கஷ்மீர்: கொல்லப்பட தீவிரவாதியின் போலி புகைப்படத்தை வெளியிட்ட செய்தி நிறுவனங்கள்

0

கஷ்மீர்: கொல்லப்பட தீவிரவாதியின் போலி புகைப்படத்தை வெளியிட்ட செய்தி நிறுவனங்கள்

கஷ்மீர் புல்வாமாவில் CRPF வீரர்கள் மீது பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட எதிர் தாக்குதலில் ஜைஷ்-ஈ-முஹம்மத் இயக்க தளபதி கம்ரன் என்ற அப்துல் ரஷீத் காசி என்பவர் இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த தாக்குதல் 12 மணி நேரம் நடத்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் குறித்து செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மென்பொருள் கொண்டு போலியாக உருவாக்கப்பட்ட இவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்தியா டுடே தளத்தில் வெளியான இந்த புகைப்படம் பின்னர் ABP News, Zee News, India TV, Outlook மற்றும் The Economic Times ஆகிய செய்தி நிறுவனங்களின் பக்கங்களிலும் வெளியிடப்பட்டது. இந்த புகைப்படம் குறித்து Alt News செய்தித் தளத்திற்கு கிடைத்த செய்தி ஒன்றின் மூலம் இந்த புகைப்படம் போலியானது என்று தெரியவந்துள்ளது.

இந்த செய்தி தளங்கள் வெளியிட்ட புகைப்படமானது அமெரிக்க பாப் கலைஞர் ஜான் பான் ஜோவி உடலுடன் இராணுவத்தால் கொல்லப்பட்ட அப்துல் ரஷீத் காசியின் தலையை இணைத்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை Alt News சரி பார்க்கையில் குறிப்பிட்ட அந்த புகைப்படம் Pinterest தளத்தில் உள்ளதும் இந்த இரு புகைப்படங்களும் அச்சு அசலாக ஒத்துப்போவதும் தெரியவந்துள்ளது.

இத்துடன் அமேசான் நிறுவனத்தின் Police Suit Photo Frame Maker எனும் செயலியில் இந்த புகைப்படம் கிடைப்பதும் இந்த செயலி மூலம் எந்த ஒருவரின் தலையையும் குறிப்பிட்ட காவல்துறை உடுப்பில் பொருந்துமாறு எளிதில் செய்ய முடியும் என்றும் தெரியவந்துள்ளது. இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவெனில் இந்த புகைப்படத்தை வெளியிட்ட ஒரு செய்தி நிறுவனம் கூட அதனை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுவதற்கு முன்பாக அப்புகைப்படத்தின் உண்மைத்தன்மையை குறித்து ஆராயவில்லை என்பது தான்.

முன்னதாக புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட இந்திய இராணுவ வீரர்கள் புகைப்படத்திற்குப் பதிலாக விடுதலை புலிகளின் புகைப்படத்திற்கு காவல்துறை முதற்கொண்டு பலரும் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.