல் 40 மணி நேரம் வரை வேலை செய்ய நேர்ந்ததாக கூறும் “ஆப்தமாலஜிஸ்ட்” துறையின் மூத்த மருத்துவர் ஹீனா, தான் தன்னுடைய அறைக்குள் முடங்கிய படி அழ நேர்ந்ததாக தெரிவிக்கிறார்.

குழந்தைகள் நேரடியாக பாதிக்கப்படும் காட்சிகள் மருத்துவர்களுக்கும் மனோ ரீதியான சிக்கல்களை உருவாக்குவாக்கி இருக்கின்றன. இளம் அரசு மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று உலக சுகாதார நிறுவனத்திடம் கோரிக்கை மனு ஒன்றை சமர்த்திருக்கின்றனர் அதில் சிகிச்சை காலங்களில் எதிர்கொள்ளும் குழந்தைகள் தொடர்புடைய அசாதாரண வழக்குகள் மூலம் தாங்கள் மன அதிர்வுக்கு உள்ளாவதாக தெரிவித்திருக்கின்றனர்.

ஆகஸ்ட் 11-ம் தேதி அன்று ஸ்ரீ மகாராஜா ஹரிசிங் மருத்துவமனையின் ஊழியர்கள் , மருத்துவர்கள், நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் இணைந்து பெல்லட் குண்டுகள் மூலம் தாக்கபடுவதற்கு எதிரான தர்னாவையும் நடத்தியிருக்கின்றனர். அத்தனைக்கு பிறகும் ரானுவம் பெல்லட் குண்டுகள் உபயோகிப்பதை நிறுத்திக்கொள்ளவில்லை என்பதன் மூலம் ராணுவத்திற்கு பின்புலத்தில் மறைமுகமான அரசியல் நிர்பந்தம் ஒன்று இருப்பதாகவே உணர்ந்துகொள்ள முடிகிறது.

ரஹீல் முஸ்தாக் என்ற உளவியல் நிபுணர் மூலம் செய்யப்பட மருத்துவ அறிக்கை ஒன்று புதியதொரு அதிர்ச்சிகரமான தகவலை முன்வைக்கிறது . அதாவது கஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் Post-traumatic Stress Disorder (PTSD) எனும் உளவியல் சிக்கலில் பாதிக்கப்படிருப்பதாக கூறுகிறது.

Post-traumatic Stress Disorder (PTSD) என்பது அதிர்ச்சிகரமான சம்பவங்கள் மற்றும் காட்சிகளை காணும் குழந்தைகளின் உளவியல் தன்மைகளில் யதார்த்த நிலைக்கு மாற்றமான சிக்கல்கள் ஏற்படும் ஒரு நிலையாகும். அதாவது 49% சதவிகித கஷ்மீர் குழந்தைகள் குடும்பத்தினரின் மரணம் , படுகொலை, கைது , சித்திரவதை, துப்பாக்கிச்சூடு , உடல் ரீதியாக தாக்கப்படுதல், பெல்லட் குண்டு தாக்குதல், பார்வை இழப்பு , உறவினர்களின் மரணம் போன்றவற்றை நேரடியாக பார்க்கவும், அனுபவிக்கவும் செய்வதாக அந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

இது போன்ற நெருக்கடியான துயரங்கள் சூழ்ந்த தகவமைப்பின் மூலம் பெரியவர்களுக்கு கூட மன அதிர்வுகள் உருவாக எல்லாவிதமான வாய்ப்புகள் இருக்கிறது என மருத்துவம் தெரிவிக்கும் அதே வேளையில் காஷ்மீரின் குழந்தைகள் பற்றிய கவலை நம் முன் கேள்விக்குட்படுத்தப்படுகிறது.

Comments are closed.