கஷ்மீர்: ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மீது பெல்லட் குண்டு தாக்குதல்

0

கஷ்மீர்: ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மீது பெல்லட் குண்டு தாக்குதல்

கஷ்மீரில் காயமடைந்தவர்களையும் நோயாளிகளையும் மருத்துவமனை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனர் குலாம் முஹம்மத் சோஃபி மீது பெல்லட் குண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர் பாதுகாப்பு படையினர்.
உடனடி மருத்துவ உதவி பெறவேண்டிய நிலையில் இருந்த இரண்டு பேரை தனது ஆம்புலன்ஸில் ஏற்றி ஸ்ரீநகரின் இரு வேறு மருத்துவமனைகளுக்கு எடுத்துச் சென்றார் குலாம். ஆனால் அடுத்த அரைமணி நேரத்தில் அவருக்கே பெல்லட் குண்டு காயங்களுக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தீவிர வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையையும் எலும்பு முறிவால் பாதிக்கப்பட்ட மற்றொருவரையும் தனது ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்றார் குலாம். அவர் ஸ்ரீநகரின் சஃபா கடல் பகுதியை அடைந்ததும் CRPF ஐ சேர்ந்த ஒருவர் அவரை நோக்கி அவரது வாகன ஜன்னல் வழியாக சுட்டுள்ளார். அதில் அவரது வாகன கண்ணாடி உடைந்து அவரது வலது கை முழுக்க பெல்லட் தாக்கியும் கண்ணாடி துண்டுகளாலும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. வலது கையில் காயம் ஏற்பட்டு இரத்தம் கொட்டியும் தனது இடது கை உதவியுடன் வாகனத்தை ஓட்டி நோயாளிகளை மருத்துவமனையில் சேர்த்துள்ளார் குலாம்.

300 பெல்லட்கள் தனது உடலை தாக்கியும் இரண்டு கிலோமீட்டர் தூரம் வாகனத்தை செலுத்தியுள்ளார் குலாம். தான் தாக்கப்படும் போது தனது வாகனத்தில் ஆம்புலன்ஸ் உள்ளே நோயாளிகள் இருக்கிறார்கள் என்பதை குறித்து அவசர சைரன் ஒலித்துக் கொண்டிருந்தது என்றும் இருந்தும் தன்னை நோக்கி CRPF ஐ சேர்ந்தவர் சுட்டார் என்று குலாம் கூறியுள்ளார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டில் இருந்து ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

குலாமிற்கு சிகிச்சை கொடுத்துவரும் மருத்துவர்கள் அவரது உடலில் உள்ள அனைத்து பெல்லட்களையும் நீக்குவது குறித்து ஆலோசித்துவருகின்றனர். அவரது இரத்த நாளங்களை பெல்லட் குண்டுகள் தாக்கியிருந்தால் மட்டும் அவற்றை அகற்றவது என்று முடிவெடுத்துள்ளனர். தனது கைகளை பார்க்கும் போது தனக்கு வருத்தமாக இருக்கிறது என்றும் இனி வரும் காலங்களில் தன் கைகளை தன்னால் மடக்க முடியுமா என்று கூட தெரியவில்லை என்றும் குலாம் கூறியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த CRPF, குலாம் மீது தாக்குதல் நடத்திய CRPF யை சேர்ந்தவர் தற்காலிக பனி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளது.

Comments are closed.