கஷ்மீர்: இராணுவத்தால் அடித்துக் கொல்லப்பட்ட கல்லூரி விரிவுரையாளர்

0

கஷ்மீர் கிரியு பம்போர் பகுதியில் வசித்து வந்தவர் ஷபிர் அஹமத் மோங்கு. இவர் கடந்த புதன்கிழமை இன்னும் பல இளைஞர்களோடு தங்களது வீட்டில் இருந்து இராணுவத்தால் இழுத்துச் செல்லப்பட்டார். பின்னர் இவர் பம்போர் மருத்துவமனை ஒன்றிற்கு பிணமாக எடுத்துச் செல்லப்பட்டார் என்று அங்கு பணியாற்றும் மூத்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இவரின் மரணத்துடன் கஷ்மீர் பதற்றத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 71 ஆக உயர்ந்துள்ளது.

அப்பகுதி மக்கள் இது குறித்து கூறுகையில், இராணுவம் தங்களது வீடுகளை சூறையாடியதாகவும் பல இளைஞர்களை தங்களது வீடுகளில் இருந்து கைது செய்து இழுத்துச் சென்றதாகவும் அதில் ஷபிர் அஹமத் பிணமாகவும் மற்றவர்கள் பல காயங்களுடனும் திரும்பியுள்ளனர் என்று கூயுள்ளனர். தற்போது கொல்லப்பட்ட ஷபிர் அஹமத் ஒரு கல்லூரி விரிவுரையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

“மற்ற இளைஞர்களுடன் ஷபிர் அஹமதும் ராணுவத்தால் கண்மூடித்தனமாக அடித்து தனது வீட்டில் இருந்து இழுத்து செல்லப்பட்டார்” என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

இரவு 11:30 மணிக்கு இவர்களை இராணுவம் இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் 1 மணி அளவில் ஷபிரின் உடலை கலக்டர் அலுவலகம் வந்து பெற்றுச் செல்லுமாறு கூறப்படுகிறது. மேலும் கொல்லப்பட்ட ஷபிரின் சகோதரரும் தீவிர காயங்களுடன் SMHS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார் என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

“இது நரகம் போல உள்ளது. எங்களது வீடுகளில் இராணுவம் புகுந்து ஆண்கள் பெண்கள் என்று பாராமல் வீட்டில் உள்ளவர்களைத் தாக்கி, இளைஞர்களை இழுத்துச் சென்று தங்களது முகாம்களில் வைத்து சித்தரவதை செய்துள்ளனர்” என்று ஒருவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஷபீரின் கொலையை அடுத்து மீண்டும் அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளன.

Comments are closed.