கஷ்மீர் பதற்றத்தால் BSNL காட்டில் மழை

0

கஷ்மீர் பள்ளத்தாக்கில் புர்ஹான் வாணி கொல்லப்பட்டதை தொடர்ந்து பெரும் பதற்றம் நிகழ்ந்து வருகிறது. கஷ்மீர் மக்கள் மீது பாதுகாப்பு அதிகாரிகள் கட்டவிழ்த்து விடும் கொடூரங்களை இந்திய மக்கள் மட்டுமல்லாது சர்வதேச சமூகத்தினரும் கவனித்து வருகின்றனர், எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். கஷ்மீர் நிலைமை இப்படி இருக்க இந்த சூழ்நிலை இந்திய தொலை தொடர்பு நிறுவனமான BSNL நிறுவனத்திற்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது.

கஷ்மீர் பதற்றத்தினால் அங்குள்ள அனைத்து தொலை தொடர்பு வசதிகளும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன. வெளியுலக செய்திகள் என்னவென்று தெரியாமலும் கஷ்மீரின் செய்திகளை வெளியுலகத்திற்கு தெரியப்படுத்துவதிலும் பெரும் சவால்களை அங்குள்ள மக்கள் சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் BSNL நிறுவனம் தவிர அனைத்து நிறுவனங்களின் தொலைதொடர்பு சேவை அரசு உத்தரவின் பேரில் கஷ்மீரில் முடக்கப்பட்டுள்ளது. இதனால் BSNL இணைப்பு பெறுவதற்கு மக்கள் அணியணியாய் திரள்கிறார்கள்.

முன்னதாக கஷ்மீர் பள்ளத்தாக்கில் பணியில் இருக்கும் பாதுகாப்பு படையினர், காவல்துறையினர், மற்றும் அரசு பணியாளர்களுக்கு மட்டும் போஸ்ட் பெய்ட் சிம் கார்டுகளை வழங்க வேண்டும் என்று BSNL நிறுவனத்திற்கு அரசு தரப்பில் உத்தரவு பிரப்பிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அரசின் இந்த கட்டுப்பாடு கஷ்மீரில் பெருமளவில் பணம் சம்பாதிக்கும் வழிமுறையாக மாறியுள்ளது.

கஷ்மீரில் 500 ரூபாய் மதிப்பிலான புதிய BSNL போஸ்ட் பெய்ட் சிம் கார்ட் ஒன்று 2000 இல் இருந்து 3000 ரூபாய் வரை விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன. தங்களின் உற்றார் உறவினருடன் தொடர்பு கொள்வதற்காக எந்த விலையும் கொடுக்க கஷ்மீர் மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்றும் இதனை தங்களுக்கு சாதகாமாக சிலர் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்

Comments are closed.