கஷ்மீர்:கண் முன் நடந்த கொடூரத்தை விவரிக்கும் காவல்துறை அதிகாரி

0

21 வயதான ரியாஸ் அஹமத் ஸ்ரீநகர் GMC கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வந்தவர். சிறு விடுமுறையில் தன் சொந்த ஊருக்கு திரும்பியவர் எல்லை பாதுகாப்பு படை அதிகாரியால் மனிதாபிமானமற்ற முறையில் அருகில் இருந்து (பாயிண்ட் பிளான்க்) சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் செய்த குற்றம் ராணுவ அதிகாரி ஒருவரின் கண்களை நிமிர்ந்து பார்த்து நியாயம் கேட்டதுதான்.

இந்த சம்பவம் நடந்தது ஜனவரி 27, 1992ல். உயிரிழந்த ரியாஸ் அகமதின் குடும்பத்தினர் நீதியின் மீது நம்பிக்கையற்று போய்விட்டனர். தங்கள் மகன் ஊர் திரும்பியிருக்காவிட்டால் தனது மற்ற சகோதரர்கள் போல அவரும் ஒரு மருத்துவர் ஆகியிருப்பார் என்று அழுது புலம்புகின்றனர்.

ரியாஸ் அகமதின் உறவினரான யாகூப் கண்ஜ்வால் அந்த சம்பவத்தை நினைவுகூரும் போது கூறுகையில், ரியாஸ் இடிக்கப்பட்ட எங்கள் வீட்டின் இடிபாடுகளுக்கு மேல் நின்று ராணுவ அதிகாரி ஒருவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அங்கேயே அவரை அநியாயமாக எல்லை பாதுகாப்பு படை அதிகாரி சுட்டுக்கொன்றார். தான் ஒரு காவல்துறை அதிகாரியாக பசி புரிந்த போதிலும் தன்னால் எதுவும் செய்ய இயலவில்லை என்று கூறுகிறார் யாகூப்.

ஓய்வு பெற்ற காவல்துறை மூத்த அதிகாரியான யாகூப் நடந்தவைகளை விவரிக்கையில், “1992, ஜனவரி 24 இரவில் எங்கள் வீடு எல்லை பாதுகாப்பு படையின் 179 பட்டாலியனை சேர்ந்தவர்களால் தீவைக்கப்பட்டது. எங்கள் வீட்டை தீவைத்தவர்கள் அந்த தீயினை அணைக்க தீயணைப்பு வீரர்களைக் கூட நெருங்க விடவில்லை. இந்த சம்பவம் நடந்த மறுநாள் தங்கள் வீட்டின் நிலையை பார்க்க தானும், ரியாஸ் மற்றும் மற்றொரு நண்பரும் சென்ற போது தங்கள் வீடு முற்றிலுமாக அழிக்கப்பட்டிருந்ததை கண்டதாக யாகூப் கூறுகிறார்.

ரியாசும் அவரது நண்பரும் எரிக்கப்பட்ட வீட்டினை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது எல்லை பாதுகாப்பு படையின் 179 பட்டாலியன் அங்கு மீண்டும் வந்தது என்றும் தங்களை அச்சுறுத்த அவர்கள் வானத்தை நோக்கி சுட்டதாகவும் கூறியுள்ளார்.

பின்னர் அங்க பட்டாலியனின் தளபதி உடைந்த வீட்டினுள் சென்றார். அங்கு ரியாஸ் உடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. ரியாசிடம் அவ்வீட்டை எரித்தது தீவிரவாதிகள் என்று அவர் கூறினார். இதனை ரியாஸ் மறுத்து கூறி எல்லை பாதுகாப்பு படைதான் தங்கள் வீட்டை எரித்தது என்று கூற தனது படையினரிடம் ரியாசை சுட உத்தரவிட்டார் அந்த அதிகாரி. அடுத்தகணம் தலையிலும் மார்பிலும் பலமுறை குண்டு பாய்ந்து எங்கள் கண்முன்பே இறந்து போனார் ரியாஸ்.. என்கிறார் யாகூப்.

இவ்வளவும் அங்கு இருந்த ஒரு காவல்துறை குழுவின் முன்னிலையிலே நடந்தது. ஆனாலும் அவர்கள் எதுவும் செய்யவில்லை. ரியாஸ் கொலை செய்யப்பட்டதன் பின்னர் அவரது உடலை எடுத்துக்கொண்டு சோப்பூர் காவல்நிலையம் சென்று அங்கு ரியாசை சுட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர் ரமேஷ் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தேன் . இதற்கு எதிராக எல்லை பாதுகாப்பு படையும் எதிர் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தது.

தங்கள் முதல் தகவல் அறிக்கையில் ரியாஸிடம் கைத்துப்பாக்கி ஒன்று இருந்ததாக கூறியது எல்லை பாதுகாப்பு படை. ரியாஸின் கொலைக்கு பின்னர் எங்களுடன் அன்று இருந்த நண்பர் இஜாசை தங்கள் காவலில் எடுத்துச் சென்று கடுமையாக சித்திரவதை செய்தது எல்லை பாதுகாப்பு படை. அவரை சித்திரவதை செய்து ரியாஸ் கைத்துப்பாக்கி வைத்திருந்ததாக ஒப்புக்கொள்ள வைத்தனர். இது நடந்து ஒரு வருடத்திலேயே அந்த சித்திரவதையின் தாக்கத்தால் இஜாசும் உயிரிழந்தார்.

2004 இல் இருந்து 12 வருடங்களாக இந்த வழக்கை நாங்கள் கவனித்து வருகிறோம். எப்பொழுதெல்லாம் உள்துறை அமைச்சகத்திற்கு இந்த வழக்கு செல்கிறதோ அப்போதெல்லாம் காவல் துறை முதல் தகவல் அறிக்கையில் ஏதாவது ஒரு குறை கூறிவிடுவார்கள். இப்போது அந்த வழக்கிற்கு என்ன ஆனது என்று தெரியவில்லை என்று யாகூப் கூறுகிறார்.

தான் ஒரு காவல்துறை அதிகாரி என்றும் இந்த கொடூரக் கொலைக்கு தான் ஒரு சாட்சி என்றும் கூறும் யாகூப், தங்களுக்கு எவ்வாறு நீதி மறுக்கப்படுகின்றது என்றும் கொலைகாரர்கள் எவ்வாறு சுதந்திரமாக சுற்றித்திரிகிரார்கள் என்றும் தனக்கு தெரியும் என்று யாகூப் கூறுகிறார்.

இது போன்று ஓராயிரம் ரியாஸ்கள் கஷ்மீரில் அன்றாடம் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு நீதியும் அன்றிலிருந்து இன்று வரை மறுக்கப்பட்டுக்கொண்டே வருகிறது.


 

Comments are closed.