கஷ்மீரி இளைஞரை மனித கேடையமாக ஜீப்பில் கட்டி வைத்த மேஜருக்கு விருது வழங்கிய இராணுவம்

0

கஷ்மீரில் அப்பாவி இளைஞர் ஒருவரை இராணுவ வாகனத்தில் மனித கேடையமாக கட்டி வைத்த இராணுவ மேஜர் நிதின் கோகோய் –க்கு கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான விருதை இந்த இராணுவ தளபதி பிபின் ரவாத் வழங்கியுள்ளார். இந்த தகவலை இராணுவ செய்தித் தொடர்பாளர் அமன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீரி இளைஞர் ஒருவர் இராணுவ வாகனத்தில் மனித கேடையமாக கட்டப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. இதனையடுத்து இந்த நிகழ்வு குறித்து முன்னணி ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டனர். அப்பாவி பொதுமக்களை மனித கேடையமாக பயன்படுத்துவது போர் குற்றச் செயலாகும். இந்நிலையில் இராணுவத்தின் இந்த செயலுக்கு அப்பகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது. தற்போது இந்த செயலில் ஈடுபட்ட மேஜருக்கு இராணுவத் தளபதி, விருது வழங்கி கெளரவித்திருப்பது இராணுவத்தின் நோக்கங்கள் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

தற்போது மேஜர் கோகோய்க்கு வழங்கப்பட்ட பாராட்டு அட்டை சிறந்த சேவைகளுக்காக வழங்கப்படும் மிகவும் உயர்ந்த பாராட்டாக கருதப்படுவதாகும்.

இந்த சம்பவத்தில் பாதுகாப்பு படையினரால் ஜீப்பில் கட்டப்பட்ட இளைஞர் ஃபரூக் அஹமத் தர், தான் நான்கு மணி நேரமாக சுமார் 25 கிலோமீட்டர் தூரம் ஜீப்பின் முன் கட்டப்பட்ட நிலையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டதாக கூறியுள்ளார். இதனால் அவரது கைகள் வீக்கமடைந்து பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.