கஷ்மீர் இளைஞரை மனித கேடயமாக்கிய மேஜர் கோகோய் மீது குற்றப்பதிவு தாக்கல்

0

கஷ்மீர் இளைஞரை மனித கேடயமாக்கிய மேஜர் கோகோய் மீது குற்றப்பதிவு தாக்கல்

கஷ்மீர் இளைஞர் ஃபரூக் அஹமத் தர் என்பவரை மனித கேடையமாக இராணுவ வாகனத்தில் கட்டி வைத்து ரோந்து சென்ற இராணுவ அதிகாரி மேஜர் கோகோய், கடந்த மே மாதம் 23 ஆம் தேதி இளம் பெண் ஒருவருடன் விடுதி ஒன்றில் அரை எடுத்து தங்க முயற்சித்து காவல்துறையால் கைது செய்யப்பட்டார். (பார்க்க செய்தி) இதன் மீது நடத்தப்பட்ட விசாரணையில் தற்போது அவர் மீது குற்றப்பதிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோகோய் மீதான இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம், இவர் பணியாற்றும் நேரத்தில் பணியிடத்தை விட்டு வெளியே இருந்தது மற்றும் இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்தது ஆகிய இரு பிரிவுகளில் இவர் மீது குற்றப்பதிவு செய்துள்ளது.

இது குறித்து மேஜர் கோகோய்யால் மனித கேடையமாக்கப்பட்ட இளைஞர் ஃபரூக் அஹமத் தர் கருத்து தெரிவிக்கையில், “இறைவனுக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். எனது வாழ்க்கையை சீரழித்துவிட்ட அந்த நபர் மீது இறுதியாக இறைவனின் கோபம் இறங்கியுள்ளது. நீதி செலுத்துவதில் இறைவனுக்கென்று ஒரு வழி உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

சம்பவத்தன்று ஃபரூக் அஹமத் தர் வாக்களிக்க வாக்குச்சாவடி சென்றுவிட்டு தனது சகோதரி வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். குறிப்பிட்ட அந்த தேர்தலில் மக்கள் யாரும் வாக்களிக்க வேண்டாம் என்று கஷ்மீர் பிரிவினைவாதிகள் கூறியிருந்தனர். இந்நிலையில் இதை மீறி வாக்களிக்க சென்ற அஹமத் தர்ரை அவரது சகோதரி வீட்டிற்கு செல்லும் வழியில் பிடித்த இராணுவம், மேஜர் கோகோய்யின் உத்தரவின் பேரில் கடுமையாக தாக்கி ஜீப்பின் முன் பகுதியில் மனித கேடையமாக கட்டி வைத்தது. இதற்கு காரணம் அவர் இராணுவ வாகனங்களின் மேல் கல் எறிந்தார் என்று கூறி அவர் மீது குற்றம் சுமத்தியது. இந்த சம்பவத்தால் தனது வாழ்க்கையை சீர்குழைந்து போனது என்று தெரிவித்த அஹமத் தர், பிரிவினைவாதிகளின் பேச்சை எதிர்த்து தான் வாக்களிக்க சென்றதால் தனது அக்கம் பக்கத்தினர் தன்னை ஒதுக்கி வைத்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

அன்று நடந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில், “மேஜர் கோகோய் அதிகார கர்வம் பிடித்தவராக இருந்தார். அவர், தன்னை எனது படைப்பாளியாகவே நினைத்துக்கொண்டார்.” என்று தெரிவித்துள்ளார். இன்னும், “என்னுடைய வாழ்வை நான் எப்போது மீண்டும் துவக்க முடியும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இறுதியில் எனக்கு இறைவன் நீதி வழங்கியதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனது அழிவிற்கு காரணமான நபர் இறுதியில் அவமானப் படுத்தப்பட்டுவிட்டார்.” என்று தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கை போல் தனது வழக்கையும் இறக்கத்தின் அடிப்படையில் அணுகி நீதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தவர் தனது வழக்கிலும் நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Comments are closed.