கஷ்மீரில் 8 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற காவல்துறை அதிகாரி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வழக்கறிஞர்கள் எதிர்ப்பு

0

கஷ்மீரில் 8 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற காவல்துறை அதிகாரி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வழக்கறிஞர்கள் எதிர்ப்பு

கஷ்மீரில் 8 வயது சிறுமியை கடத்தி மூன்று நாட்களாக அடைத்து வைத்து காவல்துறை அதிகாரி தீபக் கஜுரியா  என்பவர் கற்பழித்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து இவர் காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் கற்பழிப்பு குற்றவாளியான அவருக்கு ஆதரவாக பாஜக மற்றும் வலதுசாரி இந்து அமைப்புகள் போராட்டங்களிலும்  ஈடுபட்டு வருகின்றன. இந்த போராட்டங்களோடு தற்போது ஜம்மு உயர் நீதிமன்ற பார் கவுன்சிலும் கற்பழிப்பு குற்றவாளிக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கியுள்ளது.

இவர்கள் தீபக் கஜுரியா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை எதிர்த்தும், ரோஹிங்கிய முஸ்லிம் அகதிகளை நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் பங்களாதேசை சேர்ந்தவர்களை நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

முன்னதாக தீபக் கஜுரியாவினால் கற்பழித்து கொல்லப்பட்ட சிறுமி ஆசிஃபா வின் உடலை அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான நிலத்தில் அடக்கம் செய்ய வலது சாரி இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இன்னும் தங்களது எதிர்ப்பை மீறி சிறுமியின் உடல் அங்கே அடக்கம் செய்யப்பட்டால் மத மோதல்கள் வெடிக்கும் என்றும் மிரட்டல் விடுத்தனர் என்று All Tribal Coordination Committee அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆசிஃபா கொலை தொடர்பான விசாரணையில், இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட கொலை என்றும் இது அப்பகுதியில் வசிக்கும் பார்வால் நாடோடிகள் மத்தியில் அச்சத்தை விதைத்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் நோக்கத்தோடு நடத்தப்பட்ட கொலை என்றும் தெரியவந்துள்ளது. ஆசிஃபா கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக கதுவாவில் உள்ள ரசானா கிராமத்தின் கோவிலில் அடைத்து வைக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்தக் கோவிலில் ஆசிஃபா வின் தலைமுடியை தடவியல் நிபுணர்கள் கண்டறிந்ததுள்ளனர்.

இருந்தும் கடந்த ஏப்ரல் 4 முதல் ஜம்மு பார் கவுன்சில் கடையடைப்பிலும் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறது. இது குறித்து ஜம்மு உயர் நீதிமன்ற பார் கவுன்சிலின் தலைவர் B.S.ஸ்லாதியா கூறுகையில், “பல அரசியல் கட்சிகளுடனான எங்களது சந்திப்பிற்கு பிறகு ஏப்ரல் 11 ஆம் தேதி ரோஹிங்கிய அகதிகளை வெளியேற்ற வற்புறுத்தியும், பங்களாதேஷினரை நாடு கடத்த கூறியும் ஒட்டு மொத்த ஜம்மு பகுதியில் முழு அடைப்பு நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.

இவர்களின் இந்த போராட்டத்தால் ஜம்மு உயர் நீதிமன்றத்தில் ஆறாவது நாளாக பணிகள் பாதிப்படைந்துள்ளது. மேலும் தங்களின் இந்த போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply